|
பிரிதிதேவி:
இவள் பரங்கியா நகரத்து வாழ்ந்த செல்வன் சிரீவர்மனுக்கும் அவன் மனைவி சிரீமதிக்கும்
பிறந்த மகளாவள். இவளுடைய உருவப்படத்தை வாசவன் எனும் வணிகன் சயந்தர மன்னனுக்குக்
காட்டினான். அவ்வுருக்கண்டு காதல் மிகக் கொண்ட மன்னன் அவளை மணந்து கொண்டான்.
முந்திய தன் பட்டத்தரசியாகிய விசாலநேத்திரையைப் போலவே, இவளையும் பட்டத்தரசியாகவே
கொண்டான். வயந்த காலத்து விளையாடலை முன்னிட்டு மன்னனும் பட்டத்தரசியர் முதலியோரும்
சோலை நோக்கிச் சென்றனர்; பிரிதிதேவி பல்லக்கில் ஏறிச் சென்றாள். அப்பொழுது
வழியில் யானை விசாலநேத்திரை முன்னர்ச் சென்று கொண்டிருப்பதைக் கண்டான்;
தோழி மூலம் அவள் யார் என்பதையும் பிரிதிதேவி தெரிந்து கொண்டாள். தான் அவளை
வணங்க வேண்டும் என்னும் எண்ணத்துடன்தான் இவ்வாறு முன்னிற்கின்றாள் போலும் என மனங்
கொண்டாள். பின் அவள் சோலைக்கு வயந்த விளையாட்டிற்குச் செல்லாமல் இறைவன் ஆலயம்
சென்று தொழுதாள். அவ்வாலயத்து வீற்றிருந்த மேலான முனிவரை வணங்கினாள். தன்னை வணங்கிய
பிரிதிதேவியை முனிவர் வாழ்த்தினார். ‘சிறந்த புகழுடைய புதல்வனை நீ பெறுவாய்‘ என்று
அவர் மொழிந்தருளினார். அது கேட்டு மகிழ்ந்த பிரிதிதேவி அன்றே தான் புத்திரனைப்
பெற்றவளைப் போலப் பெரிதும் மகிழ்ச்சியுடன் தன் அரண்மனைக்குச் சென்றாள். சயந்தர
மன்னன் தன் இளைய பட்டத்துத் தேவி பொழில் விளையாட்டிற்கு வாராத காரணம் என்னவென்று
அன்பின்மிகுதியால் அவளரண்மனை சென்று கேட்டான். அதற்கு மறுமொழியாக அவள் உண்மைக்
காரணம் உரையாது தான் இறைவன் ஆலயம் சென்று வழி பட்டதும் ஆங்குறையும் முனிவர் பிரஹிதாஸ்வரரிடம்
திருவறம் கேட்டதும் கூறினாள். மன்னனுக்குப் புத்திரப் பேறுண்டாகும் என முனிவர் அருளிய
நற்செய்தியையும் அவள் உரைத்தாள். அது கேட்டு மன்னன் மகிழ்ந்து அவளோடு இனிது உறைந்தான்.
இருவரும் இன்பமயமான போகந் துய்த்து இனிது வாழ்ந்தனர். நல்ல நாளில் நாககுமாரன்
பிறந்தான். முனிவர் உரைத்தபடியே அவன் பெருங் கீர்த்தியாளனாய் விளங்கினான்; தந்தையின்
அரசையும் பெற்றான். எல்லாம் கண்டு மகிழ்ந்து வாழ்ந்த நாககுமாரனின் தாயார் பிரிதிவி
தேவியும் இறுதியில் தன் பெருமை சான்ற குமாரனை விட்டுப் பிரிந்து போய் சிரீமதி
என்னும் ஆரியாங்கனையை வணங்கி அருந்தவம் மேற்கொண்டு அச்சுத கற்பத்தை அடைந்தாள்
(30-41, 158).
பிரிதிவி
திலகம்: வெள்ளி மலையின்மேலே ஆடுங்கொடிகள் நெருங்கியதாய் இந் நகரம்
விளங்கியது. இங்கிருந்து அரசாண்ட விஞ்சையர் மன்னன் வரதிரட்கன் (137).
புஞ்சியவனம்: ஜாலாந்தக வனம் எனவும் படும்; இங்குள்ள நச்சு மரக்கனிகள் நாககுமாரனுக்கு
அமுத கனிகளாயின; அம்மரங்கள் அவனுக்கு மாறாது நிலையான நிழல் தந்தன. இங்கு ஐந்நூறு படர்கள்
இருந்தனர். இவர்கள் எல்லாரும் நாககுமாரனைத் தலைவனாகக் கொண்டு அவனுக்கு ஏவல் செய்யலாயினர்
|