இவ்வாறே அண்ணல்
பெற்ற
இணையிலாப்
பேறு கண்டே
செவ்விய இறைவன்
கொண்ட
சிந்தையும்
என்னே நெஞ்சே
அன்புறு பணிக
ளாலே
அகமகிழ்
அண்ண லாரை
இன்புறு நிலையில்
ஆழ்த்த
இறைமனம்
வைத்தான் நெஞ்சே
வள்ளலின் வாழ்வு
தன்னை
வனப்புறு
முழுமை யாக்க
உள்ளங்கொண்
டானே அல்லாஹ்
உயர்வதும்
என்னே நெஞ்சே
ஆதம்முன் முதலாய்
நிற்க
அருநபி
நிறைவு செய்ய
நீதியை வழங்க
வல்லான்
நினைத்தனன்
போலும் நெஞ்சே
நிலைபெற்ற இஸ்லாம்
மார்க்க
நேர்மையை,
கொள்கை தம்மை
நலமுடன் விளக்கிக்
காட்ட
நாடினான்
போலும் நெஞ்சே
அறநெறி வகுத்த
இஸ்லாம்
அரசியல்
மாண்பு காட்ட
அறமகன் நபியை
அல்லாஹ்
அழைத்தனன்
போலும் நெஞ்சே
மக்கத்தில்
அறத்த நாட்டி
மதினாவில்
அரசை நாட்ட
தக்கநம் இறைவன்
அல்லாஹ்
தருணம்தந்
தானே நெஞ்சே
ஆதம்: Adam,
முதல் மனிதரும்
முதல் நபியுமாவார். |
உயிரினுக் குயிராய்
வந்த
உத்தம
நபிக ளாரை
உயர்த்திடும்
எண்ணங் கொண்டே
உவந்தழைத்
தானோ நெஞ்சே
அருட்பெருஞ் ஜோதி
யாகி
அகிலத்தோர்
உய்வ தற்கே
அருட்பெருங் கொடையாய்த்
தந்தே
அழைத்திட
லானான் நெஞ்சே!
நாடும்நல் அரசு
தன்னை
நபியவர்க்
கீய எண்ணி
பீடுடை அல்லாஹ்
கொண்ட
பேரெண்ணம்
என்னே நெஞ்சே
மானிலத் தலைமை
தன்னை
மாநபி
கொள்ளச் செய்யத்
தேனினும் இனிய
அல்லாஹ்
திருவுள்ளம்
கொண்ட தென்னே
அகிலத்தின்
ரகசி யங்கள்
அனைத்தையும்
காட்ட எண்ணி
மகிமைசேர்
அல்லாஹ் கொண்ட
மனக்குறிப்
பென்னே நெஞ்சே
நாயகம் முஹம்ம
தின்பால்
நல்லுரை
ஆடு தற்குத்
தூயவன் அல்லாஹ்
கொண்ட
திருக்குறிப்
பென்னே நெஞ்சே
வள்ளலை அழைக்க
எண்ணி
வானவர்
ஜிப்ரீ லின்பால்
உள்ளத்தைச்
சொல்ல ஜிப்ரீல்
உவப்புடன்
கேட்டார் நெஞ்சே
என்னிடம் கொணர்வ
தோடும்
எழில்புவி
வான னைத்தும்
அண்ணலைக் காணச்
செய்வாய்!
அணுகுக
! என்றான் நெஞ்சே
அடியவர்க் கரசாய்
வந்த
அண்ணலுக்
கிறைவன் காட்சி
கிடைப்பதை ஜப்ரீல்
எண்ணி
கிளர்ந்துவந்
தாரே நெஞ்சே
ஈரேழு லோகத்
திற்கும்
இன்பத்தை
ஊட்ட வல்ல
சீர்மிகு செய்தி
தன்னைச்
செப்பிட
விரைந்தார்
நெஞ்சே
இறையாணைக் கொப்ப
ஜிப்ரீல்
இறைதூதர்
நோக்கி ஆங்கே
பெருவிருப் புடனே
வந்த
பெற்றியும்
பெரிதே நெஞ்சே
இறையவன் நினைவு
கொண்ட
இன்துயி
லோடு கஃபா
இறையால யத்தி
னுள்ளே
இன்நபி
இருந்தார் நெஞ்சே
நள்ளிர வதனில்
ஆங்கே
நலமிகு
ஒளியி னோடு
வள்ளல்முன்
ஜிப்ரீல் தோன்றி
வாழ்த்திட
லானார் நெஞ்சே
வள்ளல்தாம்
வியப்பி னோடு
வானவர்
ஜிப்ரீ லின்முன்
வெள்ளமாம்
ஒளியில் ஆழ்ந்து
விளங்கிட
லானார் நெஞ்சே
ஒப்பிலா இறைவன்
உம்மை
உவப்புடன்
அழைத்தா னென்ற
செப்பிய வசனம்
கேட்டு
சிந்தை
மகிழ்ந்தார்
நெஞ்சே
உள்ளத்தில்
உள்ள அந்த
ஒப்பிலா
இறைவ னைத்தான்
வெள்ளம்போல்
விரைந்து காண
விழைந்தவர்
நின்றார் நெஞ்சே
அந்தமில் இன்பத்
தோடும்
