பக்கம் எண் :

33

Tamil Virtual University
அறிமுகம்

1, S.S. போத்தையா: இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் பெரும்பாலானவை இவர் சேகரித்து அனுப்பியவை. இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களில் அம்பாப்பாட்டு, கோணங்கி பாட்டு போன்ற அபூர்வப் பாடல்களை இவர் சேகரித்து அனுப்பியுள்ளார். இவர் என் பழைய மாணவர். தங்கம்மாள்புரத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாடல்களைச் சேகரிக்க இவருக்கு உதவியவர்கள்:

  மேல் மந்தை - பெத்தையா
மீனாட்சிபுரம் - வித்துவான் ராமசாமி
உச்சிநத்தம்- கே. ராமசாமி
உச்சிநத்தம் - நாகம்மாள் முதலியோர்

2. S.M. கார்க்கி: இவர் சிவகிரியைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக் கலைஞர், கணீரென்ற குரலில் நாட்டுப் பாடல்களைப் பாடும் திறமை படைத்தவர். சிவகிரி வட்டாரத்தில் கிராம மக்கள் பாடும் நாட்டுப் பாடல்கள் பலவற்றைச் சேகரித்து அனுப்பியுள்ளார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல அவர் சேகரித்து அனுப்பியவையே. சிவகாசிக் கலகத்தைப் பற்றியும், செந்தட்டிக் காளை வரலாறு பற்றியும் இத்தொகுப்பில் வெளியாகும் அபூர்வமான பலபாடல்கள் அவர் அனுப்பி வைத்தவை.

3. M.P.M. ராஜவேலு: இவர் தூத்துக்குடிக்கருகிலுள்ள மீளவிட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடி கடற்கரையில் வாழும் மக்கள் வாழ்க்கையும், பனை மரக் காடுகளின் நடுவிலுள்ள சிற்றூர்களில் வாழும் மக்களது வாழ்க்கையையும் சித்திரிக்கும் பாடல்கள் பலவற்றையும் திரட்டி அனுப்பியுள்ளார்.

4. குமாரி P. சொர்ணம்: பி.ஏ, முதல் வருட வகுப்பில் படிக்கும் மாணவி. ஒப்பாரிப் பாடல்கள் சிலவும், தாலாட்டுப் பாடல்கள் சிலவும், மாரியம்மன் பாடலொன்றும் தனது தாயாரிடம் கேட்டு எழுதி அனுப்பி வைத்தார். இவர் எனது பழைய மாணவி.

மேற்குறித்த நால்வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

5. கவிஞர் S.S .சடையப்பன்: தருமபுரி, அரூர் தாலுக்காவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர். நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை மாவட்டத்தில் காணப்படும் தப்பை போன்ற தோற்கருவியை இவர் உபவாத்தியமாகப் பயன் படுத்துகிறார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல இவர் சேகரித்து அனுப்பியவை. தெய்வம், காதல், குடும்பம் ஆகிய பகுதிகளிலும் இவர் திரட்டி அனுப்பியுள்ள பாடல்கள் இடம் பெறுகின்றன.

6. கு. சின்னப்ப பாரதி: இவர் சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சேர்ந்த பரமத்தி என்னும் ஊரைச் சேர்ந்தவர். பல கவிதைகளும், சிறு கதைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சேகரித்தனுப்பிய கொங்கு நாட்டுப் பாடல்கள் பல இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றை உதவியவர்களின் பெயர்கள் பாடலுக்கு அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

7. வாழப்பாடி சந்திரன்: இவர் ஓர் ஓவியர் ; எழுத்தாளரும் கூட. சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர். மலை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். அவர்கள் பாடும் பாடல்களைச் சேகரிக்க முயன்று வருகிறார்.

8. மங்கை: முதல் தொகுப்பின் குறிப்புரைகள், ஆய்வுரைகளை எழுதத் துணை செய்தவர். நாட்டுப் பாடல்களை தொகுப்பதற்கும், அவற்றை வகைப் படுத்துவதற்கும் உழைத்தவர். சேகரித்தவர்களோடு கடிதப் போக்குவரத்து நடத்தி வட்டார வழக்குகளைப் பற்றியும் சமூகவியல் பழக்கங்கள் பற்றியும் அறிந்து நூலில் எழுதியவர். ஆராய்ச்சியிலும், தமிழாராய்ச்சி நிறுவனம் மார்ச்சு 26, 27ந் தேதிகளில் நடத்தியநாட்டுப்புற இலக்கிய கருத்தரங்கிற்கும் கட்டுரைகள் எழுதியவர்.

9. நா. வானமாமலை: 15 ஆண்டுகளாக நாட்டுப்புற இயல் தொகுப்பாளராகவும், ஆய்வாளாராகவும் பணிபுரிகிறார். நியூ செஞ்சுரி வெளியீட்டாளர்கள் இத் துறையில் இவரது நூல்கள் மூன்றை வெளியிட்டுள்ளார்கள். மதுரைப் பல்கலைக்கழகம் இவர் தொகுத்து, ஆராய்ச்சிக் குறிப்புகள், முகவுரை எழுதிய ஆறு நாட்டுப்புறக் கதைப் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள். திராவிட மொழியியல் கழகம் (கேரளா) இவரை நாட்டுப்புறவியல் முதுநிலை ஆய்வாளராக ஓராண்டிற்கு(1965-66) நியமித்தது. இவர் பதவிக்காலத்தில் ஆய்வுகள் நிகழ்த்தி (Fellowship thesis) ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். பல நாட்டுப்புறவியல் கருத்தரங்குகளில், கட்டுரைகளைப் படித்தும், தலைமை வகித்தும் பணிபுரிந்துள்ளார். தமிழாராய்ச்சி நிறுவனம் (அடையாறு) நடத்திய நாட்டுப்புற இலக்கியக் கருத்தரங்கில் Keynote paper படித்தும், ஒரு அமர்வுக்குத் தலைமை வகித்தும் பங்குப் பெற்றார். ஆராய்ச்சி, தாமரை, Social Scientist, Folk Lore, Nova Orientalani (செக் மொழி) முதலிய பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.