பக்கம் எண் :

57

Kachchik Kalambagam


மறம்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

தூதுவந்த தொழிலிலாத வாவழக்கை அறிதியோ
தொல்லைநந்த மரபினோர்கொ டுந்தரக்கு வாரணம்
பூதலத்தி னிலையெனக்க லைவிழைத்த சிலையரே
பொன்றிணிந்த கொங்கைமான்ம கட்குறத்தி வள்ளிமுன்
போதகத்தை யேவியந்த மாதகத்தை யச்சுறப்
புரிந்தசெய்கை சாலுநுங்கு லம்புலப்ப டுத்திடச்
சூதவாழ்க்கை யார்துடிப்பி னாகம்வைத்த ஆண்மையார்
சொன்மறைக்க வாயதாங்கொ றோற்புணர்ந்தி சைத்ததே.             (25)

(இ-ள்.) தூதுவந்த தொழில் இலாதவா - தூதாக வருந்தொழிலுக்கு இயைபு இல்லாதவனே, வழக்கை அறிதியோ - எங்கள் வழக்கை (மரபை) அறிவையோ.

தொல்லை நம் தம் மரபினோர் - பழமையாக உள்ள நம்முடைய மரபில் உள்ள பெரியோர் அணிந்த, கொடுந்தரக்கு வாரணம் - கொடியபுலி, யானை (இவற்றின் தோலை அணியாது) பூதலத்தில் - உலகத்திலே, இலை கலை யென - இலையை ஆடையாக, விழைத்த - இச்சித்த, சிலையரே - வில்லேந்திய வேடரே, பொன் திணிந்த - பொன் அணிகலன் செறிந்த, கொங்கை - முலையை யுடைய, மான் மகள் குறத்தி வள்ளிமுன் - மானின் மகளாகிய குறத்தியாகிய வள்ளிநாயகி முன், போதகத்தை ஏவி - பிள்ளையாராகிய யானையைச் செலுத்தி, அந்த மாது அகத்தை - அந்தப் பெண்ணின் மனத்தை, அச்சுறப் புரிந்த செய்கை - அஞ்சும்படி செய்த செய்கை, சாலும் - போதும், நும் குலம் புலப்படுத்திட - (இவையே) நும் மரபின் பெருமையை விளங்கிடச்செய்ய, சூத வாழ்க்கையார் - மாமரத்தின் அடியில் வாழ்பவர், துடி பினாகம் வைத்த ஆண்மையார் - துடியையும் பினாகம் என்னும் வில்லினையும் உடையவர், ஆகிய தோற்பு உணர்ந்து - இவருடைய தோல்வியை உணர்ந்து, இசைத்தது - சொன்னதாகிய, சொல் மறைக்க - எங்கள் சொல்லை மறைக்க, வாயது ஆம் கொல் - வாயுண்டாகுமோ? (வேறு சொல் உண்டோ?)

இலாதவா, விளி வேற்றுமை.  இதற்கு முதல் வேற்றுமை இலாதவன்.  தரக்கு, வாரணம் - ஆகுபெயர்.  சூத வாழ்க்கையர் - சூதாடுவதில் மனமுடையவர்; வஞ்சனை செய்யும் வாழ்க்கையை உடையவர்.

துடிப்பினோடு கூடிய ஆகம் (மனத்தைக்) கொண்ட ஆண்மையார் எனினும் அமையும்.

ஆகம் - மார்பு: (மனம்) ஆகுபெயர்.

ஆண்மை: இகழ்ச்சிக் குறிப்பு.

வாயது: அது பகுதிப் பொருள் விகுதி.

சூதம் - மாமரம்.

புரிந்த செய்கையாவது: முருகன் விநாயகனைக் காட்டு யானையாக வள்ளிமுன் வரும்படி செய்தமை.