அனைத்தையும்
மறந்து நின்று
சிந்தையால்
இறையை வாழ்த்திச்
‘செல்லுவோம்’
என்றார் நெஞ்சே
அண்ணலார் இதயம்
மற்றும்
ஆருயிர்
எல்லாம் ஜிப்ரீல்
முன்னவன் ஒளியை
ஏற்ற
முகமலர்ந்
தொளிர்ந்தார்
நெஞ்சே
புத்தொளி பெற்ற
தும்தான்
பொலிவுடன்
நபியும் ஆங்கே
மெத்தவும் இலங்கி
நின்ற
மேன்மையும்
என்னே நெஞ்சே
விண்வெளி போவ
தற்கு
விந்தைசேர்
ஒளிப டைத்து
மண்ணதற் கரசர்
அண்ணல்
மலர்ந்ததும்
என்னே நெஞ்சே
ஒளியேற்றம்
நடந்த பின்னர்
உத்தம
நாய கத்தைக்
களிப்புடன்
அழைத்துச் சென்ற
காட்சியும்
பெரிதே நெஞ்சே
ஜிப்ரீலின்
துணையைக் கொண்டு
சென்றனர்
வான்க டந்து;
அப்பெரும் பயணம்
பற்றி
அறைவதைக்
கேளாய் நெஞ்சே
நெடுநாட்கள்
செல்லத் தக்க
நீள்தூரம்
உள்ள தான
எடுப்புடை *அக்ஸா
வுக்கே
ஏகிய
தென்னே நெஞ்சே
*அக்ஸா - அரபு
நாட்டிலிருந்து
மிகத் தொலைவில்
ஜெருஸலம் Jerusalem - நகரத்தில்
இருக்கிற புராதனப்
பள்ளிவாயில்.
இதை பைத்துல் முகத்தஸ்
- பரிசுத்த இல்லம்
என்றும் பெயர்
சொல்வர்
ஒளிபுராக்
கென்னும் அந்த
உயர்வாக
னத்தில் அண்ணல்
களிப்புடன்
ஜிப்ரீ லோடு
கடுகிய
தென்னே நெஞ்சே
இடையினில்
மதினா காண-
இறைதூதே!
இங்கு தான் நீர்
அடைக்கல மாவீர்
என்றே
அறைந்ததும்
வியப்பே நெஞ்சே
வானத்தில்
இருந்த வண்ணம்
வையத்து
நபிகள் நாதர்
தேன்நகர் மதினா
தன்னைத்
தெரிசித்த
தென்னே நெஞ்சே
இறையர சதனை
நீவிர்
இன்புடன்
நிறுவி இங்கு
நிறைபுகழ் அடைவீர்
என்றே
ஜிப்ரீல்தான்
சொன்னார்
நெஞ்சே
* புராக் - மின்வேகத்தை
மிஞ்சும் பொன்னொளி
வாகனம்.
ஜிப்ரீல்இம்
மொழியு ரைக்கச்
சித்தத்தில்
இன்பங் கொண்டே
அப்பெரும் அல்லாஹ்
வின்நல்
அருளென்னே
! என்றார் நெஞ்சே
கணத்தினில்
கஅபா விட்டுக்
கவினுறு
அக்ஸா சென்றே
மனத்தினில்
கொண்ட இன்பின்
மாண்பதும்
என்னே நெஞ்சே
முன்னிறைத் தூதர்
எல்லாம்
முன்னின்று
வாழ்த்துக் கூற
பொன்நபி ஆங்கு
நின்ற
பொலிவதும்
என்னே நெஞ்சே
வையத்துப் பெருந
பிக்கு
வாழ்த்துக்கள்
! என்று சொல்லிக்
கைதூக்கிக்
கவின்பொ ழிந்த
காட்சியும்
என்னே நெஞ்சே
வானமும் மண்ணும்
போற்ற
வைத்தவ
ரே!உம் மாலே
மானுடம் வென்ற
தென்றே
மகிழ்ந்திட
லானார் நெஞ்சே
வள்ளலே ! வருக
! என்றும்
வையத்தின்
ஒளியே ! என்றும்
வெள்ளொளி
அமரர் சொன்ன
வாழ்த்துக்கள்
கேளாய் ! நெஞ்சே
வல்லவன் ஒளியில்
வந்த
வனப்புடை
நபியே ! உங்கள்
எல்லையில் தவத்தி
னுக்கோர்
ஈடில்லை
என்றார் நெஞ்சே
பிறப்பிலான்
தூதாய் வந்துs
பெரும்புவித்
தலைவ ராகி
இறப்பிலாப்
புகழை ஏற்க
வருகவே
! என்றார் நெஞ்சே
வானங்கள் பல
கடந்து
வல்லோனின்
இடம் தனித்துத்
தேனுரை நிகழ்த்து
தற்கே
திகழ்ந்திடு
வீரே என்றார்
பல்லுயிர் படைப்பி
னுக்கும்
பரிவுடைத்
துணைவ ரே! நீர்
வல்லானின்
அருளை ஏற்க
வருக!
