பக்கம் எண் :

15

Kachchik Kalambagam

நால்வர் துதி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

தறையின்மிசைத் தமிழ்பெருகச் சைவநெறி
தழைப்பஅவ தரித்த சால்பின்
மறையுறைவாம் ஒருநால்வர் பதமலரைச்
சிரங்கொண்டு, மடத்தைப் போக்கிக்,
குறைவறுநால் தோற்றத்தின் உளதாய
துயரகலக் குறிப்பன்; அன்னோர்
பிறைசுமந்த சடையாரென் பிழைசுமந்த
கலம்பகத்தைப் பெறச்செய் வாரே.                   2

(இ-ள்.) தறையின் மிசை - நிலவுலகில், தமிழ் பெருக - தமிழ் மொழி தழைக்கவும், சைவ நெறி - சைவத் திருநெறி, தழைப்ப - செழித்தோங்கவும், அவதரித்த-அவதாரம் செய்த, சால்பின்-நிறைந்த தன்மையை யுடைய, மறை - தமிழ் வேதத்திற்கு, உறைவு ஆகும் - இருப்பிடமாகிய, ஒரு - ஒப்பற்ற, நால்வர் - ஞானசம்பந்தர் முதலிய நால்வருடைய, பத மலரை - திருவடியாகிய மலர்களை, சிரம் கொண்டு - தலைமேற் கொண்டு, மடத்தைப் போக்கி - (எனது) அறியாமையை நீக்கி, குறைவு அறு - குறைவற்ற, நால் தோற்றத்தின் - நால்வகைப் பிறப்பினிடத்து, உளது ஆய - உண்டாகிய, துயர் அகல - துன்பம் நீங்க, குறிப்பன் - எண்ணுவன். (அங்ஙனம் நினைத்தலாலே) அன்னோர் - அத்தகைய பெருமை வாய்ந்த நால்வர்கள், பிறை சுமந்த சடையார் - பிறைச் சந்திரனை அணிந்த சடையுடைய சிவபிரான், என், பிழை - குற்றம், சுமந்த-நிறைந்த, கலம்பகத்தை - கலம்பகம் என்னும் இந்த நூலை, பெறச் செய்வார் - ஏற்றுக் கொள்ளும்படி செய்வார்கள்.

தரை எனற்பாலது எதுகை நோக்கித் தறை எனத் திரிந்து நின்றது.  இனிக் கடலிலிருந்து தறிக்கப்பட்ட நிலப்பகுதி தறையென்று வழங்கி நிற்கின்றது.  எனலும் ஆம். அவதரித்த நால்வர் என்றமையால் எண்ணடியாகப் பிறந்த நால்வர் என வாளா பொருளாகாது செந்தமிழ்ப் பரமாசாரியராகிய சம்பந்தர் முதலிய நால்வரைக் குறிக்கும்.  நால்வர் என்பது தொகைக் குறிப்புச் சொல்.  ஐவரோடு குந்தி வந்தாள் என்புழிப்போல.  ஐவர் என்பது பாண்டவர்.  நால்தோற்றம் - நால்வகைத் தோற்றம்; முட்டையிற் பிறப்பது, வெயர்வையிற் பிறப்பது, கருப்பையிற் பிறப்பது, வித்திலிருந்து முளைப்பது.  நால் வகைத் தோற்றத்தில் பிறந்த உயிர்களின் துன்பம் நீங்குமாறு அவர் திருவடியை நான் என் மனத்தின்கண் கொள்வேன். அன்னோர் - அந்த நால்வர்.  பிறை - பிறை நிலா: ஒற்றைக் கலை சுமையா யிரா தெனினும் தக்கனது சாபத்தை ஏற்று வந்தமையால் அது சுமையாகத் தோன்றியது என்று குறிப்பித்தார்.  திங்களின் குறைபோக்குவதற் காகவே கலையை ஏந்தினா ரன்றித் தமக்குக் குளிர்ச்சி தரும்பொருட்டு ஏந்தினா ரல்ல ராகலின் பிறை சுமந்தார் என்றார்.  பிழை சுமந்த - சொல் வழு, பொருள் வழு, இலக்கண வழு, இலக்கிய வழு, இட வழு, கால வழு, மரபு வழு, முதலியனவாக மிகப் பல செறிந்துள்ள வழுச் சொல் உள்ளமையின் ‘பிழை சுமந்த’ கலம்பகம் என்றார்.

சடையார் என் கலம்பகத்தைப்பெற அன்னோர் செய்வர் என இயைக்க.