பக்கம் எண் :

50

Kachchik Kalambagam


கலிநிலைத் துறை


தீதறு நூலுணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே
காதலின் வாழே காம்பரர் முடியைக் காணவயன்
ஏத முறக்கோ எகினம் எனப்போய் முடிகாணா
வேதனை பெற்றோ வேதனை யுற்றாள் வெளியானாள்.           (18)

(இ-ள்) தீது அறு - குற்றமற்ற, நூல் உணர் - நூல்களை உணர்ந்த, தெள்ளிய சிந்தையர் - தெளிந்த கருத்தை உடையவரது, மனம் ஊடே - மனத்துள், காதலின் - விருப்பத்தோடு, வாழ் - வாழ்கின்ற, ஏகாம்பரர் - ஏகாம்பரநாதரது, முடியைக்காண - தலைமுடியைக் காணும்படி, அயன் - பிரமன், ஏதமுற - துன்பமுற, கோ - ஆகாயத்தில், எகினம் எனப்போய் - அன்னப்பறவையாய்ச் சென்று, முடி காணா - முடியைக் காணாத, வேதனை - வேதப்பொருளாகிய சிவனை, பெற்றோ - கூடியோ, வேதனை யுற்றாள் - துன்பப்பட்டிருந்த என் மகள், வெளியானாள் - வீட்டை விட்டு வெளிச் சென்றாள்,  இஃது உடன் போக்கு.

மனமூடு - ஊடு ஏழனுருபு, கோ - ஆகாயம், எகினம் - அன்னப்புள், வேதனை - மறையின் வடிவாகிய சிவபெருமானை: பெற்றோ என் புழி, பெறுதல் கூடுதல், வேதனை உற்றாள் - துன்பம் உற்றவளாகிய என் மகள் (வினையாலணையும் பெயர்). வேதனைப் பெற்றோ எனற்பாலது வேதனை பெற்றோ என நின்றது செய்யுள் விகார மென்க.