பக்கம் எண் :

56

Kachchik Kalambagam


கைக்கிளை

மருட்பா

பொங்கும் அருணயனப் பூவின் இதழ்குவியும்
இங்கு மலர்க்கோதை இதழ்வாடு - மங்குறவழ்
மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான்
குறையா வளக்கழுக் குன்றில்
உறைவா ளிவள்பூ வுதித்ததூ யவளே.(24)

(இ-ள்.) பொங்கும் அருள் - மிக்க அருளையுடைய, நயனம்
பூவின் - கண்ணாகிய பூவினது, இதழ்குவியும் - இமைகள் இமைக்கும்.  இங்கு - இவ்விடத்து, மலர்க்கோதை - இவள் அணிந்த பூ மாலையிலுள்ள, இதழ் வாடும் - மலர்களின் இதழ்கள் வாடும், மங்குல் தவழ் - மேகங்கள் தவழ்கின்ற, மாடம் - மாடங்களையுடைய, கச்சியில் வாழும் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய, எம்பெருமான் - எம்பெருமானாகிய ஏகாம்பரநாதரது, குறையா - குறையாத, வளம் கழுக் குன்றில் - வளப்பங்களையுடைய திருக்கழுக்குன்றத்தில், உறைவாள் - உறைபவளாகிய இத்தலைவி, பூ உதித்த - பூமியில் வந்து பிறந்த, தூயவள் - தூய்மை உடையாள்.

(மானிடப் பெண்ணேயாவள்.)

இமை குவிதலானும், கோதை வாடுதலாலும், மானிட மகள் என்று அறிந்து, தலைவன் ‘பொங்கும் அருள் நயனம்’ என்றதால் அவள் தன்னிடம் அருட்பார்வையுடையவளாய் இருக்கின்றாள் என்று உட்கொண்டமையால், ஒருதலைக் காமமாகிய கைக்கிளையாயிற்று.  ஒரு நோக்கு அந்நோய் மருந்து என்ற குறிப்புக் கொண்டு அருள் நயனம் என்றான் என்க.

முன்னிரண்டடிகளும் வெண்பா வடிகளாகவும் பின் மூன்றடிகளும் ஆசிரிய அடிகளாகவும் வந்தமையின் இது மருட்பாவாம்.

கைக்கிளை - ஒரு தலைக் காமம்.

எம்பெருமான் என்றது பாட்டுடைத் தலைவனை.

இவன் கண்ட பெண்ணின் கண் இமைத்தலும் மாலை வாடுதலும் ஆகிய செயல்களால் இவள் தெய்வ மகளல்லள்; மானிட மகளே எனத் தெளிந்தான் இத்தலைவன்.

(இத்தலைவன் - கிளவித் தலைவன்.)

கவி நாயகனுக்குத் தன் மலையையே யன்றிப் பிற மலைகளையும், பிற பதிகளையும் உரிமையாகக் கூறுதல் கவி மரபு ஆதலால் ‘கழுக்குன்று’ என்றார்.