பக்கம் எண் :

9

Kachchik Kalambagam

 

கலம்பகச் செய்யுள் விளக்கம்

      கலம்பகமாவது, ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா, செவியறிவுறூஉ மருட்பா முதலிய பாவினங்கள் பெற்று, அம்மானை, வலைச்சியார், தூது (கிளி), இரங்கல், இளவேனில், தூது (மேகம்), கைக்கிளை (மருட்பா), மறம், சித்து, பாண், தூது (நெஞ்சு), ஊசல், மதங்கி, இடைச்சியார், தூது (வண்டு), வெறி விலக்கு, சம்பிரதம், கொற்றியார், தழை, குறம் முதலிய துறைகள் விரவி வர, ஒருவனைத் தலைவனாகக்கொண்டு பாடப்படுவதாம்.

      கலம்பகத்தின் இலக்கணம், தொல்காப்பியச் செய்யுளியலில் “விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்று குறித்ததனுள் அடங்கும்.  “விருந்து தானும் பழங்கதை மேலது அன்றிப், புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்துவரத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது” என்று விளக்கப்பெறுகின்றது.  ஆகவே, கச்சிக்கலம்பகம் விருந்தாகும் என்க.

      அம்மானை. - மூன்று பெண்கள் கூடி, பிரபந்தத் தலைவனது நன்மைகளைப்பற்றி நயம்படப் பேசிக்கொண்டே அம்மானை ஆடுவது. அம்மானை என்றது, அம்மனங்காய் என்று வழங்கும்.

      வலைச்சியார். - வலையன் ஆண்பால்; அவன் மகள் வலைச்சி. அவ் வலைச்சியைக் கண்டு விரும்பிய ஒருவன், அவ்வலைச்சியை முன்னிலைப்படுத்திக் காதல் புலப்படும் மொழிகளைப் பேசியதாகப் புலவர் செய்யுள் இயற்றுவது, வலைச்சியார் ஆகும்.  பெயரிடை நிலை; இகரம், பெயர் விகுதி; பெண்பாலைக் குறிக்கும்.