பக்கம் எண் :

121

Kachchik Kalambagam

 

மடக்கு

கட்டளைக் கலிப்பா

பரவை யாலம் பருகிய அண்ணல்விண்
      பரவை யாலம் பயின்றொரு நால்வர்தந்
தெரிவை யங்கடி செய்யர்ப ரவையாந்
      தெரிவை யங்கடி யர்க்கருள் செம்மலார்
சிரமந் தாகினிச் செஞ்சடை யார்தொண்டர்
      சிரமந் தாக்கு திருக்கச்சி நாதர்தீ
யரவ மாலை அழித்தெனைக் காப்பரால்
      அரவ மாலை அணிந்தருள் கத்தரே.                (88)

(இ - ள்.)  பரவை - கடலில் தோன்றிய, ஆலம் - ஆலகால நஞ்சை, பருகிய அண்ணல் - உண்ட சிவபெருமானார், விண் பரவு - விண்ணோர் துதிக்கும்படியான, ஐ - அழகிய, ஆலம் பயின்று - கல்லால மரத்தின்கீழ் இடைவிடாது வீற்றிருந்து, ஒரு நால்வர்தம் - சனகர் முதலிய நால்வருக்குத் தோன்றிய, தெரிவு ஐயம் - ஆராயக்கூடிய ஐயப்பாடுகளை, கடி - நீக்கும், செய்யர் - செம்மேனியர், பரவையாம் தெரிவை - (அவர் திருவாரூரிலுள்ள) பரவை என்னும் நாச்சியாரை, அங்கு - அத் திருவா ரூரில், அடியார்க்கு - சுந்தரமூர்த்திகளுக்கு, அருளிய செம்மலார் - அருளிய தலைவர்; சிரம் - மேன்மையுற்ற, மந்தாகினி - ஆகாய கங்கையை, செஞ்சடையார் - சிவந்த சடையிடத்துக் கொண்டவர், தொண்டர் சிரமம் - அடியார்களுடைய துயர்களை, தாக்கு - விரைந்து நீக்குகின்ற, திருக்கச்சி நாதர் - திருக்கச்சியில் எழுந்தருளிய தலைவர், தீயர் அவம் மாலை அழித்து - கொடியரால் உண்டாக்கப்பட்ட பயனில்லாத மனக்கலக்கத்தை ஒழித்து, எனைக் காப்பர் - என்னைக் காப்பார், அரவ மாலை - பாம்பணியை, அணிந்தருள் கத்தர் - அணிந்தருளிய தலைவர்.

அண்ணலும், செய்யரும், செம்மலாரும், சடையாரும், நாதருமாகிய கர்த்தர் மாலை அழித்துக் காப்பர் என முடிக்க.  ஆல் - அசை.

அண்ணல், செய்யர், செம்மலார், செஞ்சடையார், நாதர், கத்தர் என்பன ஒரு பொருள் பல பெயரடுக்கிக் காப்பர் என ஒருவினை கொண்டன.

‘கர்த்தர்’ என்பது, கத்தர் எனச் சிதைந்துநின்றது.