பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 76 -

அதிபீமவசுரன்: இரம்மிய வனத்துள் வாழும் இரம்மிய வேடனின் மனைவியைக் கவர்ந்துசென்று அச்சந்தரும் ஒரு மலைக்குகையில் சிறை வைத்தவன் (93).

அபிசந்திரன்: அத்தினாபுரத்திலிருந்து அரசாண்டவன். வற்சை  நாட்டுக் கௌசாம்பி நகரமன்னன் சுபசந்திரனுக்கு இளவல்.  இவன் தன் தமையன் புத்திரிகளுக்கு நேர்ந்துள்ள அவலம் கண்டு, நாககுமாரனுக்குத் தூதுவிடுத்து நாககுமாரனின் துணை வேண்டினான்.  நாககுமாரன் இவனுக்குத் துணை வந்து, இவன் தமையனைக் கொன்ற சுகண்டனை மாய்த்தனன். பின் இவன் தன் புதல்வியுடன் தன் தமையன் புதல்வியரையும் நாககுமாரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் (122-126).

அமலமதி: இவர் ஒரு கேவலஞானி.  நாககுமாரனுக்குத் துறவு நெறியை உணர்த்தி நல்வழி காட்டிய பெரியார் (163).

அரிவரராசன்: கிரிநகரின் மன்னன்.  இவனுடைய கற்பின் மிக்க மனையாள் மிருகலோசனை; புதல்வி பெயர் குணவதி.  இவளை விரும்பிப் பிரவிச்சோதனன் என்பான் அந் நகரை வளைத்தான்.  அப்பொழுது அங்கு ஐந்நூறு படர்களோடு வந்திருந்த நாககுமாரன் நாற்படையுடன் சென்று, பிரவிச் சோதனனை வென்று ஓட்டி நகர்க்கு மீண்டான்.  அரிவரன் மகிழ்ந்து, தன் மகள் குணவதியை நாககுமாரனுக்குத் திருமணம் செய்து வைத்தான் (112-114).

அலங்கரியபுரம்: சயந்தர மன்னன் தன் மகன் நாககுமாரனுக்காகக் கனகபுர நகர்ப்புறத்தே ஓர் அழகிய அரண்மனை சமைத்தான்.  இதற்கு ‘அலங்கரியபுரம்‘ எனப் பெயர் சூட்டினான் மன்னன். நாககுமாரன் இதில் கின்னரி, மனோகரி என்னும் தன் மனைவியரிருவருடன் வசித்து வரலானான் (73).

அவந்தி: உஞ்சை என்னும் உச்சயினி நகரைத் தலைநகராகக் கொண்ட நாடு; இங்கிருந்து ஆண்டவன் செயசேனன் என்னும் மன்னனாவான் (128, 129).

அனசனநோன்பு: பட்டினி நோன்பு; அஃதாவது உண்ணா நோன்பு.  பூரண பஞ்சமியில் மேற்கொள்ளப்படும் உண்ணா நோன்பு போகங்களையும் புண்ணியங்களையும் ஆக்கும் என்பர் (148).

இரணியகுகை: பூமி திலக சினாலயம் இருந்த மலையிலுள்ள ஒரு குகை.  இக் குகை பற்றிய செய்தியை இரம்மியவேடன் நாககுமாரனுக்கு உரைத்தான். அவ்விடத்திற்கு நாககுமாரன் சென்றதும், அங்குள்ள இயக்கி அவன்முன் வந்து வணங்கினாள். அவள், ‘என்னோடு நாலாயிரம் இயக்கியர்கள் உனக்கு ஏவல் செய்யக் காத்திருக்கிறோம்‘ என்று கூறினள்.  அதற்கு மறுமொழியாக நாககுமாரன், அந்த இயக்கியர்களை, நீங்கள் இங்கேயே இருங்கள்; நான் வேண்டுங்காலத்து வாருங்கள்‘ என்று விடைபெற்றுச் சென்றான் (96, 97).