பக்கம் எண் :

106

Kachchik Kalambagam


கட்டளைக் கலிப்பா

      உற்றுப் பார்க்கிலுன் வாழ்க்கையென் ஐயமே
            ஊரும் வெட்ட வெளியுடை தோலுனைப்
      பெற்றுப் பார்க்குள் உறுஞ்சுகம் இல்லையாற்
            பேதை நின்னையென் பெற்றிடப் பற்றினள்
      கற்றுத் தேர்ந்த பெரியவர் வாழ்திருக்
            கச்சி மாநகர்க் கத்த! வென் அத்தனே!
      பற்றி லாருளம் பற்றுறு பங்கயப்
            பாத னே! படப் பாம்பணி காதனே!            (73)

(இ - ள்.) கற்றுத் தேர்ந்த - கற்க வேண்டுவனவற்றைக் கசடறக் கற்றுத் தெளிந்த, பெரியவர் வாழ் - பெருமையையுடையார் வாழும், திருக்கச்சி மாநகர் - திருக் காஞ்சிமாநகரின் கண் வந்து குடிபுகுந்த, கத்த - தலைவனே!, என் அத்த - என் தந்தையே!, பற்று இலார் - அகப்பற்றுப் புறப்பற்று இல்லாதவருடைய, உளம் - மனம், பற்றுறு - பற்றுதலுக்குற்ற, பங்கயம் பாதனே - தாமரை மலர்போன்ற திருவடிகளை யுடையவனே!, படம் பாம்பு - படத்தோடு கூடிய பாம்பினை, அணி - காதணியாக அணிந்துள்ள, காதனே - காதினை யுடையவனே! ஐயமே உன் வாழ்க்கை - பிச்சை யெடுத்து உண்ணுதலே உன் வாழ்விற்குரிய தொழிலாகும், ஊரும் வெட்ட வெளி - நீ வாழ்வதற்கு உனக்குரிய இடமாகிய ஊரும் பாழிடமாம், உடை - நீ உடுப்பதற்கு அமைந்த உடையும் (ஆடையும்), தோல் - தோலால் ஆயதாம், உற்றுப் பார்க்கில் - இவற்றை நன்கு நோக்கிப் பார்க்குமிடத்து, என் - உன்னை ஒருவர் அடைந்து பெறுவதற்குரிய பொருள் என்ன இருக்கின்றது (ஒன்றுமில்லை), பெற்று - உன்னை அடைதலால், பார்க்குள் - இவ்வுலகத்தில் நுகர்தற்குரிய, சுகம் - உலக இன்பமும், இல்லை - இல்லையாம் (அங்ஙனமாகவும்), பேதை - என் அறிவில்லாத மகள், நின்னை - உன்னை, என் பெற்றிடப் பற்றினள் - என்ன நலத்தை அடைந்திடப் பற்றினளோ அறியேன் (இங்ஙனம் என் பேதை உன்னையே பற்றி நிற்றலால், நீ அவளை எப்படியோ வஞ்சித்தாய்; உன் வஞ்சனை இருந்தவாறு என்னே!)

படப் பாம்பணி காதனே - படத்தையுடைய பாம்புகளைக் காதிலே அணிந்தவனே!

உன் வாழ்க்கை என்பது ஐயமே - உன் வாழ்க்கை என்பது சந்தேகமே.

உடை தோல் என்பதற்கு நீ அணிந்துள்ள உடை புலித்தோல்; நீ போர்த்துள்ள போர்வை யானைத் தோல் என்க.

இத்தகைய நிலைமையை உடைய உன்னை நாயகனாகப் பெற எதற்காகப் பற்றுக்கொண்டாள் எனலுமாம்.

தாய் தன் மகளை வஞ்சித்த தலைவனைப் பார்த்து அவன் வஞ்சனையை எடுத்துக்கூறி இகழ்வதாக அமைந்துள்ளது இச் செய்யுள்.

இகழ்வதுபோல் புகழ்வதாக அமைந்துள்ள அணி இதன் பால் அமைந்துள்ளது.

