பக்கம் எண் :

103

Kachchik Kalambagam s


நேரிசை வெண்பா

சூழுந் தளையாய தொல்லைப் பிறவியினைப்
போழு நவியமாம் புத்தேளிர் - தாழுநலம்
பொன்றா வளக்கச்சிப் பூங்கொன்றைக் கண்ணியர் தம்
இன்றாட் கிடும்பச் சிலை.                          (70)

(இ - ள்.) சூழும் தளையாய - நீங்காது சூழ்ந்து வந்துள்ள மும்மலத்தாலாய, தொல்லைப் பிறவியினை - பழைமையாகிய பிறப்பை, போழும் நவியமாம். பிளக்கும் கோடரியாம், (எது வெனில்), புத்தேளிர் - தேவர்கள், தாழும் - தங்கள் முடி தாழ்த்தி வணங்கும், நலம் பொன்றா - நன்மை நீங்காத, வளம் கச்சி - வளங்களையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளிய, பூங்கொன்றைக் கண்ணியர்தம் - அழகிய கொன்றை மலரால் ஆய மாலையைத் தரித்த ஏகாம்பரநாதருடைய, இன் தாட்கு - இனிய திருவடிகளில், இடும் பச்சிலை - இடுகின்ற வில்வ முதலிய பசிய இலையாம்.

அநாதியாக ஆணவம் முதலிய மலங்களால் பிறவி தொடர்ந்து வருதலால் ‘சூழுந் தளையாய தொல்லைப் பிறவி’ என்றார்.

தளை - கட்டு; விலங்கு.

நவியம் - கோடரி.

“யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை” (திருமந்திரம்.)

வீடு பேற்றைத் தரும் திருவடியாதலின் ‘இன்தாள்’ என்றார்.

புத்தேளிர் தாழும் கச்சி, நலம் பொன்றா வளக்கச்சிக் கண்ணியர் தாளுக்கு இட்ட பச்சிலை பிறவியினைப் போழும் நவியமாகும் என்க. தாழும் இன் தாள் எனக் கூட்டுக.

‘தேவர்கள் வணங்கும் தாளில் இடும் பச்சிலை நவியமாம்’ என்றதால், கச்சியெம்பெருமானுடைய தாளின் சிறப்பு விளங்குவதாம்.