பிறந்த வீட்டில்
நடந்தது
பெண்ணின் தாய் தந்தையர் இறந்து விட்டனர். பிறந்த வீட்டில்
அண்ணணும் மதினியும் வாழ்கிறார்கள். அண்ணன் ஆதரவாக இருந்தாலும் மதினி கடுமையாக
இருக்கிறாள். தாய் தந்தையர் இருக்கும்பொழுதே மதினிக்கு இவள் வீட்டிற்கு வருவது
பிடிக்காது. தாய் தந்தையர் மறைவுக்குப் பிறகு அவ்வீட்டில் என்ன மதிப்பிருக்கும் என்று
அவள் எண்ணிப் பார்க்கிறாள். அண்ணன் வேலையாக வெளியே போய்விடுவார். மதினிதான்
வீட்டிலிருப்பாள். அவள் தன் மீது அன்பு காட்டுவாளா என்று எண்ணிப் பார்க்கிறாள். இவ்வெண்ணங்களெல்லாம்
பெற்றோரை இழந்த துன்பத்தோடு கலந்து ஒப்பாரியாக உருவாகிறது.
கம்பு விளைஞ்சிருக்கும்
காலியுமே சாஞ்சிருக்கும்-நான்
கரிக்குருவி வேஷங் கொண்டு
காலியுமே அண்டினா
கருணையண்ணன் பெண்டாட்டி
காதத்துக் கொரு கல்லெடுத்து
கடக்க விரட்டி விட்டாள்.
கருணையண்ணன் கண்டு விட்டா
கான மயிலின்னு
கழுத்தோ டணைச்சிடுவார்
கழுத்து முத்தம் தந்திடுவார்
சொகுசான சீமையிலே
சோளம் விளைஞ்சிருக்கும்
தோகையுமே சாஞ்சிருக்கும்
தோக்குருவி வேஷம் கொண்டு
தோகையில் அண்டினாலும்
துரைமார் பெண்டாட்டி
தோட்டம் ஒரு கல்லெடுத்து
தூரத் தொரத்தி விட்டாள்
துரைமார் கண்டு விட்டா
தோளோடணைத்து
தோள் முத்தம் தந்திடுவார்.
வட்டார வழக்கு:
காலி-ஆடு, மாடுகள்
; தோகை-கதிர்
;
துரைமார்-சகோதரர்கள்
; தொரத்தி-துரத்தி(பேச்சு).
உதவியவர்
:
செல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம். |
|