பக்கம் எண் :

Nagakumara Kavium
- 1 -
நாககுமார காவியம்

முதல் சருக்கம்

காப்பு

மணியுநற் கந்தமுத்து மலிந்த முக்குடை யிலங்க
அணிமலர்ப் பிண்டி யின்கீ ழமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணி பாதம் பண்ணவர் தமக்கு மெந்தம்
இணைகரஞ் சிரசிற் கூப்பி யியல்புறத் தொழுது மன்றே.

நேமீசர் வணக்கம்: ஸ்ரீ நேமி சுவாமி தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் 22ஆம் தீர்த்தங்கரர். சீவக சிந்தாமணியில் ‘நிகரில் நேமிதன் நீள்நகர்’ (912) என வந்துள்ளமை காணத்தகும்.

அருகக் கடவுளுக்குரிய பெயர்களுள் ஒன்றாக நேமிநாதன் என்பதனைச் சூடாமணி நிகண்டு கூறுகிறது.  தரும சக்கரத்தையுடைய இறைவன் என்பது இதன் பொருள்.  ‘அறவாழி யந்தணன்’ என (குறள்-8) வள்ளுவர் குறிப்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது.

இந் நேமிநாதர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் என்று அரிவம்ச புராணம் கூறுகிறது.

நல்ல அழகிய இரத்தினங்களும் நறுமணப் பொருள்களும் நிறைந்து முக்குடை ஒளிர்கின்றது.  இத்தகு குடையின் நிழலில் அசோக மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கிறார் நேமீசராகிய அருக தேவர்.  இவருடைய திருவடிகளை வணங்கும் பொருட்டு வாணி பாதத்தையும், குருவின் பாதத்தையும் எம்முடைய இரு கரங்களையும் தலைமேல் குவித்து முறைப்படி வணங்குவோம்.