|
அராபியர்கள் கடற்கரை எந்த அரசின் ஆதிக்கத்திலிருந்ததோ,
அவ்வரசர்களைச் சந்தித்து தங்களுடைய வாணிப உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயன்றனர்.
கடற்கரை ஆதிக்கம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை நாயக்க மன்னர்கள்,
ராமநாதபுரம் சேதுபதிகள் ஆகிய மன்னர்களின் கைக்கு மாறி மாறி வந்தது. ஆயினும் அராபிய
வியாபாரிகளுக்கும் கடற்கரை மக்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு தீர்ந்தபாடில்லை.
இம் முரண்பாடுகள் பெரும் போராட்டமாக மாறிற்று. அவர்களிடையே
நடந்த மிகப் பெரும்போர் ஒன்றைப் பற்றி ‘ஜான் நியூ காவ்’ என்னும் டச்சு வியாபாரி
கீழ்வருமாறு எழுதியுள்ளார்
‘அராபிய வியாபாரிகள் பரதவரது மூக்கையும், காதையும் வெட்டியெறிந்துவிட்டனர்.
பரதவர்கள், பெரும் கோபமுற்று படை திரட்டி பழிதீர்க்கக் கிளம்பினார்கள். முதல்
போரில் அராபிய வியாபாரிகள் சிலர் சிறைப்பட்டனர். அவர்களது மூக்குகளையும் காதுகளையும்
அரிந்துவிட்டு அவர்களை விடுதலை செய்து அனுப்பிவிட்டனர். இந்த அவமானத்தைப் பொறுக்கமாட்டாத
அராபியர்கள் முப்பதினாயிரம் வீரர்கள் கொண்ட படை ஒன்றைத் திரட்டி தூத்துக்குடிக்கருகில்
பாடியிறங்கினர். ஐயாயிரம் பரதவர்கள் ஆயுதம் தாங்கி அராபியரின் படையைத் தாக்கி ஏழாயிரம்
படை வீரர்களைக் கொன்றுகுவித்தனர். அவர்களுடைய படை சிதறி ஓடிற்று. இந்த வெற்றிக்குப்
பின்னர் பரதவர்கள் கடற்கரை ஓரமாக இருந்த பகுதிகள் அனைத்திலும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்.
அராபிய வியாபாரிகள் செலுத்திய வரியைத் தாங்களே விசுவனாத நாயக்கருக்குச் செலுத்துவதாக
ஒப்புக் கொண்டனர்.
ஆனால்
கப்பல் வலிமை அவர்களுக்கு இல்லாததால் முத்தையும்
சங்கையும் எடுத்தாலும் அது விலையாகும் இடங்களுக்குக் கொண்டு சென்று
விற்க அவர்களுக்கு வழியில்லை. நாயக்க மன்னர்களுக்கு வரிசெலுத்த அவர்களால் முடியவில்லை.
வரி பாக்கிக்காக அரசர் உத்தரவினால் பல பரதவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
சிலர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.
|