பக்கம் எண் :

125

Kachchik Kalambagam


அறுசீர் ஆசிரிய விருத்தம்

அதிக மன்றெளி யேந்துயர் புரிந்திடும்
      அறக்கடை ஆயுங்கால்
துதிகொள் ஏகம்ப வாணனார் தூயவர்
      இதயவா லயத்தூடு
குதிகொள் இன்புரு வாயவர் மாதொரு
      கூறுடைக் கோமானார்
நதிகொள் வேணியர் நாடுவோர் தமக்கமை
      நலத்தினைத் தெரிந்தாரே.                        (92)

(இ - ள்.)  துதி கொள் ஏகம்ப வாணனார் - அடியார்களது துதியைக்கொண்ட திருவேகம்பத்தில் வாழ்பவராய ஏகாம்பரநாதர், தூயவர் - அழுக்கற்றவரது, இதய ஆலயத் தூடு - மனமாகிய கோயிலினிடத்து, குதி கொள் இன்புருவாயவர் - பெருகுதல் கொண்ட இன்பமே வடிவமாய் உள்ளவர், மாதொரு கூறு உடைக் கோமானார் - உமையைத் தம் இடப்பக்கத்தே உடைய பெருமானார், நதி கொள் வேணியர் - கங்கையைத் தாங்கியிருக்குஞ் சடை முடியை உடையவர், நாடுவோர் தமக்கு - தம்மை நாடுபவர்க்கு, அமை நலத்தினை - அளித்தற்கு ஏற்ற நலத்தினை, தெரிந்தார் - தெரிந்தவராதலால், எளியேம்-அவரை நாடுகின்ற எளியேம், புரிந்திடும் அறக் கடை - செய்யும் தீவினைத் தொழிலை, ஆயுங்கால் - ஆராயுமிடத்து, துயர் அதிக மன்று - (அவர் தெரிந்து தர யாம்) நுகரும் துயர் அதிகம் அன்று.

எளியேம் என்பதால், ஆசிரியர் தம்மொடு முன்னிலையாரையும் படர்க்கையாரையும் கூட்டிக்கொண்டு கூறுகிறார் என்க.

இனி, ‘எளியேன்’ என ஒருமையிற் பன்மை வந்த மயக்கம் என்பாரு முளர்.  குதி கொளல் - குடி கொள்ளல்.

தூயவரும் இன்புரு வாயவரும் கோமானாரும் வேணியரும் ஆகிய ஏகம்பவாணனார் தம்மை நாடுபவருக்கு ஏற்ற நலத்தினைத் தெரிந்து அருள் செய்பவராதலால், அவரை நாடுகின்ற எளியேம் புரிந்திடும் அறக்கடையை ஆராயுங்கால் எளியேம் அனுபவிக்கும் துயர் அதிக மன்று.  ஆகவே, அவர் அருளுடையவரே.