இரம்மிய
வனம்: இரம்மிய வேடன் என்பான் வாழ்ந்து வந்த காடு (94).
இரம்மிய வேடன்: இரம்மிய வனத்துள் வாழும்
ஒரு வேடன். இவன் மனைவியை அதிபீமவசுரன் என்பான் பற்றிச்சென்று ஒரு குகையில் சிறை
வைத்திருந்தான். இவன் பூந்திலகமாபுர சினாலயத்திற்கு நாள்தோறும் உச்சிப்போதில்
வந்து ஓவென அலறிச்சென்று கொண்டிருந்தான். இவன் அலறுங் காரணத்தை நேரில் கேட்டறிந்தான்
நாககுமாரன். இவ் வேடன் தன் மனைவி அடைப்பட்டிருந்த குகையை நாககுமாரனுக்கு உடன் சென்று
காட்டினான். அக் குகை வாயிலை நாககுமாரன் அடையவும் ஓர் வியந்தரதேவன் வந்து, தன்
வரலாறுரைத்து வேடனின் மனைவியையும் விடுவித்தான் (94, 95).
இராசமாகிரியம்: மகத நாட்டுள் மிக்க புகழ்
வாய்ந்தது இந் நகரம். ‘இராசகிருகம்‘ என்பதனையே காவிய ஆசிரியர் அடைமொழிகூட்டி
இவ்வாறு அறிமுகஞ் செய்கிறார். முகில் தவழும்படியான மிக நீண்டுயர்ந்த மதில்களையும்
அவற்றைச் சூழ ஆழ்ந்த அகழிகளையும் இந் நகரம் கொண்டிருந்தது. முகடுகளில் தங்கக்
கவசம் வைக்கப்பெற்ற பெருமாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் இந் நகருக்கு அணி செய்தன.
இன்ப வாழ்விற்கு இடமான தேவர் உலகத்தை இகழும்படியான அத்துணை இன்பநலம் சான்றது இந்
நகரம் (6, 7). இலக்கணை: கங்காள நாட்டு மன்னன் விசையந்திரனுக்கு
விசையை என்னும் தேவியிடம் பிறந்த மகள். இவள் எல்லாவகை இலக்கணங்களும் நிறைந்த
பேரழகுடையாள். நாககுமாரன் இவள் வாழும் நகரத்திற்கு வந்து, மெய்ம்மையான வேள்வி
முறையால் இலக்கணையை மன்னன் கொடுப்பக் கொண்டான். அவளுடன் இணையிலா இன்பந் துய்த்து
வாழ்ந்தான் நாககுமாரன். எல்லாத் தேவியரிலும் இவள் நாககுமாரன் தனிப்பற்றுக்
கொண்டிருந்தான். நாககுமாரன் தான் மணந்த பெண்டிர்களுக்குள் இலக்கணை என்பாளுக்கு
‘மாதேவிப்பட்டம்‘ வழங்கி, அவளுக்கு முதன்மைச் சிறப்பை நல்கினான். இவள் வயிற்றில்
தேவகுமாரன் என்னும் புதல்வன் பிறந்தான். நாககுமாரன் தன் மகனுக்கு அரசினை அளித்துத்
துறவு பூண்டபின், இவளும் ‘பதுமை‘ என்னும் ஆரியாங்கனையை வணங்கித் துறவு மேற்கொண்டாள்
(142, 143, 159, 160, 163, 164). இன்பப்பிரபை: சுபசந்திரனுக்கும் சுகாவதிக்கும்
பிறந்த மகள். இவளுடன் பிறந்தார் ஆறு சகோதரிகள். இவள் தன் பெற்றோருக்கு மூன்றாவது
மகளாவள். இவளுடைய பெயர் ‘சுநந்தை‘ என்றும் கூறப்படுகிறது (123).
உஞ்சை: அவந்தி நாட்டுள்ள பெரிய கோநகரம். இங்கிருந்து அரசாண்டவன்
செயசேனன் (128).
|