என் றாரே நெஞ்சே
அளவிலாப் புகழைக்
கொண்ட
அண்ணலே
! வாழ்த்து கின்றோம்
வளம்பல பெறவே
நீங்கள்
வருக
! என் றாரே நெஞ்சே
அமரர்கள் ஆசி
தன்னை
அண்ணல்தான்
அடைந்த பின்னர்
அமைதிசேர் அண்ணல்
வாழ்வில்
அதிசயம்
பலவாம் நெஞ்சே
ஆண்டவன் தூதர்
எல்லாம்
அமரர்கள்,
ஜிப்ரீல் எல்லாம்
மாண்புறு அணியாய்
நின்ற
மகத்துவம்
என்னே நெஞ்சே
அணிஅணி யாக
நின்ற
அனைவரும்
‘தலவர்’ என்ன
மணியனை வள்ளல்
கொண்ட
மகிமைதான்
என்னே நெஞ்சே
முன்நபி மார்க
ளுக்கு
முன்சென்று
ஆசி பெற்று
நன்நபி தலைமை
ஏற்ற
நலமதும்
என்னே நெஞ்சே
அக்ஸாவைக் கண்ட
பின்னர்
அரியபு
ராக்கை விட்டுத்
தக்கநம் நபியை
ஜிப்ரீல்
தாவியே
சென்றார் நெஞ்சே
ஒளிசூழ்ந்த உடலம்
விண்ணில்
உத்வேக
மாகச் சென்று
களிமிகு நிலையைக்
கண்ட
காட்சிகள்
என்னே நெஞ்சே
வான்வெளி செல்லும்போது
வழியினில்
கண்ட வற்றால்
தேன்நபி கொண்ட
இன்பைத்
தெரிவிப்ப
தாமோ ! நெஞ்சே
விண்டிட முடியா
வண்ணம்
விரைந்தநம்
நாய கந்தான்
எண்டிசை ஒளிப
ரப்பி
ஏகிய
தென்னே நெஞ்சே
வானவர் பூவின்
மாரி
பொழியவும்
வாழ்த்த வும்நம்
ஞானமா வள்ளல்
கொண்ட
நல்லின்பம்
என்னே நெஞ்சே
மெய்யுடல் கொண்டு
சென்று
மேலவன்
அருளைக் கொண்ட
துய்யநம் நாய
கத்தின்
தூய்மையும்
பெரிதே நெஞ்சே
ஜிப்ரீலை விட்டு
வள்ளல்
சென்றனர்
இறையை நோக்கி
அப்பெரும் நிலையை
இங்கு
அறைந்திடக்
கேளாய் நெஞ்சே
ஒப்பிலா நபிகட்
கோமான்
உவப்புடன்
வருதல் கண்டே
அப்பெரும் இறையோன்
காட்சி
அளித்ததும்
என்னே நெஞ்சே
நனிசிறந் திட்ட
அந்த
நற்குர்ஆன்
மறையைக் கேட்டே
கனிந்திட்ட
நபிய வர்க்குக்
காட்சியைத்
தந்தான் நெஞ்சே
இறையருட் கடலில்
ஆடி
இன்புறும்
வாய்ப்பைப் பெற்ற
நிறைவினால்
இறைவன் தோன்றி
நின்றனன்
நேராய் நெஞ்சே
கண்டனர் இறையை
நாதர்
கரைபுரண்
டோடும் அன்பால்
கொண்டனர்
இன்ப மென்று
கூறவோ
சொல்வாய் !
