இவர் மோசூர் ஆலடிப்பிள்ளையார் புகழ்ப்பத்து என்றொரு நூலியற்றி, அதற்குத் தாமே உரை யெழுதி 1940-ல் வெளியிட்டிருக்கின்றனர். அந்நூலின் உரை முகத்தும், அகத்தும், பண்டைக்காலத்துத் தண்டமிழ் மக்களின் நாகரிக அறிவியல் நுட்பங்களும் வழக்கம் ஒழுக்கங்களும் பலபட விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.
இங்ஙனம் பல துறைகளில் தமிழ்த்தொண்டாற்றிய
இவர் சில தமிழ் நூல்களுக்கு உரை இயற்ற வேண்டுமென்னும் விருப்பம் மிக உடையவராயிருந்தனர். அவ் விருப்பின் வண்ணம் இக்
கச்சிக்கலம்பக உரை யொன்று, இவரால் இயற்றப்பட்டது இன்னும் இரட்டைப் புலவர் இயற்றிய திருவாமாத்தூர்க் கலம்பகம், படிக்காசுப்புலவர் இயற்றிய புள்ளிருக்குவேளூர்க்
கலம்பகம், தொழுவூர் வேலாயுத முதலியார் இயற்றிய மகிழ்மாலை கலம்பகம், சித்தாந்த சரபம் அட்டாவதானம் பூவைக் கலியாண சுந்தர முதலியார் இயற்றிய திருவொற்றியூர்க் கலம்பகம், திருமயிலை சண்முகம் பிள்ளை
இயற்றிய சந்தான குரவர் நான்மணிமாலை ஆகிய இவைகட்கும் உரைகள் எழுதி இருக்கின்றனர். இரட்டைப் புலவர் இயற்றிய ஏகாம்பரநாதர் உலாவிற்கு குறிப்புரை ஒன்றெழுதி
யிருக்கின்றனர்.
இவர் பேசும்
ஆற்றல் பெரிதும் உடையவர். ஆங்கிலத்தில் ஆங்கிலப்புலவர்
பலர் வியப்பெய்தும்வண்ணம் பேசுவர். இவர்
கல்லூரியிற் கற்குங்கால் தத்துவக்கலை (Philosophy) ஆசிரியராக இருந்த கல்லூரித் தலைமை ஆசிரியர் (Principal Dru) துரு என்பவரிடம் படித்தவர்களுக்கே ஒரு தனி மதிப்புண்டு. தமிழ்
மொழியில் பேச எடுத்த பொருளைப் பலபட விரித்துரைப்பதும், பல அடுக்குகளைச் செறித்துப் பேசுவதும் விரைந்து பேசுவதும், ஓயாது பேசுவதும் இவரது இயல்புகளாகும். தாம் கருதிய பொருளை எவ்வகையோர்க்கும் அஞ்சாது எடுத்துரைக்கும் நெஞ்சம் படைத்தவராகவும் இருந்தனர்.
இவர் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருப்பின் பல நூற்களை வெளியிட்டு, தமிழ் மக்கள் வளர்ச்சிக்குரிய ஆகய வேலைகள் பல புரிந்து தமிழ் அன்னையைப் பெரிதும் சிறப்பித்திருப்பர். இறைவன் திருவருள் இருந்தவண்ணம் 29-8-1945.ல் இவர்
எழுத்தறியும் பெருமான் இணையடிப் பேரின்பம் எய்துவராயினர்.
இப்பொழுது இவர் கான்முளைகளாக உள்ளவர்கள்
அருள்பிரகாசம் என்னும் மூத்த திருமகள், வாசுகி என்னும் இளைய திருமகள், இராமலிங்கம் என்னும் மூத்த திருமகன், தொல்காப்பியன் என்னும் இளைய திருமகன்,
பொன்முடியார் என்னும் மூன்றாம் திருமகள் ஆவர்.
|