பக்கம் எண் :

31

Kachchik Kalambagam

 
முத்து - மேலானது. மேலான பொருளே!
முத்து - அழகு. சிவபிரான். நித்தம் அழகியார்
நிரம்ப அழகியார்
சித்தம் அழகியார்.     (திருவாசகம்)

அறத்தின் வித்தே - தருமம் முளைத்தற்கு விதையாக உள்ளவனே. (இன் - சாரியை) முக்கட் சித்தே - சோமசூரியாக்கினிகளாகிய மூன்று கண்களையுடைய அறிவுடைப்பொருளே! சத்தே - உண்மை உலவுத் திண்மைப் பொருளே. எத்தேவரும் - எவ்வகைப்பட்ட தேவர்களும், பணி - வணங்குகின்ற, அத்தா - தலைவனே; (அத்தன் - குரு; சிவன் - சிவகுரு) உடலில் அரைப்பகுதி உடையவனே, அன்னாய் - தாயே, அளிக்கு ஒரு வைப்பே - கருணைக்கு ஓர் இருப்பிடமாக உள்ளவனே, கத்தா என - கடவுளே என்று (கத்தா-கர்த்தா) கூய் - கூவி, கண்ணீர்த் ததும்ப - கண்களினின்றும் நீர் தேங்க, உள்ளம் நெக்கு உருக - மனம் நெகிழ்தலையடைய, உரோமம் சிலிர்ப்ப - மயிர் சிலிர்க்க.

விள்ளற்கு அரு - சொல்லுதற்கு அரிய, நின் மேன்மையை - நினது மேன்மையை, புகழும் - புகழுகின்ற, பாவலர் தமக்கு - பாக்களில் வல்ல வித்துவான்களுக்கு, பழ அனுகூல - பழமையாகிய நன்மை மிகுப்பவரே (அனுகூலன் - இதமாக நடப்பவன்: உதவி செய்பவன்) மேவலர் - பகைவர், வேர்அற - அடியோடு ஒழிய, வீறிய - கோபித்து ஒறுத்த, சீல - ஒழுக்க முடையவனே, (வீறியசீல - மேம்பட்ட ஒழுக்கமுடையவனே எனினும் அமையும்) மாது உமை - உமா தேவியானவள், பங்குறு - இடப்பாகத்தை உற்ற, மாண்புடைச் சீரிய - மாட்சிமையுடைய சிறப்புடையோனே, தீது எம்மை - எம்மைக்கெடுதி, அணுகாத்திறம் - சேராதபடி, அருள் - அருளிய, ஆரிய - மேன்மையுடையவனே; அழகுடையவனே. நால்வர் - திருஞானசம்பந்தர் முதலிய நால்வரின், இசைத்தமிழ் - இசையை உடைய தமிழ்ப் பாக்களது, நலனறி - நன்மையை அறிந்த, நாத - தலைவனே, (ஆரியன் - பெரியோன்: ஆசிரியன்)

மால்வரை மங்கை - பெருமை வாய்ந்த மலையரையன் மகளாகிய உமாதேவியின், மணாள - நாயகனே. நீத - நீதியை உடையவனே (நீதம் - நீதி) கொன்றைத் தொடை - கொன்றைப் பூவாலாகிய மாலையை, அணிகோனே - அணிந்த தலைவனே, கொன்றை, முதல் ஆகுபெயர். பசுபதி - உயிர்களுக்குத் தலைவனே, குன்றைக் குழைத்த - மலையை (மேருமலையை) வில்லாக வளையச்செய்த, கோது அறு - குற்றமற்ற, குணநிதி - எல்லாப் பண்புகளுக்கும் இருப்பிடமான பெருமானே!

கல்லாப் புல்லேன் - நூல்களைக் கல்லாத அற்பத் தன்மையை யுடையேன், கனிவரு மனத்தேன் - நெகிழ்தல் இளகுதலற்ற மனத்தை உடையேன், எல்லாப் பிழையும் - எல்லாத் தவற்றையும், இயற்றும் - செய்யும், ஏழையால் - ஏழையாகிய என்னால், சொலற்கு அரு - சொல்லுதற்கு அரிய, நின்புகழ் சொல்லப்படுமோ - எடுத்துப் பேசப்படுமோ, புரையறு - குற்றமற்ற, நின்பதம் - நின் திருவடி, புல்லப்படுமோ - பொருந்தப் படுமோ.

உத்தம - உயர்வு அமைந்த நற்பண்புகளுக்கு உறைவிடம், நின் எழில் - நினது அழகு, உன்னப் படுமோ - நினைக்கப்படுமோ, பகவ - பகவனே, நின் அருள் - நினது கருணை, பன்னப்படுமோ - துதிக்கப்படுமோ, பண்ணவ - பண்ணவனே, நின்சீர் - நின்சிறப்பு, பாடப்படுமோ - பாடப்படுமோ (பண்ணவன் - கடவுள்). (பண்ணவன் எண்குணன் - சிலப். 10. 188.)

சேவடி - நினது சிவந்த திருவடி, தேடப்படுமோ எனினும், தேடப்படுமோ என்றாலும், அல்உறு நஞ்சு - இருள் போன்றுள்ள கரிய விடமும், அரவு - பாம்பும், அக்கு - சிவக் கண் மணியும், மத்தமும் - கரு ஊமத்தையும், புல்லும் - அறுகம் புல்லும், உவப்புடன் - மகிழ்ச்சியோடு, புனைந்தென - புனைந்தாற்போல (புனைந்தென - புனைந்தாலென) கனிந்து - மனமிளகி, சிறு அறிவினன் - சிறிய அறிவை யுடையோனாகிய நான், உரை செய்யுளை - சொல்லிய பாட்டுக்களை மூவர்க்கு 1 ஐயனே - அயன், அரி, அரன் மூவர்க்கும் தலைவனே, முற்றும் நயப்பாய் - முழுமையும் விரும்புவாய்.

முதற் செய்யுள் முற்றும்.

 

1
மூவர் என்பார் அயன் அரி அரன் என்க.  அரன் கால தத்துவத்திற் குட்பட்டவனாதலால் அரன் சிவனல்லன்.  உருத்திரகோடி என்பர்.  ஆதலால் சிவன் உருத்திரனாகான்.  சிவம் சாந்தம் அத்துவைதம் சதுர்த்தம் மன்யந்தே. என்பது வேதம். சிவம் - மங்கலம் என்பர் வடமொழியாளர்.