சிறப்புப்
பெயர் விளக்கம்*
அங்கபூவாதி
நூல்: அங்க பூர்வாங்க ஆகமம். இஃது அருக தேவ ரால் அருளப்பட்டது; பன்னிரண்டு
பகுப்புடையது. ‘அங்கம் பயந் தோன் அருகன் அருள்முனி‘ (சிலப்.
10:187) எனப் போற்றுகிறார் இளங்கோவடிகள் (2).
அசேத்தியர்
அபேத்தியர்: இவ்விருவரும் சுப்பிரதிட்ட நகரினை யாளும் செயவர்மனுக்கு
அவன் மனைவி செயவதியிடம் பிறந்த புதல்வ ராவர். இவ்விருவரும் செல்வமும் செழிப்பு
மிக்கோராய் வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் அவரிருப்பிடம் வந்த பரமமுனிவரை (பிகிதாஸ்வர
முனிவர்) அரசன் செயவர்மன் வணங்கித் தம் புதல்வரின் எதிர்கால வாழ்வு குறித்து வினாவினான்.
அதற்கு அம் முனிவர், ‘எவனொருவன் புண்டரவர்த்தனபுரத்தினின்றும் சோமப்பிரபனைத்
துரத்தி, அவனரசை வனராசனுக்குக் கொடுப்பானோ, அவனே இவர்களுக்கும் தலைவன் ஆவான்‘
என்றார். அவ்வாறே இவ்விருவரும் சோமப்பிரபனை வென்ற நாககுமாரனை அணுகி, அவனுக்கு
ஆளராய்ச் சேவை செய்யலாயினர் (103-109). நாககுமாரனுக்குத்
தொண்டு செய்து புகழ் பெற்ற மன்னவர். இவர்கள் தவயோகத்தால் காதி-அகாதியாகிய
இரு வினைகளை வென்று, செல்வம்மிக்க சௌதர்மகற்பம் முதலாகச் சேர்ந்து தேவசுகம் பெற்றனர்
(166).
அசோதமம்: சௌதருமகல்பம்; நல்லறம் கேட்டு நோன்பு கொண்டோர் தேவப்பதவி பெற்று வாழும் புண்ணிய
உலகம் (149).
அஞ்சுநூற்றுவர்-ஐந்நூறு
படர்: புண்டிரபுரத்தை அடுத்த காட்டிலுள்ள ஆலமர நிழலில் நாககுமாரன் வீற்றிருந்தான். அம்
மரம் அவனுக்குக் கதிரொளியாற் மாறுபாடின்றி நிலையாக நிழல் தந்தது. அம் மரத்து
நச்சுக் கனிகளும் அமுத கனிகளாக அவனுக்கு உணவாயிற்று. அப்பொழுது அங்கிருந்த ஐந்நூறு
வீரர்கள் அவனடி வணங்கி அவனுடைய ஏவல்கேட்டு ஒழுகச் சித்தமாயினர் (109-111).
------------------------------------------------------------------------------
* |
விளக்கப்
பகுதியில் ஈற்றில் தரப்படும் எண்கள் இந் நாககுமார காவியத்தின் பாடல் எண்களாகும். |
|