நெஞ்சே
இறைவனின் ஒளியில்
ஆழ்ந்தே
இன்புற்ற
விழிகள் கொண்ட
நிறைவினை, நெஞ்சின்
இன்பை
நீயறி
வாயோ ? நெஞ்சே
கண்டனர் கைகள்
ஆரத்
தொழுதனர்
கலந்த அன்பில்
கொண்டஅவ்
வின்பப் பேற்றைக்
கூறவ
தாமோ ! நெஞ்சே
திருவினும் திருவாய்
வந்த
தெளிவுடை
நபியை அல்லாஹ்
பெருவிருப் புடனே
கண்டு
பெருமிதங்
கொண்டான்
நெஞ்சே
இறையவன் நபியி
டத்தும்
இணையிலா
அன்பு கொண்டே
அறைந்தநல் மொழிகள்
தம்மை
அறிந்திடு
வாயோ ? நெஞ்சே
தன்னர சாலே
இந்தத்
தரணியைக்
காக்க எண்ணி
இன்னுரை வழங்கும்
மேலோன்
இன்னருள்
என்னே நெஞ்சே
என்னரும் நபியே
! உன்றன்
ஏற்புடைத்
தியானந் தன்னை,
அன்பினை உணர்ந்தோ
மென்றே
அல்லாஹ்சொன்
னானே நெஞ்சே
உருக்கமாய்ச்
செய்த உன்றன்
உயர்வுடை
மோனத் தாலே
நெருக்கமாய்
வந்தீ ரென்றே
நெகிழ்ந்துரைத்
தானே நெஞ்சே
உம்மை நான் படைக்கா
விட்டால்
உலகினைப்
படையேன் என்றே
செம்மையாய்
அல்லாஹ் சொன்ன
சீருரை
கேளாய் நெஞ்சே
என்னை நீர்
காணச் செய்த
இணையிலாத்
தவத்திற் கீடு
ஒன்றுமே இல்லை
என்றே
உவந்ததும்
என்னே நெஞ்சே
மனிதனின் மாண்பு
தன்னை
மாண்புடை
அண்ண லுக்குப்
புனிதமாய் எடுத்து
ரைத்த
பொற்பதும்
பெரிதே நெஞ்சே
அகிலத்தை யாருக்
காக
ஆக்கினான்
என்பன வற்றை
மகிமைசேர்
இறைவன் சொன்ன
மாண்பதைக்
கேளாய் நெஞ்சே
தரணியைத் தனக்கென்
றெண்ணி
தக்கநல்
முறையில் துய்த்து
அறமுடன் வாழும்
பண்பை
அவனுரைத்
தானே நெஞ்சே
நன்னெறி, நல்லொ
ழுக்கம்
நற்பண்பு
இவைகள் வாழ்வின்
சென்னெறி என்று
ரைத்த
சிறப்பதும்
என்னே நெஞ்சே
அகிலத்தின்
இயல்கள் தம்மை
அண்ணலுக்
காகச் சொல்லி
அகத்தொளி
ஊட்டி வைத்த
அன்பதும்
என்னே நெஞ்சே
மனிதனின் உயிருக்
குள்ள
மாண்பினை
உணர்ந்து மக்கள்
புனிதமாய் இணைந்து
வாழப்
புகலுக
! என்றான் நெஞ்சே
மனிதனின் வாழ்க்கை
பற்றி
மரணத்தின்
இறுதி நாளில்
வினாக்கள்தாம்
உண்டே யென்று
விளம்புக
! என்றான் நெஞ்சே
பிறவியின்
பயனு ணர்ந்து
பெருமையாய்
உய்வு கொள்ள
இறைவன்என்
உபதே சத்தை
இயம்புக
! என்றான் நெஞ்சே
நபியேஎன் ஆணை
தன்னை
நலமுடன்
எடுத்து ரைக்க
அபிமானத் தோடு
நின்னை
அழைத்தனம்
என்றான் நெஞ்சே
உம்மைநான்
அழைத்த தற்கே
உற்றதோர்
சான்ற தாக
எம்முடைப் பரிசாய்
ஒன்றை
ஈந்தனம்
என்றான் நெஞ்சே
ஐவேளைத் தொழுகை
தன்னை
அளித்தனன்
மக்க ளுக்கு
ஐவேளைத் தொழுகை
பற்றி
அறைகவே
! என்றான் நெஞ்சே
ஊன்றும்என்
ஆட்சி தன்னில்
உயிராகும்
தொழுகை என்றே
ஆன்றஅவ் வல்லான்
சொன்ன
அருமையும்
என்னே நெஞ்சே
கரையிலா அன்பி
னோடு
காக்கும்அம்
மேலோன் சொன்ன
நிறைமொழி அனைத்தும்
கேட்ட
நீர்மையும்
என்னே நெஞ்சே
அல்லாஹ்வின்
அன்பைப் பெற்றும்
அவனுடைக்
காட்சி பெற்றும்
எல்லையில் இன்ப
முற்ற
ஏற்றமும்
என்னே நெஞ்சே
இறைகாட்சிக்
கிணைந்த தாக
இருந்திடும்
தொழுகை பற்றி
இறையவன் சொல்லச்
சொல்ல
இன்நபி
கேட்டார் நெஞ்சே
வான்செல்வ
மாக யாமும்
வழுவிலாத்
தொழுகை தன்னைப்
