வெறி விலக்கு. - பொழிலகத்தே தனித்துநின்ற
ஒரு மங்கையைக் கண்டு, தனிப்பட்டு வந்த தலைவன் காதல்கொண்டு இன்புற்றனனாக, அவன்
பிரிவை ஆற்றாமல் வருந்தி, உடல் நோயுற்றதாகக் கண்டார் நினைக்கும்படி, அவள் வாடியிருப்பதைக்
கண்ட செவிலித் தாய், (வளர்ப்புத் தாய்) தெய்வக் குற்றமென நம்பி, வேலனை (வேல்
ஏந்தி முருகக்கடவுளை வழிபடுபவனை) வரவழைத்து, அவனைக்கொண்டு ஆடு பலியிடுதல் முதலியன
செய்வள்; நோய் தீராது. காதல் கொண்டமையே மேனி வாடியதற்குக் காரணமாதலால், வேலன்
வெறியாடுதலைத் தோழி விலக்குவள். வெறி - வேலன் ஆவேசங்கொண்டு ஆடுதல். விலக்கல்
- விலக்கி விடுதல்.
சம்பிரதம். - இந்திரசாலம்.
கொற்றியார். - தலை மொட்டையடித்துக்கொண்டு,
வைணவர் சின்னம் அணிந்து, சூலம் முதலிய கையில் தாங்கிக் கொண்டு, தெருவில் பிச்சை
எடுத்துக்கொண்டே வருகிற மகளிரை நோக்கி, வேட்கையுற்றான் ஒருவன் தன் வேட்கையைப்
புலப்படுத்திக் கூறுவது. கொற்றி - துர்க்கை. இம் மகளிரும் சூலம் முதலிய ஏந்தி வருவதால்,
துர்க்கைபோல் உள்ளார் ஆதலின், கொற்றியார் எனக் கூறப்பெற்றார்.
தழை. - தலைமகன் பூந்தழை யுடை (கதம்பம் போன்றது)
ஏந்திக்கொண்டு, தோழியிடம் குறைகூறித் தழையைக் கொடுப்பான். தோழி அதனை ஏற்றுக்கொண்டு
தலைமகளிடம் சென்று அத்தழையின் அருமையைப் பாராட்டித் தலைவியை ஏற்றுக் கொள்ளும்படி
செய்வாள். தோழி தலைவனிடம் வந்து தலைமகளது விருப்பத்தைத் தெரிவிப்பாள்.
குறம். - குறத்தி தலைவிக்கு அவள் காதலித்த
தலைமகனது வாய்ப்பைக் குறி தேர்ந்து கூறுவது; குறத்தி மணம் முதலிய செயல்களைக் குறித்துக்
குறிபார்த்துச் சொல்லுவது இப்பொழுதும் வழக்கம்.
-------
|