பக்கம் எண் :

71

Tamil Virtual University

 

ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.

அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.

அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்

இவ்வாறு தாய் குடும்பத் தொழிலின் பெருமையைப் பாடுவாள். சர்க்கார் உத்தியோகம் மிக மேன்மையானது என்ற நம்பிக்கை இங்கே வெளியிப்படுகிறது.

தந்தையின் பயணத்தைச் சொல்லுகிற தாலாட்டும், வேட்டையைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், திருவிழாக்களைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், தாய் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும் எந்த விஷயமும் தாலாட்டில் பொருளாகச் சேர்க்கப்படக் கூடும்.

தாலாட்டு குழந்தைப் பாசத்தை முதன்மைப்படுத்துவதாயினும், சமூகச் சித்திரம் என்னும் பின்னணியில்தான் பல்வேறு வகைப்பட்ட பின்னல்களாக எழுகின்றன.

இப்பாடல்கள் தாய்மாரின் செல்வநிலை, ஜாதி இவை பொறுத்து வேறுபடும்.