பான்மையாய்த்
தந்த தைத்தான்
பரிசதாய்க்
கொள்வீ ரென்றான்
எங்குமே நிறைந்த
என்னை
எங்கும்நீர்
தொழுகை செய்து
மங்கல நன்மை
பெற்று
மகிழுக
! என்றான் நெஞ்சே
இம்மைநல் மறுமை
மற்றும்
இருமைசேர்
வாழ்வி னுக்குச்
செம்மைசேர்
தொழுகை பாலம்;
சிந்திக்க
! என்றான் நெஞ்சே
அலைகடல் ஆழி
எல்லாம்
அண்டத்தின்
முடியில் எல்லாம்
நிலையன்புத்
தொழுகை செய்தே
நிறைவினைக்
கொள்வீர்
என்றான்
நீரென்பால்
வந்து நின்று
நெகிழ்வுரை
செய்த தைப்போல்
பாரெலாம் தொழுகையாலே
பயன்பெறும்
என்றான் நெஞ்சே
என்றனை அறிந்தே
இங்கு
ஏற்றமாய்த்
தொழுவார் எல்லாம்
என்னில்ஒன்
றிடுவார் என்றே
இயம்பிட
லானான் நெஞ்சே
வான்பய ணத்தின்
மூலம்
வாய்த்தவோர்
பரிசாய்க்
கொண்டு
பான்மையாய்ச்
செல்வீ ரென்றே
பகர்ந்திட
லானான் நெஞ்சே
இறையவன் காட்சி
கண்டே
இன்னுரைச்
செல்வங் கொண்ட
நிறைவுடன் ஜிப்ரீ
லோடு
நீள்புவி
வந்தார் நெஞ்சே
ஒப்பிலா இறைவன்
தந்த
உயர்வுடைத்
தொழுகை தன்னை
இப்புவிக் களிக்கத்
தூதர்
இறங்கிய
தென்னே நெஞ்சே
நிலத்தினை நோக்கி
அண்ணல்
நேருற
இறங்கும் போது
நலமுட வணிகக்
கூட்டம்
நடந்ததைக்
கண்டார் நெஞ்சே
வர்த்தகர்
சிலரைக் கண்டே
வான்நபி
வாழ்த்தக் கண்ட
வர்த்தகர்
எல்லாம் கொண்ட
வியப்பதும்
பெரிதே நெஞ்சே
அணிஅணி யாகச்
சென்ற
அரபுவர்த்
தகக்கூட் டத்தார்
மணியனை அண்ண
லாரின்
மாண்பினைக்
கண்டார் நெஞ்சே
வானத்தில்
ஒலித்த வள்ளல்
வாய்மைசேர்
ஒலியைக் கேட்டே
காணுக ! என்று சொல்லிக்
களித்ததும்
என்னே நெஞ்சே
பார் பார் பார்
பாரென் றோதி
பறந்திடும்
நபியைக் காட்டிப்
பார்மிசை விந்தை
என்றே
பகர்ந்ததும்
என்னே நெஞ்சே
பேரொளி வெள்ளந்
தன்னில்
பிறங்கிடும்
அண்ண லாரின்
சீரொளி கண்டு
மக்கள்
சிந்தைம
கிழ்ந்தார்
நெஞ்சே
வானவர்க் கரசர்
ஜிப்ரீல்
வாஞ்சைசேர்
நபியைக் கஃபா
ஞானமா இருக்கை
சேர்த்து
நல்விடை
கொண்டார்
நெஞ்சே
கண்பெற்ற பயனை
எண்ணிக்
கஅபாவை
விண்வெளிப்
பயணம் கண்ட
வெற்றியும்
என்னே நெஞ்சே
விடியுமுன் கஅபா
வந்து
வித்தகன்
அருளி றைஞ்சி
விடிந்ததும் இல்லம்
நோக்கி
விரைந்திட
லானார் நெஞ்சே
அண்ணலின் சிறிய
தந்தை
அருமகள்
உம்மு ஹானி
என்றவர் இடமு
ரைக்க
எண்ணிட
லானார் நெஞ்சே
நபியவர் கூறக்
கூற
நல்லாசை
யோடு கேட்டே
அபிமான உம்மு
ஹானி
அதிசயங்
கொண்டார்
நெஞ்சே
அதிசயங் கொண்ட
மஙை்க
அண்ணலைப்
பார்க்கப் பார்க்கப்
புதியவோர்
ஒளியே சூழ்ந்த
பொற்பினைக்
கண்டார் நெஞ்சே
இறைகாட்சிச்
செய்தி தன்னை
இன்பமாய்க்
கேட்ட பின்னர்
நிறைநபி யிடத்தில்
அன்னார்
நிகழ்த்திய
தைக்கேள் நெஞ்சே
ஆற்றலில் சிறந்த
என்றன்
அன்புச்சோ
தரரே ! இந்த
ஏற்றத்தை எவரி
டத்தும்
இயம்பாதீர்
! என்றார் நெஞ்சே
நம்பாத மக்கள்
எல்லாம்
நடக்காத
தென்று சொல்லி
வெம்புவார்
என்றே அன்னார்
விளக்கிட
லானார் நெஞ்சே
அண்ணலோ நகைபு
ரிந்தே
ஆண்டவன்
செய்தி தன்னை
மண்ணிலே மறைப்ப
தாமோ ?
