தழை
எழுசீர்
ஆசிரிய விருத்தம்
கத்தனார்
மகிழ்ந்த கச்சிவெற் புடையாய்!
காமனு மயங்குறு கவினார்
அத்தநீ அளித்த மாந்தழை அரிவைக்
காருயிர் அளித்தகா ரணத்தால்
சுத்தனாம் அநுமன் சானகிக் களித்த
துணையமை ஆழியோ? இந்த்ர
சித்தனான் மடிந்த கவிக்குலம்
பிழைப்பச்
செய்தசஞ் சீவியோ தானே.
(89)
(இ - ள்.)
கத்தனார் - யாவருக்கும் தலைவராகிய ஏகாம்பரநாதர், மகிழ்ந்த - மகிழ்ச்சி கொண்ட,
கச்சி வெற்புடையாய் - காஞ்சியினது வெற்பை இடமாக உடையோரே!, காமனும் - மன்மதனும்,
மயங்குறு - மயங்கத்தக்க, கவின் ஆர் - அழகு வாய்ந்த, அத்த - தலைவரே!, நீ அளித்த
- நீர் கொடுத்த, மாந்தழை - மாந்தழையானது, அரிவைக்கு-என் தலைவிக்கு, ஆருயிர்-அரிய
உயிரை, அளித்த காரணத்தால் - கொடுத்த காரணத்தால், சுத்தனாம் அநுமன் - பரிசுத்தனாகிய
அநுமன், சானகிக்கு - சானகி என்பாளுக்கு, அளித்த - கொடுத்த, துணை யமை - பிரிவாற்றுந்
துணையாகப் பொருந்திய, ஆழியோ - இராமனது அடையாள-மோதிரம் போன்றதோ?, (அன்றி)
இந்தரசித்தனால் - இந்திரச் சித்தனால், மடிந்த - இறந்த, கவிக்குலம் பிழைப்பச்
செய்த - குரங்கின் கூட்டம் உயிர் பிழைக்கும்படிச் செய்த, சஞ்சீவியோ - இறவாமையைத்
தரும் சஞ்சீவி மருந்து போன்றதோ யானறியேன்.
இது, தோழி கூற்று.
சீதை உயிர் விடத் துணிந்தபோது, அனுமன் கொடுத்த மோதிரத்தை
அவள் ஏற்றுக் கொண்டமையின் உயிர் பெற்றது போலவும், இந்திரச்சித்தனால் மடிந்த
குரங்கின் கூட்டம் சஞ்சீவி மலையால் உயிர் பெற்றமை போலவும் நீ கொடுத்த தழையைத்
தலைவி ஏற்றமையால் உயிர் பிழைத்தனள் என்றாள் தலைவனிடத்துத் தோழி என்க.
தான், ஏ அசை. |