இரங்கல். - இரங்கல் - (நெஞ்சு) இரங்குதல்.
தலைவனைப் பிரிந்து தனியே இருக்கும் தலைமகள் தன் பிரிவை எண்ணிக் கடலோரத்திலுள்ள பொருள்களைப்
பார்த்து இரங்கிக் கூறுவது.
தூது (கிளி). - கிள்ளைவிடு தூது (கிள்ளை - கிளி).
தலைவி தலைவனிடம் கிளியைத் தூதாக அனுப்பியது.
மேகவிடு தூது. - தலைவி தலைவன்பால் மேகத்தைத்
தூதாக அனுப்பியது.
கைக்கிளை மருட்பா. - பொழில் அகத்தே தலைமகளோடு
வந்த தோழியர் நீங்கத் தனித்துநின்ற தலைமகளைத் தலைமகன் கண்ணுறுவான். வேட்டையாடும்
நோக்கத்தோடு உடன்வந்த தோழர்கள் தலைவனைவிட்டுப் பிரிவர். தனித்துநின்ற தலைவன்
தனித்துநின்ற தலைமகளை எதிர்ப்பட்டு, இவள் தெய்வப் பெண்ணோ? என்று ஐயுற்றுப் பின்பு
மாலை வாடுதலால் நில உலகத்து மகளே என்று தெளிவான். இது தெளிதலைக் கூறும் ஒருதலைக்
காமம். கைக்கிளை, ஒரு பக்கம்.
மறம். - ஓர் அரசன் மறவர் மகளைத் தனக்கு
மணம் பேசி முடிக்கும்படி ஒரு தூதனை அனுப்ப, மறவர்கள் அத் தூதுவனைப் பார்த்து மணவினை மறுத்தும்,
தூதனுப்பிய அவ்வரசனை இகழ்ந்து பேசியும், தூதனை அனுப்பிவிடுவதாகப் புலவர் பாடுவது.
சித்து. - இரசவாதம் செய்பவர்கள் தமது ஆற்றலை
ஒருவனிடத்து எடுத்து விளக்குவதாகச் செய்யுளியற்றுதல். இரசவாதம் என்பது இரும்பு செம்பு
முதலியவற்றைப் பச்சிலைகளால் புகையிட்டுப் பொன்னாக மாற்றுதல்.
செவியறிவுறூஉ. - அரசாட்சி செய்யும் அரசன்
செங்கோன் முறைமை தவறாது நடத்துதல் வேண்டித் தான் ஆளுகின்ற நாட்டிற்கு நன்மை தரும்
அறத்தின் நிலையை ஆராய்ந்துகொண்டிருப்பான். அத்தகைய உள்ளப்பான்மை வாய்ந்த அரசனுக்கு
அன்புடைய பெரியோர், உலக நன்மையைக் கருதி தான் உணர்ந்த பெரிய நிலைத்த அருங்
கருத்துக்களை, அவன் உள்ளத்தில் பதியும்படி அவன் காதின் வழியாக அறிவுறுத்தி வற்புறுத்துவது.
|