மாட்டேன்என்
றாரே நெஞ்சே
இறைவனின் ஆணை
தன்னை
இவ்வுல
கத்தில் நாட்ட
நிறைவுடன் உழைப்போ
மென்றே
நவின்றிட
லானார் நெஞ்சே
ஆண்டவன் ஆணை
தன்னை,
அன்புறு
தொழுகை தன்னை
ஈண்டுநாம் சொல்வோ
மென்றே
எழுந்திட
லானார் நெஞ்சே
அண்ணலார் மீது
கொண்ட
அன்பினால்
உம்மு ஹானி
அண்ணலின் ஆடை
பற்றி
அகலாதீர்
! என்றார் நெஞ்சே
பற்றிய கரத்தைத்
தள்ளிப்
பரிவுடன்
எழுந்த அண்ணல்
பொற்புடைக்
கரத்தில் கண்ட
புதுமையைக்
கேளாய் நெஞ்சே
ஒளிமய மான
அண்ணல்
உயர்கரம்
தன்னைக் கண்டு
தெளிவின்றி
மயக்கங் கொண்டே
தரையினில்
வீழ்ந்தார்
நெஞ்சே
தெளிந்தவர்
எழுந்த போது
தேசுறு
அண்ணல் நின்ற
வெளியெலாம்
ஒளியால் சூழ
விந்தையில்
ஆழ்ந்தார் நெஞ்சே
பணிமகள் இடத்தி
லன்னார்
பரவசம்
உற்றே சொன்ன
கனிவுடை மொழிகள்
தம்மைக்
களிப்புடன்
கேளாய் நெஞ்சே
பெண்ணேநீ விரைந்து
சென்று
பெருமானார்
கஅபா தன்னில்
என்னசொல் கின்றார்
என்றே
அறிந்வா
என்றார் நெஞ்சே
நபிகள்விண்
ணேற்றம் பற்றி
நல்லதோர்
உவகை கொண்டே
அபுஜஹில் இடத்தின்
கண்ணே
அறைவதைக்
கண்டார் நெஞ்சே
கண்டஅக் காட்சி
தன்னைக்
கனிவுடன்
ஓடிச் சென்று
விண்டதும் உம்மு
ஹானி
வியப்படைந்
தாரே நெஞ்சே
மனத்திற்கு
விரோத மின்றி
மக்கள்பால்
பணிக ளாற்ற
நினைத்தநம்
வள்ளல் பற்றி
நெஞ்சுரு
கிட்டார் நெஞ்சே
செய்தி
பரவியது
விண்வெளி சென்று
வந்த
வியப்புறு
செய்தி எங்கும்
கண்ணிமைப் போதில்
சென்ற
விந்தையைக்
கேளாய் நெஞ்சே
விடிந்ததும் மக்கள்
கூட்டம்
விரைந்துமே
கஅபா முன்னர்
வடிவுடை நபியைக்
காண
வந்ததும்
என்னே நெஞ்சே
செய்தியைக்
கேட்டோ ரெல்லாம்
சிந்தையில்;
வியப்ப டைந்து
மெய்நபி புகழைப்
பேசும்
மேன்மையும்
என்னே நெஞ்சே
மானுடம் பறந்த
தென்ற
மாண்புறு
செய்தி யாலே
தேன்நபி புகழ்தான்
எங்கும்
திகழ்ந்ததும்
என்னே நெஞ்சே
நம்பிக்கை கொண்டோ
ரெல்லாம்
நபிகளை
வாழ்த்தும் போது-
வம்பர்கள்
பொய்யே என்று
வாதிட
லானார் நெஞ்சே
பகைவர்இச் செய்தி
தன்னைப்
பாதக
நோக்கி னோடு
மிகையாக்கிப்
பழித்த வற்றை
விளம்பவோ
? சொல்வாய்
நெஞ்சே
அபுஜஹில், வள்ளல்
சொன்ன
அதிசயந்
தன்னைக் கேட்டு
நபிகளே ! ‘நன்றே’
என்று
நகைத்திட
லானான் நெஞ்சே
‘கனவினில்
சென்றீர் !’
என்றே
கைதட்டிச்
சிரித்த தோடு
நினைவினில்
நடக்கா தென்றே
நவின்றிட
லானான் நெஞ்சே
வல்லானின்
துணையால் சென்றே
வந்தநம்
வள்ள லாரின்
உள்ளத்துத் துயரந்
தன்னை
உரைத்திட
லாமோ நெஞ்சே
என்னிடம் உரைத்த
வற்றை
எல்லோர்பா
லும்சொல் வீரோ
?
