பக்கம் எண் :

49

Kachchik Kalambagam


தூது (கிளி)

எண்சீர் ஆசிரிய விருத்தம்

சுகமே! மறைமா வடிமே வியவென்
      துணைவற் கெளியேன் துயரைப் பகர்வாய்
மகமே ருசிலைக் குனிவா னலனென்
      மதனன் கழையே வையம் புகைக்குஞ்
சகமேழ் அயின்றோன் பெயர்கொள் எளியேன்
      சரணா கதிசேர் தலைவேண் டினனென்
றகமே குழையப் புரிவா யெனில்யான்
      அயர்தீ தகலத் தருவாய் சுகமே.                    (17)

(இ-ள்) சுகமே - கிளியே, மறைமா அடி - வேதமாகிய மாமரத்தின் அடியில், மேவிய என் துணைவற்கு - விரும்பித் தங்கிய என் நாயகனுக்கு, எளியேன் துயரைப் பகர்வாய் - எளியேனது துக்கத்தைச் சொல்லுவாய்.

மகமேரு சிலை-அவன் வளைத்த மகமேரு மலையினது, குனிவால் - வளைவால், நலன் என் - எனக்குற்ற நன்மை யாது, மதனன் கழையே - மன்மதனுடைய கருப்பு வில்லே, வையம் புகைக்கும் - உலகத்திலுள்ள உயிர்களின் அறிவை மயக்கும்,

சகம் ஏழ் அயின்றோன் பெயர் - ஏழு உலகங்களையும் உண்டவன் பெயர் (மால்), கொள் எளியேன் - கொண்ட எளியேனாகிய யான், சரணாகதி - அவனது திருவடியை அடைதலை, வேண்டினென் என்று - விரும்பினேன் என்று சொல்லி, அகம் குழைய - அவனது மனம் குழையும்படி, புரிவாயெனில் - விருப்பத்தோடு செய்வாயானால், யான் - நான், அயர் தீது - தளர்தற்குக் காரணமாகிய தீமை, அகல - நீங்க, சுகமே தருவாய் - இன்பமே தருவாய் ஆவாய்.

என் - எவன் என்பதன் மரூஉ மொழி. சகம் ஏழ் அயின்றோன். பெயர் - மால் (திருமால்); மயக்கம்; பெயர்கொள் - மால் (மயக்கம்) கொண்ட (பரியாயபதம்) தீது - தலைவனைப் பிரிந்திருப்பது.