பக்கம் எண் :

55

Tamil Virtual University

மழையும் பஞ்சமும்

மழை பொழியவில்லையே!

மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில் பல நாட்கள் பூசை செய்தும் மழை பெய்யாது போய் விடும். அப்பொழுது மன வேதனையோடு மக்கள் நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். அவர்கள் கண்ணீரைக் கண்டு நாராயணன் இளகி மழையைப் பொழிவான் என்பது மக்களது நம்பிக்கை. மழையின் தோற்றத்தைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் இன்று பல விவசாயிகளுக்குத் தெரியாது.

  ஒருநாள் பூசை செஞ்சேன்
நாராயணா, ஒரு
ஒளவு மழை பெய்யலியே
நாராயணா !
ஒளவு பேயாமே நாராயணா
மொளைச்ச
ஒருபயிரும் காஞ்சு போச்சே
நாராயணா !
மூணு நாளாப் பூசை செஞ்சேன்
நாராயணா ! ஒரு
முத்து மழை பேயலியே
நாராயணா
முத்து செடி காஞ்சு போச்சே
நாராயணா,
அஞ்சு நாளாப் பூசை செஞ்சேன்
நாராயணா ஒரு
ஆடி மழை பேயலியே
நாராயணா !
ஆடி மழை பேயாமல்
நாராயணா !
ஆரியமெல்லாம் காஞ்சு போச்சே
நாராயணா !

வட்டார வழக்கு: ஒளவு-உழவு ; காஞ்சு - காய்ந்து ; முத்து செடி - அழகான செடி ; ஆரிய - நாடு.

சேகரித்தவர் :
S.சடையப்பன்

இடம் :
கொங்கவேம்பு,அரூர் வட்டம்
தருமபுரி மாவட்டம்.