சொன்னால்போ
தும்என் றோதி
சிரித்ததும்
என்னே நெஞ்சே
நிச்சயம் சொல்வேன்
என்றே
நிறைகுண
நபிகள் சொல்லி
அச்சமே இன்றி
நின்ற
அழகதும்
என்னே நெஞ்சே
கணப்பொழு திற்குள்
ஆங்கே
கஅபாவின்
முன்னர் மக்கள்
அணையிலா வெள்ளம்
போல
அணுகிய
தென்னே நெஞ்சே
அஜஹிபுல் முன்னர்
வந்தே
‘அறைந்தஅச்
செய்தி தன்னை
நபிகளே ! இவர்கள்
முன்பு
நவிலுக!’-என்றான்
நெஞ்சே
ஆதியோ டந்த
மாக
அண்ணலார்
விண்ணேற் றத்தின்
சேதிகள் தம்மைச்
சொன்ன
சிறப்பதும்
வியப்பே நெஞ்சே
விழிப்பினில்
சென்றீர் என்றால்
விளம்புக
! அவற்றை என்றே
பழிமிகு அபுஜ ஹில்தான்
பகர்ந்திட
லானான் நெஞ்சே
விண்டிட முடியா
தென்ற
வியப்புறு
கேள்வி கட்கும்
அண்ணலார் சொன்ன
வற்றை
அறவேன்கேட்
டிடுவாய் நெஞ்சே
வானில்நான்
வந்த போது
வர்த்தகக்
கூட்டம் ஒன்றை
நானும்கண் டேன்;அன்
னாரும்
நன்கறி
வாரே என்றார்
விண்ணிலே வந்த
வண்ணம்
விளித்துநான்
முகமன் கூறக்
கண்ணிலே கண்டார்
என்றே
கழறிட
லானார் நெஞ்சே
வள்ளல்இவ்
வாறு சொல்ல
வர்த்தகர்
எல்லாம் ஒன்றாய்
சொல்லிய வண்ணம்
வந்த
சோபிதம்
என்னே நெஞ்சே
வர்த்தகர்
எல்லாம்-வள்ளல்
வானிலே
சென்றார் என்றும்
அற்புதம் என்றும்
சொன்ன
அதிசயம்
பெரிதே நெஞ்சே
பேரொளி யோடு
அண்ணல்
பிறங்கினார்
வானில் என்றே
பாரொளி வள்ளல்
பற்றிப்
பகர்ந்ததைக்
கேளாய் நெஞ்சே
வெள்ளொளி
யோடு மின்னி
விந்தைசேர்
நபிக ளாரும்
நள்ளிர வதனில்
வானில்
நகர்ந்ததைக்
கண்டோம் - என்றார்
வானிலே இருந்த
வண்ணம்
வள்ளலின்
முகமன் ஓசைத்
தேனொலி கேட்டோம்
என்றும்
தெரிவித்த
தென்னே நெஞ்சே
அவனியோர்
வியக்கும் வண்ணம்
அரும்பெரும்
அண்ணல் வானில்
பவனிவந் ததனைச்
சொல்ல
பரவச
முற்றார் நெஞ்சே
வர்த்தகர்
கூறக் கூற
வாஞ்சையில்
அபுஜ ஹீலின்
அர்த்தமில்
வாத மெல்லாம்
அடங்கிய
தென்னே நெஞ்சே
ஒருமாதங் கூட
இல்லை
ஓரிர
வில்நீர் சென்று
வருவதும் மெய்யா?
என்றும்
வாதிட
லானான் நெஞ்சே
இவ்வாறு கேட்ட
துந்தான்
இறைதூதர்
‘மெய்யே’ என்ன
செவ்விய வியப்பில்
மக்கள்
சேர்ந்ததும்
என்னே நெஞ்சே
நாயகம் மக்கள்
தம்மை
நம்பவே
செய்து - வீணாம்
மாயத்தால்
புகழைச் சேர்த்தல்
மாபாவம்
என்றார் நெஞ்சே
அருகினில் இல்லா
தந்த
‘அக்ஸா’பள்
ளிக்குச் சென்றால்
பெருமைசேர் ‘அக்ஸா’பற்றிச்
சொல்லுக!
பார்ப்போம்
என்றான்
பள்ளியின்
அமைப்பைப் பற்றி
பாங்கான
வடிவம் பற்றி
துல்லிய மாகக்
கேட்போம்
துலக்குவீர்
என்றான் நெஞ்சே
இவ்வாறு கேட்ட
தும்தான்
இறைதூதர்
முறுவ லோடு
செவ்விய இறையை
எண்ணி
சிந்தைசெய்
தாரே நெஞ்சே
அண்ணலார் கண்க
ளுக்கோ
அழகுற
அக்ஸா தன்னை
வண்ணமாய் இறைவன்
காட்டி
வைத்தம்
என்னே நெஞ்சே
அற்புதப் பார்வை
பெற்ற
அண்ணலார்
அக்ஸா பற்றி
அற்புத மாகச்
சொல்ல
அதிசயங்
கொண்டார்
நெஞ்சே
கேள்விகள்
கேட்கக் கேட்கக்
கிஞ்சித்தும்
தயக்க மின்றித்
தோல்வியே
இல்லா வண்ணம்
தொடுத்துரை
தந்தார் நெஞ்சே
விற்பன்னர்
பலரும் கேட்ட
விதவிதக்
