பக்கம் எண் :

30

Tamil Virtual University

இவ்வுறவுகள் நெடுநாள் நிலைக்காதென்று இருவருக்கும் தெரியும். பிரிவச்சமும் அதில் கலந்திருக்கும். அமெரிக்க நாட்டுப் பாடல்களில் பெண்கள் பாடும் வேட்டைக்காரன் பாடல்கள (Cow boys song) விறு விறுப்பான உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அதற்கு அணைபோலக் காணப்படும். பிரிவச்சத்தையும் சித்தரிக்கின்றன. இப் பெண்கள், வேட்டைக்காரர்களின் துணிவையும் உணர்ச்சி வெள்ளத்தையும் விரும்பினார்களேயன்றி, சுயநலத்தையும் கொள்ளை குணத்தையும் அல்ல.

எனவே நமது நாட்டுப் பாடகர்களும், கொள்ளைக்காரர்களின் துணிச்சலைக் கண்டு வியப்புறுகிறார்களேயன்றி அவர்களைத் தாம் பின்பற்றக்கூடிய வீரர்களாக கற்பனை செய்து காட்டவில்லை.

இதுவரை கிராமக் குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாடோடிப் பாடல்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் காட்டுகின்றன என்று பார்த்தோம். இனி சாவினால் இறந்தவரது குடும்பத்தாருக்கு ஏற்படும் விளைவுகளை நாடோடிப்பாடல்கள் எப்படிக் காட்டுகின்றனவென்று பார்ப்போம். இறந்தவர் மீது நெருங்கிய உறவினர் பாடும் பாடல் ஒப்பாரி எனப்படும். தாலாட்டைப் போலவே ஒப்பாரியும் தமிழ் நாட்டுப் பெண்களின் படைப்பாகும். தாலாட்டு தாயன்பின் வடிவம். தாய்க்குலத்தின் படைப்பு தாலாட்டு. ஆண்மகன் ஒருவன் இறந்தால் குடும்பத்தைத் தாங்கி நின்ற நடுத் தூண் சாய்ந்தது போல, அவன் மனைவி பாதுகாப்பு இழக்கிறாள். சமூக நன்மைகளை இழக்கிறாள். அவளது வருங்காலமே வறண்டு போகிறது. ஒருவர் இறந்தால் மனைவிக்கு விளைவது இழப்புத் துன்பம் மட்டுமல்ல, வருங்காலம் முழுவதிலும் அவள் கவலைப்பட வேண்டியதாகிறது. அவனுடைய சாவோடு கணவன், மனைவி உறவு அறுந்து போனாலும், குடும்ப உறவுகளில் அவளுடைய பொறுப்பு அதிகமாகிறது. கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவளுடைய குழந்தைகள் வளரும் வரையிலும், அவர்களுடைய உடைமைகளைக் காக்க அவள் போராட வேண்டியிருக்கிறது. மலடியாக இருந்தாலோ, அவள் வீட்டு வேலைக்காரியின் அந்தஸ்திலும் தாழ்ந்து விடுவாள். கணவன் வீட்டிலிருக்கும் சிறு உரிமை கூட தாய் வீட்டில் கிடையாது. அங்கு அண்ணிகளின் ஆதிக்கம் நடைபெறும். எனவே கணவனை இழந்த மனைவியின் பிரச்னை, சொந்தப் பிரச்னையாக மட்டுமில்லாமல் பெண்களின் சொத்துரிமைப் பிரச்னையோடும் தொடர்புடையதாய் இருக்கிறது.