|
இச்சிக்கலான
உணர்ச்சிகளனைத்தையும் மனைவி ஒப்பாரிகளில் காணலாம். நெல்லை ஜில்லாவில்
பாடப்படும் ஒப்பாரிகள் வாழ்க்கையின் பல அம்சங்களையும் சுட்டிக்காட்டி மனைவியின்
தீர்க்க முடியாத பிரச்னைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
தாய், தந்தை இறக்கும்போது
மகள் பாடும் ஒப்பாரிகள் முக்கியமாக சொத்துரிமைப் பிரச்சினையும், தாய் தந்தையர்
காலத்திற்குப் பின் பிறந்த வீட்டில் உரிமையின்றிப் போவதையும் சொல்லுகின்றன.
மதினி, நாத்தனார் உறவுகளையும் இந்த அடிப்படையிலே அவை காட்டுகின்றன.
இவ்வொப்பாரிகளில்
காணப்படும் உணர்ச்சிகளை நல்லதங்காள் கதையிலும் காணலாம். அண்ணனைப் பற்றி
பாடும் ஒப்பாரிகள் மிகக் குறைவு. பொதுவாகத் தந்தை இறந்தபோது பாடும் பாடல்களையே
அவை ஒத்திருக்கும்.
குழந்தை இறந்து
தாய் புலம்புவது மிகவும் சோகமானது. அவற்றிலும் பிரிவுத் துன்பத்தோடு சொத்துரிமை
பெற இருந்த மகன் போய்விட்டானே என்ற உணர்வும் சேர்ந்து வரும் துக்கவுணர்வை ஆங்கிலத்தில்
Elegiac
Spirit என்று சொல்லுவார்கள்,
ஆங்கில நாட்டுப் பாடல்களில் இவ்வுணர்ச்சி மிகுதியாக உண்டு. வாழ்க்கையில்
ஏமாற்றமடைந்த மக்களுடைய உணர்ச்சி துக்கமாகத் தோன்றும். ஒப்பாரியிலும்
பெண்ணினத்தின் சமூக நிலைமை முழுவதும் ஆணின் வாழ்க்கையைப் பொறுத்திருப்பதால்,
அவனுடைய சாவுக்குப் பின் ஏக்கம் தோன்றுகிறது. மனைவி இறந்தால் கணவன் துக்கப்படுகிறான்.
ஆனால், ஏக்கம் கொள்வதில்லை. ஆண் சார்பு கொண்டு வாழ்க்கை நடத்தும்
பெண்களின் சமூக நிலைமைதான் இந்த ஏக்கத்திற்குக் காரணம்,
இத்
தொகுப்பில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களையும்,
அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் கிடைத்த
மட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலும் வழங்கி
வருபவை. மற்ற மாவட்டங்களிலுள்ள நாட்டுப் பாடல்கள் கிடைத்தால் நமது கிராம
மக்களின் கலையையும் பண்பாட்டையும் கண்ணோட்டத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும்.
மற்ற மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்கள் நாட்டுப் பாடல்களைச் சேகரிக்கும் முயற்சியில்
ஈடுபட்டார்களானால், தமிழ் நாட்டின் பல படைப்புக்களைத் தமிழகம் அறிய வழி செய்யலாம்.
|