பக்கம் எண் :

58

Tamil Virtual University

மானம் விடிவதெப்போ?

பருவ மழையின்றி வானம் பொய்த்து விட்டால் ஏற்படும் உண்மையான தாக்குதலுக்கு எல்லோரையும் விட முதலில் பலியாகிறவன், மண்ணை நம்பி நிற்கும் விவசாயிதான். மழையைக் கண்டால் அவனுக்கு தெய்வத்தைக் கண்டது போல். பசித்த வயிற்றில் பால் வார்த்தது போல்.

மழை பொய்த்து விட்டால் வருண தேவனுக்குப் பொங்கல் வைப்பார்கள். கோழி பலி கொடுப்பார்கள். நிலவுபொழியும் இரவில் கன்னிப் பெண்கள் உப்பில்லாத கூழ் குடித்து பிள்ளையார் சிலையைப் பிடுங்கி கரைத்த சாணியை அதன் மேலே ஊற்றி வைப்பார்கள். மழைக் கடவுளை வேண்ட வருண பகவான் மழை பெய்து பிள்ளையாரைச் சுத்தப்படுத்துவதாக ஐதிகம். மழை பெய்த பின் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பார்கள்,

அப்படி மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.

  பூமியை நம்பி
புத்திரரைத் தேடி வந்தோம்,
பூமி பலியெடுக்க
புத்திரர் பரதேசம்,
மானத்தை நம்பி
மக்களைத் தேடி வந்தோம்
மானம் பலியெடுக்க
மக்களெல்லாம் பரதேசம்
ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம்
பின்னப் பட்டுநிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ணதேவா
மேழி பிடிக்கும் தம்பியெல்லாம்
முகஞ் சோந்து நிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ண தேவா,
காட்டுத் தழை பறித்து
கையெ்ல்லாம் கொப்புளங்கள்
கடி மழை பெய்யவில்லை
கொப்புளங்கள் ஆறவில்லை.
வேலித் தழைபறித்து
விரலெல்லாம் கொப்புளங்கள்
விரைந்து மழை பெய்யவில்லை
வருத்தங்கள் தீரவில்லை,
மானம் விடிவதெப்போ,
எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?
ஓடி வெதச்ச கம்பு
ஐயோ ! வருண தேவா
ஊடுவந்து சேரலையே
பாடி வெதச்ச கம்பு
ஐயோ வருண தேவா
பானைவந்து சேரலையே.

உதவியவர் : முத்துசாமி
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி

இடம் :
வாழநாயக்கன் பாளையம்,
சேலம் மாவட்டம்.