இதனை வடநூலார் நித்தாத்துதி என்பர்.

தனக்கென ஓரூர் இல்லையாயினும் பெரியவர் வாழும் காஞ்சிமாநகரின்கண் வந்து குடிபுகுந்ததால் தனக்கொரு தலைமை வந்ததென்பார் ‘கத்த!’ என்றும், அந்தத் தலைமையைப் பெற்றதைப் புகழ்வது போலும் பழித்துரைப்பார் ‘என் அத்தனே!’ என்றும், திக்கற்றவரே அவனைப் பற்றுவ ரென்பார், ‘பற்றிலார் பற்று பாதனே’ என்றும், அவர் பற்றுவதற்கும் உரிய வல்லமையற்ற தென்பார் மென்மை வாய்ந்த ‘பங்கயப் பாதனே’ என்றும், அணி அணிய ஆசையுடையனாயும் அதற்குரிய பொருள் இலன் என்பார், ‘பாம்பணி காதனே’ என்றும், பிச்சை யல்லது ஊண் இலனென்பார் ‘ஐயமே உன் வாழ்க்கை’ என்றும், பாழிடமே தனக்குரிய வாழ்விடமென்பார் ‘ஊரும் வெட்ட வெளி’ என்றும், உடை, யானைத்தோலன்றி வேறு இல்லை என்பார், உடை தோலென்றும், இத்தகைய நிலையை யுடையனாயும் பேதை யாது பெற நினைந்து பற்றுதற்குரியளாயினாளோ என்றும், அங்ஙனம் பற்றுதற்கு அவன் செய்த வஞ்சகம் என்னையோ என்றும் வெளிப்போக்கில் இகழ்ந்து கூறுவதுபோல் பாடியிருப்பினும் உள்ளுறை யுணர்ந்து இன்புறற்குரியது இப்பாடல் என்க.

கற்றுத் தேர்ந்தவர் தம் கல்வியாலாய பயனாய வாலறிவன் நற்றாள் தொழுதலையே மேற்கொள்வர். ஆதலால், அத்தகைய பெரியோர் வாழும் கச்சியம்பதியில் இறைவன் குடியிருப்புக் கொண்டு அதற்குத் தலைவனாயினான் என்பதும், அத் தலைவனே தமக்குத் தந்தையாம் என்று ஆசிரியர் கொள்ளுகிறார் என்பதும், அத்தகையவன் அகப்பற்றுப் புறப்பற்று அற்றவருளத்தே போந்து வீற்றிருப்பன் என்பதும், பகைத்து வெறுத்தற்குரிய பொருளாயினும் அப் பகையைப் போக்கித் தனக்கும் அப் பொருளுக்கும் அழகு செய்விக்க வல்லவன் இறைவன் என்பதும், அவன் தானாக அடியாரிடம் போந்து, அவர் அறியாமையை இரந்து வாங்கிக்கொண்டு தன் பேரின்பத்தை அளிக்க வல்லவன் என்பதும், பேரறிவாம் வெட்ட வெளியில் ஆநந்தத் தாண்டவம் செய்வான் என்பதும், தாருகாவனத்து இருடியர் ஏவிய யானையினை அழித்து, அதன் தோலினையே ஆடையாக அணிந்துளான் என்பதும், இவையெல்லாம் உளத்தைக் கவர்தற்குரியவை யாதலால், உளமாகிய பேதை அவனைப் பற்றுதற் குரியளாயினள் என்பதும், அவ்வுளம் இவ்வுலக சுகத்தை ஒரு பொருளாகக் கொள்ள விழையாது நிலையான மறுமைப் பேரின்பத்தையே எய்துமென்பதும், பிறவும் உள்ளுறையாக இப் பாட்டில் அமைந்திருக்கும் நயத்தினைப் போற்றி யுணர்க. எனவே, உற்றுப் பார்க்கில், இறைவன் வாழ்க்கையும் பிறவும் மிக்க வியப்பினைத் தருவனவாம் என்க.