|
மேற்குத் கடற்கரையில் 1540 ஆண்டு முதலாக போர்த்துக்கீசியர்கள்
கடற்கரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை பரதவர்கள் அறிவார்கள். படகோட்டிகள்
சிலருக்கு அவர்களோடு வாணிபத் தொடர்பு உண்டு. போர்த்துக்கீசியரிடம் பெரிய கப்பல்கள்
இருப்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டால்,
தங்களுடைய பொருள்களை அவர்களுக்கு விற்று அவர்களுடைய உதவியால் தங்களது கஷ்டங்களிலிருந்து
தப்பலாம் என்று எண்ணினார்கள். சில தலைவர்கள் கோவாவிற்குச் சென்று போர்த்துக்கீசிய
அதிகாரிகளையும், கத்தோலிக்கச் சாமியார்களையும் அழைத்து வந்தனர். 1533-ம் ஆண்டில்
போர்த்துக்கீசியர் கப்பல் படையோடு வந்து கிழக்கு கடற்கரையிலுள்ள துறைமுகப் பட்டினங்களைக்
கைப்பற்றிக் கொண்டனர். பரதவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஞானஸ்நானம் பெற்றனர்.
பூனைக்குத் தப்பியோடி புலிவாயில் மாட்டிக் கொண்டது போல பரதவர் நிலையும் ஆயிற்று.
போர்த்துக்கீசியர் அராபியர்களை விட மோசமாகப் பரதவர்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.
ஒரே மதத்தைச் சேர்ந்தோராயினும், போர்த்துக்கீசியர்கள் கொள்ளைக்காரர்தான் என்பதை
பரதவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருவருக்குமிடையே பெரும் போராட்டம் மூள்வதற்கு
முன்பாக போர்த்துக்கீசியர் அவர்களோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். இதன்படி மணப்பாறை,
ஆலந்துலா, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு என்ற
ஏழு துறைமுகங்களிலும் ஏற்றுமதி செய்யும் உரிமையைப் போர்த்துக்கீசியர் பெற்றனர். ஆண்டுதோறும்
அவர்கள் ஒரு தொகையும், தங்கள் வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகக் கப்பமாகச் செலுத்தினர்.
கடற்கரைத் தலைவர்கள் சங்கு குளிப்பையும் முத்துச் சலாபத்தையும் தங்கள் தகுதிக்கு ஏற்ற
முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்.
மதுரை நாயக்கர்கள்
கப்பற்படை பலமில்லாததால் போர்த்துக்கீசியர்
நடவடிக்கைகளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல்
இருந்தது. அதன் பின்னர், டச்சுக்காரருடைய
போட்டி ஏற்பட்டதற்குப் பிறகு நிலைமை மாறியது.
போத்த்துக்கீசியரின் உரிமைகளை டச்சுக்காரர்கள்
கொண்டாடத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்குக்
கப்பல் வலிமை மட்டும்தான் இருந்தது. முதலில்
அவர்கள் பரதவர் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது.
பரதவர்கள் கத்தோலிக்கர்கள்
;
டச்சுக்காரர்கள் பிராட்டஸ்டெண்டுகள். காலம்
செல்லச் செல்ல வெளிநாட்டு வியாபாரத்திற்கு
டச்சுக் கம்பெனிகளே சாதனமாக இருந்தபடியால்
அவர்களோடு வாணிபத் தொடர்பு கொள்ள வேண்டிய
அவசியம் பரதவர்களுக்கு ஏற்பட்டது.
|