பக்கம் எண் :

105

Kachchik Kalambagam


மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

அணங்காறு தலையுள்ளார் அழகர் என்மான்
      அணங்காறு தலையுள்ளா ரானார் அந்தோ
வணங்கூடு தலனலைப்பற் றுற்று மின்னாள்
      வணங்கூடு தலனலைப்பற் றறுத்தல் ஓரார்
கணம்புரத்தைச் சாம்பருவந் திழைத்தார் கன்னற்
      கணம்புரத்தைச் சாம்பருவங்  குலைப்ப துன்னார்
பணமொளிக்கும் பணிதரித்தார் கச்சி யீசர்
      பணமொளிக்கும் பணிபரித்தார் பான்மை யுற்றே.        (72)

(இ-ள்.) அணங்கு ஆறு தலை யுள்ளார் - தெய்வத் தன்மையுள்ள கங்கையைச் (தலையில்) சடையில் பொருந்தப் பெற்றவர், அழகர் - அழகுடையவர், என் மான் - என் மான் போன்ற மகளின், அணங்கு - வருத்தம் (மையல் நோய்), ஆறுதலை - தணிதலை, உள்ளார் ஆனார் - நினைக்காதவராயிருந்தார், அந்தோ - ஐயோ, வணம் - நிறம், (ஒப்பனை குணம்), கூடுதல் - பொருந்துதலான, அனலைப் பற்று உற்று - நெருப்பு வடிவம் பொருந்தத் தாங்கி நின்று, மின்னாள் - மின்னல் போன்ற தலைவி, வணங்கு - வழிபாடு செய்தலால், ஊடுதல் - புலவியால், அனலை - காமமாகிய நெருப்பினை, பற்று அறுத்தல் - அடியோடு தணித்தலை, ஓரார் - உணரமாட்டார், கணம் புரத்தை - கூட்டமாகிய (திரி) புரங்களை, சாம்பர் - சாம்பராகும்படி, உவந்து இழைத்தார் - மகிழ்ந்து செய்தார், கன்னற்கண் - கரும்பாகிய வில்லிடத்தினிருந்து, அம்பு - (வெளிவரும்) அம்புகள், உரத்தை - தலைவியின் மாண்பினை, சாம் பருவங் குலைப்பது - சாகும்படியான நிலைமையில் வைத்து அழிப்பதனை, உன்னார் - நினைக்கமாட்டார், பண மொளிக்கும் - படத்தைக் குவிக்கும், பணி தரித்தார் - பாம்பை அணிகலனாகப் பூண்டவரும், கச்சி ஈசர் - காஞ்சியின் கண் உள்ள தலைவர், பான்மை உற்று - நல் அருள் பொருந்தி, பண மொளிக்கும் - விலைமதிக்கத்தக்க, பணி பரித்தார் - என் ஆபரணங்கள் கழலும்படிச் செய்தார்.

பண் அம் ஒளிக்கும் பணி - அழகோடு அமைவு விளங்கும் என் தொண்டினை, பான்மையுற்று - தகுதியுற்று, பரித்தார் - ஏற்றுக்கொண்டார் எனலுமாம்.

தான் தீ வண்ணராயிருந்தும் தலைவியினது காமத்தீயை ஒழித்தலை நினையார்.

கச்சி யீசர் பணி பரித்தார் பான்மையுற்று உள்ளார், ஆனார், ஓரார், உன்னார் எனக் கூட்டுக.