கேள்வி கட்கு
நற்பதில் உரைத்த
வற்றை
நாமுரைப்
பதுவோ ! நெஞ்சே
பள்ளியின்
அமைப்பைப் பற்றிப்
பாங்குடன்
கேட்கக் கேட்க
வள்ளலும் எடுத்து
ரைத்த
வனப்பதும்
வியப்பே நெஞ்சே
தூண்களைப் பற்றிக்
கூடத்
துடுக்குடன்
கேட்க அண்ணல்
மாண்புடன் எடுத்து
ரைத்து
மகிழ்ந்ததும்
என்னே நெஞ்சே
ஆயிரக் கணக்கில்
ஆங்கே
அடுக்கடுக்
காகக் கேட்க
நாயகம் பதிலு
ரைத்த
நலமதும்
என்னே நெஞ்சே
கூட்டத்தில்
இருந்தோ ரெல்லாம்
கூற்றொணா
இன்பங் கொண்டு
நாட்டினில் விந்தை
என்றே
நவின்றதும்
என்னே நெஞ்சே
இறைவனின் துணையைக்
கொண்டே
இன்நபி
விளக்கஞ் சொல்ல
நிறைவுற்றே
பலரும் சென்ற
நீர்மையும்
பெரிதே நெஞ்சே
சொல்லிடும்
போதே அண்ணல்
ஜோதியால்
சூழ்ந்தி ருந்த
நல்லதோர் காட்சி
கண்டோர்
நயத்தலும்
பெரிதே நெஞ்சே
திருநபி பேசப்
பேசத்
திரண்டஅம்
மக்கள் கண்ணின்
புருவங்கள் மேலெ
ழுந்த
புதுமையும்
என்னே நெஞ்சே
பரிகாசம் செய்தோர்
தாமும்
பற்பல
உரைத்தோர்
தாமும்
புரியாத புதிரே
என்று
புகன்றதும்
என்னே நெஞ்ே்ச
இப்படி நடக்கு மாமோ
?
இஃதென்னே
! என்னே ! என்று
செப்பிய மக்கள்
இன்பைச்
செப்புவ
தாமோ நெஞ்சே
இறைவனால் வள்ளல்
காணும்
இணையிலாப்
பேற்றை மக்கள்
நிறைவுற்ற நெஞ்சால்
வாழ்த்தி
நெகிழ்ந்திட
லானார் நெஞ்சே
அபுஜஹில் வாதை
மக்கள்
அணுவுமே
நம்ப வில்லை;
நபிகள்தான்
சான்று ரைத்த
நலமதும்
என்னே நெஞ்சே
நம்பாத போது
ஆங்கே
நலிந்திட்ட
அபுஜ ஹில்தான்
வம்பாகக் கேட்ட
வற்றை
வடிக்கின்றேன்
கேளாய் நெஞ்சே
அண்ணலின் தோழ
ரான
அபுபக்கர்
இடத்தில் வந்தே
விண்ணொளிப்
பயணம் பற்றி
அபுஜஹில்
வினவ லானான்
உரைத்தஇச் செய்தி
பற்றி
உம்கருத்
தென்ன ? என்றே
கரையிலாப் பகைமை
யோடு
கழறிட
லானான் நெஞ்சே
முகம்மதர் உரைக்கும்
அந்த
மொழிகளும்
பொய்யு மாமோ
?
அகமதால் சொல்லு
கின்றேன் ;
அனைத்தும்மெய்
யென்றார் நெஞ்சே
வானவர் மறைகொ
ணர்ந்து
வழங்கிடும்
போது வானில்
ஏன்பறத் தல்கூ
டாதென்
றியம்பிட
லானார் நெஞ்சே
கேட்டவன் மௌனி
யாகி
கேட்டதும்
ஏனென் றெண்ணி
நாட்டுக்குள்
விந்தை என்றே
நவின்றிட
லானான் நெஞ்சே
அண்ணலார் இடத்தில்
ஓடி
அபுபக்கர்
நடந்த வற்றின்
உண்மையை எடுத்து
ரைத்தே
உவந்ததும்
என்னே நெஞ்சே
அண்ணலார் இன்ப
முற்றே
அபுபக்கர்
செயலைப் போற்றிப்
பன்னிய மொழிகள்
தம்மைப்
பகர்ந்திட
லாமோ ? நெஞ்சே
மெய்யுடைப் பயணந்
தன்னை
மெய்ப்பித்தீர்
; வாழி எம்மை
மெய்ப்பித்த
*‘ஸித்தீக்’
என்றேன்
மேவுக
! என்றார் நெஞ்சே
மாநபி அவர்களின்
விண்ணேற்ற
சாதனையில்
ஐயங்கொள்ளும்
மானிட நெஞ்சமே
!
முதல்வன்
வல்லமையில்
முடியாததும்
ஒன்றுண்டோ?
* ஸித்தீக்
- உண்மையை மெய்ப்பித்தவர்
என்று பொருள்.
நபிமணி அவர்களின்
விண்ணேற்றத்தை
அபூபக்கர் அவர்கள்
மெய்ப்பிக்க,
அண்ணலார் அவர்கள்
ஸித்தீக் என்ற
அரிய
பட்டத்தை அன்னாருக்கு
வழங்க-அன்று
முதல் அபூபக்கர்
ஸிக்தீக் என்று
உலகம் அவர்களை
அழைத்து வரத்
தொடங்கியது.
|