மருட்பா. - செவியறிவுறூஉ இயற்றுவதற்கு அமைந்த
செய்யுள் இலக்கணம். ஒரு செய்யுளிலேயே வெண்பா முற்பகுதியாகவும், அகவல் பிற்பகுதியாகவும்
அமைத்துப் பாடுவது.
பாண். - தலைவி பாணனோடு வெகுளுதல். தலைவன்
பரத்தையர்பால் சேர்தற்பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிவான். பிரிந்தவன் சிலநாட்
கழித்தபின் தலைவியிடம் வரக் கருதித் தன் ஊடல் (சினம்) கொண்டிருக்கும் தலைவியிடம்
பாணனை அனுப்புவான். அப்பாணன் அத்தலைவியினிடத்து அவள் தலைவன்பால் நெஞ்சு உருகும்படி
எடுத்துப் பேசி அவள் சினத்தைத் தணிப்பன். தலைவி பாணனை வெகுண்டு கூறுதல் பாண் எனப்படும்.
நெஞ்சுவிடு தூது. - தலைவனிடத்துத் தூது செல்லும்படி
நெஞ்சை முன்னிலைப்படுத்திக் கூறுவது.
ஊசல். - ஊசல் - ஊஞ்சல். மகளிர் ஊசலாடிக்
கொண்டே தலைவன் பெருமைகளை எடுத்துப் பாடுவதாகக் கூறுவது. இது ஆசிரிய விருத்தத்தினாலாவது
கலித்தாழிசையினாலாவது ஆடீர் ஊசல், ஆடாமோ ஊசல், ஆடுக ஊசல் எனுமாறு செய்யுளின் முடிவில்
அமையக் கூறுவது.
மதங்கி. - ஒரு இளமாது தன் இரண்டு கைகளிலும்
வாளாயுதத்தை ஏந்திச் சுழற்றிக்கொண்டே தானும் சுழன்று ஆடும் போது, அம்மாதிடத்து
ஒருவன் காமங்கொண்டு, தனக்குண்டான காமத்தை வெளிப்படுத்திக் கூறுவதாக அமைத்துப் புலவர்
செய்யுள் இயற்றுவது.
இடைச்சியார். - தெருவிலே பால் தயிர் விற்று
வரும் ஆயர் குலத்து மகளை நோக்கி, ஒருவன் கண்டு காதல் கொண்டவனாய்த் தனது காதலை
வெளிப்படுத்தி, அம் மங்கையை முன்னிலையாக்கிச் சொன்னதாகச் செய்யுள் அமைப்பது.
குறிஞ்சி நிலத்திற்கும் மருதநிலத்திற்கும் இடையிலே யுள்ள முல்லைநிலத்தில் வாழ்ந்த
மக்கள் இடையரெனப்படுவர்.
வண்டுவிடு தூது. - தலைவனைப் பிரிந்த தலைவி
தன் காதல் துன்பத்தைத் தெரிவிக்கத் தலைமகனிடம் தூதாகச் செல்லும்படி வண்டைப் பார்த்துச்
சொல்லுவது. வண்டு, தலைவன் தோளிலுள்ள மாலையில் சொரியும் தேனை உண்ணச் செல்லும்.
உண்டு மகிழ்ந்து தலைவியினது குறையைத் தலைவனது செவியிலே பொருந்தக்
கூறும் என்பது.
|