பக்கம் எண் :

76

Kachchik Kalambagam


கட்டளைக் கலித்துறை

இரந்துயிர் ஓம்பிட ஏழை மனங்கொதித் தின்னலுற
உரந்தொலைந் தோயப் பலநோய் உடற்ற உறுபசியால்
வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்தொழிவீர்!
திரந்தரும் ஏகம்ப வாணரை நீரென்கொல் சேர்கிலிரே.                (43)

(இ-ள்.) இரந்து உயிர் ஓம்பிட - யாசித்து உயிரைப் பாதுகாக்கவும், ஏழை மனங் கொதித்து - அறியாமையை உடைய மனம் கொதிப்புண்டு, இன்ன லுற - துன்பமுறவும், உரந்தொலைந்து ஓய - வலிவு கெட்டுச் சோர்த லடையவும், பல நோய் உடற்ற - பல நோய் வருத்தவும், உறு பசியால் - மிக்க பசியினாலே, வருந்துபு - வருந்தி, மானமும் தீரமும் மங்கி - பெருமையும் ஊக்கமும் குறைந்து, மடிந்து ஒழிவீர் - இறந்து ஒழிகின்றவர்களே, திரந் தரும் - நிலைபேறான வீட்டின்பத்தினைத் தரவல்ல, ஏகம்ப வாணரை - திரு ஏகம்ப நாதரை, நீர் சேர்கிலீர் - நீர் இடைவிடாது நினைக்கமாட்டீர், என் - அதற்கு என்ன காரணம்?

மடிந்தொழிவீர் - வினையாலணையும் பெயர்; விளியாக நின்றது.

என்ன காரணத்தினால் சேரமாட்டீர் எனினுமாம்.

சேர்தல் - இடைவிடாது நினைத்தல் (தியானித்தல்). “மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்” என்ற குறளில், ‘சேர்ந்தார்’ என்ற சொற்குப் பரிமேலழகர் இடைவிடாது ‘நினைந்தார்’ என்ற பொருள் கூறியிருத்தல் காண்க.  “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” ஆதலால், இறைவன் பொருள்சேர் புகழை விரும்புவாரும், மாணடியை இடைவிடாது நினைப்பாரும் இருவினையிலிருந்து நீங்குதலுறுவாராதலால், முன்னைய பிறப்புக்களில் இறைவனை நினைவு செய்யாத குறையால் இரந்து உயிர் ஓம்புதல் முதலிய இழிதொழில்களைச் செய்ய நேர்ந்தமை கண்டு இப்பிறப்பிலாயினும் அவ்விறைவனைத் தியானம் செய்யமாட்டாது காலங்கழித்தற்குக் காரணம் என்னையோ என்று ஆசிரியர் உலகினரைப் பார்த்து இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப் பாட்டு.

இரந்தாயினும் உயிர் ஓம்ப வேண்டுவது அறம்.  ஆதலால், அறவொழுக்கமுடையவரும் உயிர் ஓம்புதலை மட்டும் குறித்து ‘ஈ யென இரத்தல் இழிந்தன்று’ ஆயினும், இரக்க முற்படுவாராதலால் ‘இரந்து உயிர் ஓம்பிட’ என்றும், அங்ஙனம் இரக்குங்கால் நேரும் இழிவை நினைந்து ஓரோர் காலத்துத் துன்பமுறுவராதலால், ‘ஏழை மனங் கொதித்து இன்னலுற’ என்றும், அங்ஙனம் ஏற்படும் இழிவை நினைத்து இரக்குந் தொழிலின் நீங்கிச் சிலகால் நின்றாலும், பசித்துன்பத்தால் மனவலியில்லாது போவாராதலால் ‘உரந் தொலைந்து ஓய’ என்றும், அங்ஙனம் மனவலியும் உடல் வலியும் குறைதலால் பல நோய் உண்டாகி வருத்துமாதலால் ‘பலநோய் உடற்ற’ என்றும், அங்ஙனம் பசித்துன்பம் ஏற்படும்போது “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்” என்னும் பழமொழிப்படி மானம், நெஞ்சின் திட்பம் யாவும் இழப்பாராதலால் ‘மானமும் மனத்திண்மையும் மங்கி, என்றும், அங்ஙனம் பசித்துன்பத்திற்கு அஞ்சி, மானம் மனவுறுதி யாவும் விடுத்து உடலைப் பேணினும் அவ்வுடல் ஒருநாள் இறந்தொழியுமே யன்றி, நிலையாக நில்லாது; ஆதலால், ‘மடிந்தொழிவீர்’ என்றும், நில்லாத வுடல்கொண்டு நிலைபேறுடைய வீட்டின்பம் பெறுவதே மக்களுடம்பு எடுத்தார் மேற்கொள்ளத்தகுவதாதலின் ‘திரந்தரும் ஏகம்பவாணரை நீரென்கொல் சேர்கிலீரே’ என்றும் முறையாகக் கூறியிருக்கும் நயம் பாராட்டத்தக்கது.

‘சேர்கிலீர்’ என்ற சொல்லில், ‘கில்’ ஆற்றலுணர்த்தும் இடைச்சொல்.  இழிதொழில்களை யெல்லாம் செய்யும் ஆற்றலுடைய நீர், உயர் தொழிலாகிய இறைவனை நினைத்தற்கு ஆற்றல் ஏன் இல்லாதிருக்கின்றீர்? அங்ஙனம் இல்லாதிருப்பதற்கு வாயில் உங்கள் அறியாமையே யன்றி வேறின்று.

‘என்கொல்’ என்றதில், கொல் அசைநிலை.