புண்டிரபுரம்:
வனராசனின் தாயத்தானால் கவரப்பட்டிருந்த நகரம்; இங்கிருந்த சோமப்பிரபனைத்
தோழன் வியாளனை அனுப்பி வென்று கொண்டு, அதனைத் தன் மாமன் வனராசனுக்கே உரிமையாக்கினான்
நாககுமாரன் (100, 101, 105).
பூந்திலகம்: இதனைப் ‘பூமிதிலகம்‘ என்றும் அழைப்பர். இரம்மியகம் என்னும் காட்டிலே திரிசங்கம்
என்னும் மலையில் மேலுள்ளது இச்சினாலயம் (91).
பொன்னெயில்: அருகபரமேட்டிகள் அமர்ந்திருக்கும் சமவ சரண மண்டலம். ‘பொன்னெயிலுள் வீற்றிருக்கும்
புனிதன் திருக்கோயில்‘ (46) என இக்காவியம் கூறுதலும் ஈண்டு ஒப்பு நோக்கத்தகும் (13,
14, 16).
மகதநாடு: பரத கண்டத்திலே முன்னாளில் விளங்கிய ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று; புத்தர்
பிறந்த புண்ணிய பூமி. மேகங்கள் வந்து படியும் படியான நீண்ட பெருமரங்கள் நிறைந்த சோலைவளம்
மிக்க நாடாகும் இது. இந் நாட்டின் எல்லாத் திக்குகளிலும் திருமகள் கொலு வீற்றிருக்கின்றாள்
என்று சொல்லும்படியாக அத்தனை செல்வச் செழிப்புடன் கூடியது. புகழ் பெருகிய பாரிசாத மலர்க்
காவுகளையுடைய தேவலோகத்துக்கு நிகராக விளங்குவது இந் நாடு (5,
6, 26).
மதனமஞ்சிகை: கலிங்க நாட்டு இரத்தினபுரத்திலிருந்து அரசாண்ட மன்னன் சந்திரகுப்தனுக்கு
அவன் தேவி சந்திரமதியிடம் பிறந்த மகள். இவள் மிகமிகப் பேரழகு படைத்தவள். இவளுடைய
பேரழகைப் பற்றிக் கேள்விப்பட்ட நாககுமாரன் ஏறிச் செலுத்தும் வாகனம் ஏதுமின்றிக்
கால்நடையாகவே நடந்து சென்று இரத்தினபுரம் அடைந்தான். நாககுமாரனின் புகழைக்கேட்ட
சந்திரகுப்தன் மனம் மகிழ்ந்து தன் மகள் மதன மஞ்சிகையை அவனுக்குக் கன்னியாதானமாக
அளித்தனன். இவளுடன் நாககுமாரன் நாகலோகவாசிகளின் காதற்புணர்ச்சி போல வேட்கை மிக
ஒன்றி மகிழ்ந்திருந்தான் (140, 141).
மதுரை: பாண்டி நாட்டுத் தலைநகர்; தென் மதுரை. இங்கு வாழ்ந்த அரசகுமாரி சிரீமதி. இவள் அந்
நாட்டை ஆண்ட மேகவாகனனுக்கு அவன் மனைவி இலக்குமியிடமாகப் பிறந்த மகளாவள் (132).
மந்திரி
நயந்தரன்: சயந்தர மன்னனின் மந்திரி. ‘நயந்தரன்‘ என்னும் பகுதி காண்க
(83-86).
மனோகரம்:
நான்காம் யாமத்தைக் குறிக்கும் சொல்; நான்காம் யாமத்திலே பிரிதிதேவி ஓர் இமிலேறும்
இளங்கதிர்ச் செல்வனும் தன் மனை புகுந்ததாகக் கனவு கண்டாள் (42).
மாவியாளன்: வியாளன் என்பானின் இளவல்; பாடலீபுர நகரில் வாழ்ந்தவன். இவன் அவந்தி நகர
மன்னன் செயசேனன் மகள் மேனகியை விரும்பி அங்குச் சென்றான். அவள் தன்னை விரும்பாமல்
போகவே அவன் தன் தமையனையும், நாககுமாரனையும் கண்டு மேனகியின் செய்தி சொல்லுகிறான்
(128, 129).
|