இதற்கு
முந்திய நான்கு நாள்களிலும் ஒரு பொழுது உணவு கொண்டு, ஐந்தாம் நாளிலே உண்ணாநோன்பு
கொள்வர் என்றுரைத்தார். அவ்வாறே இந் நோன்பை நாககுமாரன் மேற்கொண்டு ஐந்தாண்டளவு
நோற்றதாக இக்காவியம் கூறுகிறது. பஞ்சமி நோன்பை முறைப்படி கொண்டு ஒழுகுவோர் அருகன் பூசனையும் அருளறம் பூண்ட முனிவர்களுக்குத் தானங்களும் செய்து இந்திரப்பதவி பெறுவர்;
மீண்டு உலகில் வந்து பேரரசராய் விளங்குவர்; வினைக்கட்டறுத்து வீடுபேறும் பெறுவர்
(150-152).
பஞ்சாத்தி:
அருகன் உபதேசிக்கும் திருமந்திரம் (17).
பரங்கிரியாநகர்:
சுராட்டிர தேசத்தில் உள்ள ஒரு நகரம்; இது பல்வகை மாந்தர்களும் நிறைந்து வாழும் பேரூர்
(30).
பரதகண்டம்: நாவலந் தீவிலுள்ள நூற்றுத் தொண்ணூறு கூறுகளுள் ஒன்று. பாவில் வல்ல பெரும் பாவலர்களும்
சீர்த்திமிக்க சான்றோர்களும் எங்கும் பரந்து வாழும் சிறப்புடையது. இது ‘தருமபூமி‘ என்று
புகழ்ந்து பேசப்பெறும் (5, 26).
பதுமை: சுபசந்திரன் சுகாவதி ஆகியோருக்குப் பிறந்த ஆறாவது மகள் (123).
பாடலிபுரம்:
இது தரைமகளுக்குத் திலகம் போன்று விளங்கிய சிறப்புடைய நகரம்; நாகலோகத்துக்கு நிகரான
இன்பம் நிறைந்தது. இந் நகர்க்கு அரசன் சிரீவர்மன் (78,
79). மாவியாளன் வாழ்ந்திருந்த ஊரும் இதுவே (129).
பிண்டி: அசோகமரம். இதனை ‘அணிமலர்ப்பிண்டி‘ என இக்காவிய ஆசிரியர் கூறுமாறே ‘பூமலி அசோகு‘
எனப் போற்றுகிறார் பவணந்தி முனிவர். ‘செந்தளிர்ப்பிண்டி‘ என்றும் கூறுவதால், அசோகமரத்
தளிரின் செந்நிறக்காட்சி முன்னிற்கும். இம் மரத்தின் நிழலில் அருகதேவன் வீற்றிருந்தருள்வார்:
‘பூநான்கு மலர்ப் பிண்டிப் போதனீயே‘ (16) என்று
போற்றுகிறார் கவிஞர். மேலும், ‘செந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி
வாழ்த்தி‘ என மேலும் இவர் கூறுகிறார் (43).
(காப்பு, 1, 16, 43)
பிண்டிப்போதன்:
அருகபரமேட்டி; அதாவது அசோகின்கீழ் அமர்ந்த நாதன் (16).
பிரதாபந்தன்: நாககுமாரனுக்கு இளமையில் சயந்தரமன்னன் சூட்டிய பெயர். இவன் சினாலயத்தின் முன்னுள்ள
நாகவாவியில் விழுந்தபோது, நாகம் இவனைத் தாங்கி நின்றமையால் இவனுக்கு ‘நாககுமாரன்‘
என்னும் சிறப்புப் பெயரை மன்னன் பின்னர்ச் சூட்டினான். இதுவே பெருவழக்காய் இவனுக்குரிய
பெயராயிற்று (49).
|