பக்கம் எண் :

1

Kachi Kalambagam

ப தி ப் பு ரை

அமிழ்தினும் இனிய நம் உயர்தனிச் செம்மொழியில் காலப் போக்கில் தோன்றி நின்று நிலவுகின்ற நூல்கள் பல. அங்ஙனம் தோன்றிய பண்டை நூல்கள் பலவும் செய்யுள் நூல்களேயாய் அமைந்துள்ளன. அவற்றுள் சங்கச் செய்யுட்கள், பண்டைக் காலத்திய தமிழ்நாட்டியற்கையினைத் தெளியக் காட்டி, நந்தலில்லா ஒளி மணிகள்போன்று ஒளிர்ந்து விளங்குகின்றன.  சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை முதலாகப் பெருங்காப்பியங்களும், சிறு காப்பியங்களும் தமிழ் வளம் பழுத்த விழுமிய நூல்களாய்ச் சில வரலாறுகளைக்கொண்டு திகழ்கின்றன. இவையே யன்றிப், பிள்ளைத்தமிழ், கலம்பகம், மும்மணிக்கோவை, இரட்டைமணிமாலை, பரணி, நூற்றந்தாதி எனப் பொருட் பொருத்தத்துக்கும் செய்யுள் வகைக்கும் ஏற்பப் பலவகைப்பட்ட செய்யுள் நூற்களும் தோன்றித், தமிழ் மொழியின் வீறு பெற்ற தனிச் சிறப்பினை அளந்து காட்டுவனவாய்த், தமிழ்ப் புலவோரின் புலமை நலத்தின் எல்லையைப் புலப்படுப்பனவாய் அமைந்துள்ளன.

பண்டைக்காலந்தொட்டுச் செய்யுள் நடையில் வீறுபெறச் சென்ற தமிழ் மகள், இக்காலை உரைநடையில் தன் ஆற்றலின் அளவை யாருங் கண்டு வியப்புறுமாறு செல்கின்றனள்.

இக்காலைப் பண்டைச் செய்யுள் நடையின் வரலாற்று முறை வழுவாது நூலியற்றல் அரிதாம். ஆயினும், பண்டைச் செய்யுள் நூலின் வரலாற்றுமுறையிற் சிறிதும் வழுவாது இயன்று நின்று பொலியும் ஒரு நூலாகச், சில்லாண்டுகளுக்கு முன் பூண்டி அரங்கநாத முதலியார் இயற்றிய இக் கச்சிக் கலம்பகம் விளங்குகின்றது.

கலம்பகமாவது புயவகுப்பு, அம்மானை, காலம், கார், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, தழை, ஊசல், இடைச்சியார், மதங்கியார், பிச்சியார், கொற்றியார் எனப் பல்வகைத் தலைப்பில் உலக நிகழ்ச்சி கருதிய துறைகள் விரவிவரக், கலிப்பா, அகவல், வஞ்சி, வெண்பா, மருட்பா என்னும் பல்வகைச்செய்யுள் யாப்பினும் இயன்று, அந்தாதித் தொடைபட ஒருவனைத் தலைவனாகக்கொண்டு பாடப்படுவதாம்.

கச்சிக்கலம்பகம், இம்முறையில், கச்சியின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் தலைவனாகக்கொண்டு பாடப்பட்ட துதி நூலாகும். எத்துறையிலும் புலமைக்கு ஒரு வரம்பாய் அண்மையில் புகழ் பெருக விளங்கியிருந்த, தலைசிறந்த தமிழ் மகனாரான பூண்டி அரங்கநாத முதலியார், மேற்கூறியவாறு பண்டையோர் சென்ற அடிச்சுவடே பின்பற்றிப், பல்வகைச் சிறப்பினுள் ஒரு சிறிதும் குறைதலின்றி, நிறைவுபட யாத்த இக் கலம்பகத்தின் மேன்மையையும் மாண்பையும், தமிழ்ப் புலவர் குழாமும் தமிழ் மாணவர் கூட்டமும் உணர்ந்து இன்புற்றுப் பயன் பெறுமாக.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்