பக்கம் எண் :

114

Kachchik Kalambagam


தரவு கொச்சகக் கலிப்பா

மழைகொண்ட வுச்சியினார் வளங்கொண்ட கச்சியினார்
உழைகொண்ட கரத்தொழிலும் உமைகொண்ட விடத் தெழிலும்
கழைகொண்ட மதனழியுங் கனல்கொண்ட நுதல்விழியும்
இழைகொண்ட உரத்தழகும் எமக்கினிய அமுதாமே.                     (81)

(இ - ள்.)  மழை கொண்ட உச்சியினார் - மேகங்களைத் தம் சடையில் ஒடுக்கிக்கொண்ட முடியை உடையாரும், வளங்கொண்ட கச்சியினார் - மூவளங்களையும் கொண்ட கச்சியம்பதியில் எழுந்தருளியவரும் ஆய ஏகாம்பரநாதனாரது, உழை கொண்ட கரத் தொழிலும் - மானை யேந்திய கையின் தொழிலும், உமை கொண்ட இடத் தெழிலும், உமாதேவியைக்கொண்ட இடப் பாகத்தின் அழகும், கழை கொண்ட மதன் - கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன், அழியுங் கனல் கொண்ட நுதல் விழியும் - அழியத்தக்க நெருப்பைக்கொண்ட நெற்றி விழியும், இழை கொண்ட உரத் தழகும் - பூணூலைக் கொண்ட மார்பினழகும் (ஆகிய இவையெல்லாம்), எமக்கு இனிய அமுதாமே - அமுதம்போல எமக்கு இன்பம் தருவனவாம்.

இழை - பூணூல்.

வளம் - நீர்வளம், நிலவளம், குடிவளம்.

‘உமை கொண்ட விடத் தெழிலும்’ என்பதற்கு, உமாதேவி செய்த விரகினால் மிடற்றில் நஞ்சு தங்க, ஏற்பட்ட அந் நஞ்சின் (விடத்தின்) அழகும் எனவும் பொருள் கொள்ளலாம்.

இழை - அணிகலமும் ஆம்.

மழை - மேகத்திற்குக் காரியவாகு பெயர்.