பக்கம் எண் :

13

Kachchik Kalambagam

கச்சிக் கலம்பகம்

மூலமும் உரையும்

உரைப் பாயிரம்

      இது காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர்மீது பாடிய கலம்பகம் என்னும் நூல்.  கலம்பகம் கலப்பாகிய செய்யுட்களை உடையது.  கச்சி என்பது காஞ்சிபுரம்; மரூஉ. காஞ்சிபுரம்: காஞ்சி மரங்கள் மிகுதியாக உள்ள ஊர்.1

      ஒரு போகு, வெண்பா, கட்டளைக்கலித்துறை என்பனவற்றை முதலில் கொண்டு பின்னர்ப் புயவகுப்பு, அம்மானை, சம்பிரதம், மறம், பாண், சித்து முதலிய உறுப்புக்களைப் பெற்று முடியும் நூல் கலம்பகம் என்பதாம்.  மடக்கு, சந்தம் முதலியனவும் கலம்பகத்தில் வரும்.  நூல் அந்தாதித் தொடையாகச் செல்லும்.

      காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரம் உடையாரைப் பற்றியது ஆகலின், கச்சிக் கலம்பகம் என்பது கச்சியைப் பற்றிய கலம்பகம் என இரண்டாம் வேற்றுமை யுருபும் பொருளும் உடன் தொக்கதொகை மொழியாய் நூலை உணர்த்தி நின்றது.

      இனிக் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதர் மீது பாடிய கலம்பகம் என ஏழாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன் தொக்க தொகை யன்மொழி யெனலும் ஆம்.

      தில்லைக் கலம்பகம், வெங்கைக் கலம்பகம், புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்பனவும் இங்ஙனமே விரிதல் காண்க.

      கலம்பகம் - கலப்பு + அகம். கலப்பு என்பது மெலிந்து கலம்பு என நின்றது. (கலம்பகத்திற்கு உறுப்பாக அமைந்த) பல துறைகள் கலத்தலைத் தன்னகத்தே கொண்டநூல் என்பது பொருள்.

 

1 காஞ்சி என்பது கஞ்சி என வடமொழியில் திரிந்து வழங்கிப் பின்னர் கஞ்சி என்பது கச்சி எனத் திரிந்தது எனலாம். கடம்ப வனம் கடம்ப மரங்கள், மிகுதியாக உள்ள ஊர் மதுரை.  தில்லை மரங்கள் மிக்குள்ளது, தில்லை (சிதம்பரம்). திரு ஆலங்காடு, திருவேற்காடு (வேல் - வேலமரம்), திருப்பனங்காடு, ஆர்க்காடு, ஆர் - ஆத்திமரம் முதலியன காண்க.  பழையனூர் என்பதை ழகர எழுத்தில்லாத வடமொழியில் புராதனபுரம் என்று தவறாக வழங்கினர்.  பழையன் என்னும் சிற்றரசன் நிறுவிய ஊர்.  நிறுவிய புராதனபுரம் - பழைய ஊர்.