அறுசீர்
ஆசிரிய விருத்தம்
அருணைப்
பதியின் அழலுருக்கொண்
டமைந்த கச்சி அங்கணர்முன்
பெருமைப் புரத்தை அழிவெப்பும்
பிழைத்த மதற்கொல் விழிவெப்பும்
கருமைப் பகடூர் காலனைக்காய்
வெப்புந் தணியப் பழவடியார்
அருமைத் தமிழின் னமுதூறு
மழையைச் சொரிந்தார்
தெரிந்தாரே. (80) |
(இ - ள்.)
அருணைப் பதியின்-திருவருணைப் பதியின்கண், அழல் உருக் கொண்டு - நெருப்பு வடிவமே கொண்டு
தங்கியவர், அமைந்த - அவ் வழலுரு விடுத்து அமுத வடிவமே கொண்டு அமைந்ததால், கச்சி
அங்கணர் - காஞ்சியில் அருள் பெருகும் அழகிய கண்ணை யுடையராதற்கு, அவ் வழலுருவிலே
நின்ற அழலேயன்றி, முன்-முற்காலத்தில், பெருமைப் புரத்தை-பெருமை பொருந்திய மூன்று
எயில்களை, அழி வெப்பும் - அழித்த காலத்துத் தோன்றிய நகை வெப்பமும், பிழைத்த
- தனக்குத் தவறு செய்த, மதன் கொல் - மன்மதனை எரித்த, விழி வெப்பும் - நெற்றிக்கண்
வெப்பமும், கருமைப் பகடு ஊர் - கரிய எருமைக் கடாமீது ஊர்ந்து வந்த, காலனை - எமனை,
காய் வெப்பும் - அழித்த காலத்துத் தோன்றிய கால் வெப்பமும், தணிய - தணியும்படி,
பழ வடியார் - பழமையாகத் தொண்டு பூண்டு ஒழுகிய அடியார்கள், அருமைத் தமிழின் - தாம்
பாடிய அருமையான தமிழ்ப் பாசுரங்களாகிய, அமுதூறு மழையை- அமுது சுரக்கின்ற
மழையை, சொரிந்தார் - பெய்தனர், தெரிந்தாரே - (அந்த அடியார்களே தக்க விரகு)
அறிந்தவர்கள்.
சிவபெருமானுடைய அழ லுருவமும், அழற் கண்ணும், அழல் நகையும்,
அழற் காலும் கொண்ட அழல் தணியத் தேவார ஆசிரியர்களாகிய பழைய அடியார்கள் தாங்கள்
பாடிய அமுதமயமான தமிழ்ப் பாடல்கள் பாடினதா லன்றோ, இன்று யாவரும் அவ் வமுதமயமான
இறைவனாகிய கச்சி யெம்பெருமானைப் பாடி எளிதில் பேரின்பத்தை யடையும் வழி பெற்றிருக்கின்றனர்.
தமிழின் இயற்கையான பண்பு இருந்தவாறு என்னே! என்ற
கருத்து இப் பாடலின்கண் அமைந்துள்ளது.
பழைய அடியார் - மூவர் முதலிகள் முதலியோர். அமுது-இனிமை,
முத்தி.
அங்கணர் - அமுதமூறும் அழகிய கண்ணையுடைய சிவபெருமானார்.
நகையும், விழியும், காலும் வெப்பு (அழல்) ஆகவும் தமிழ் மழையாகவும், முத்தி அமுதமாகவும்
உருவகப்படுத்தியிருக்கும் நயம் அறிந்து இன்புறற்குரியது. தமிழினிடத்து ஆசிரியர்க்குள்ள
அளவில்லாத மதிப்பும் பற்றும் இப்பாடலின் கண் இனிது விளங்குவனவாம்.
கயிலையில் அமுதவடிவினராயிருந்த சிவபெருமானாரது அணுக்கத்
தொண்டராக இருந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர் முதலியவர்கள் இவ்வுலகின்கண் வந்து
அவதரித்ததால், அச் சிவபெருமானார் அழல் வடிவம் நீங்கி அமுதவடிவம் கொண்டுறையும்
பேற்றினை நாமெல்லாரும் பெறுதல் நேர்ந்தது. அதுவும் காஞ்சிப்பதியில் அவ் வடிவம்
நிலைபெறுவதாயிற்று. பழைய அடியவர்கள் வந்து தமிழால் பாசுரங்கள் பாடியிலரேல், நாம்
முத்தியின்பமே பெறுதல் முடிந்திராது. ஆகவே, அவ் வடியார்கட்கு நாம் என்ன தான் கைம்மாறு
செலுத்தக்கடவேம் என்று அடியார் பால் ஆசிரியர் காட்டும் அன்பும் மதிப்பும் இப்பாடலில் பொங்கி
வழிதலையும் காணலாம்.
|