பக்கம் எண் :

56

Tamil Virtual University

பஞ்சமும் மழையும்

பஞ்சத்தில் ஆடு, மாடு, நகை, நட்டு எல்லாம் விற்றாகி விட்டது. காடு தேடிப் போய் கிடக்கிற இலை தழைகளை அவித்துத் தின்னும் நிலைமை வந்து விட்டது. கம்பு விதைத்து மண்ணோடு மண்ணாகிக் கிடைக்கிறது. மழையின் ரேகை சிறிதும் காணோம். மக்கள் உள்ளம் வெதும்பி வருணதேவனிடம் முறையிட்டுக் கொள்கிறார்கள்.

வருண தேவன் கருணையால், மழை பொழியத் தொடங்குகிறது, மின்னல் மின்ன இடி இடித்து மழை பெய்யும் போது பூமி குளிர்கிறது. மழையில் நனைந்து கொண்டே உழவர்கள் மழையை வரவேற்கிறார்கள்.

  ஆடு வித்து, மாடு வித்து
ஐயோ வருண தேவா !
அத்தனையும் கூட வித்து
ஐயோ வருண தேவா !
காது கடுக்குவித்து
ஐயோ வருண தேவா
கை வளையல் கூடவித்து
ஐயோ வருண தேவா !
இச் சிக்காய் தின்ன பஞ்சம்
ஐயோ வருண தேவா !
இன்னும் தெளியலையே
ஐயோ வருண தேவா !
காரைக்காய்த் தின்ன மக்கள்
ஐயோ வருண தேவா !
காதடைச்சு செத்த மக்கள்
ஐயோ வருண தேவா !
மக்க வெதச்ச கம்பு
மச்சு வந்து சேரணுமே !
ஓடி வெதச்ச கம்பு
ஊடுவந்து சேரணுமே
கலப்பை பிடிக்குந் தம்பி
கை சோந்து நிக்கிறாங்க !
அதுக்கே மனமிரங்கு
ஐயோ வருண தேவா !
ஏர் பிடிக்குந் தம்பி யெல்லாம்
எண்ணப்பட்டு நிக்கிறாங்க
அதுக்கே இறங்க வேணும்
ஐயோ வருண தேவா !
பேயுதையா பேயுது
பேய் மழையும் பேயுது
ஊசி போல காலிறங்கி
உலகமெங்கும் பேயுது
உலக மெங்கும் பேஞ்ச மழை
ஊரிலெங்கும் பேயலே
பாசி போல காலிறங்கி
பட்டணமே பேயுது
பட்டணமே பேஞ்ச மழை,
பட்டியிலே பேயிலே
துட்டு போல மின்னி
சீமையெங்கும் பேயுது
சீமையெங்கும் பெஞ்ச மழை
செல்ல மழை பேயுது.

வட்டார வழக்கு: வித்து - விற்று ; கடுக்கு - கடுக்கன்; ஊடு - வீடு.

உதவியவர் : பாவாயி
சேகரித்தவர் : கு. சின்னப்பபாரதி

இடம் :
செருக்கலைப்பாளையம்,
புதுப்பாளையம்.