பக்கம் எண் :

83

Kachchik Kalambagam


மதங்கி

அறுசீர் ஆசிரிய விருத்தம்


     ஆடரவம் அரைக்கசைத்த அமலர் திருக் கச்சிமறு
            காடி மைந்தர்
      ஊடுருவு பிணைவிழியோ டிணைவாளும்
            ஓச்சிவரும் ஒரும தங்கீர்!
      நாடவரும் இவைக்கிலக்கம் யாதோநும் மொழியமுத
            நல்கீர் விண்ணோர்
      பாடமையப் பயவாரி கடைந்துகரம் வருந்தியதென்
            பண்டு தானே.                   (50)


(இ-ள்.) ஆடு அரவம் -படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை, அரைக்கு அசைத்த - அரையில் கச்சாகக் கட்டிய, அமலர் - தூயோராகிய சிவபெருமான் எழுந்தருளிய, திருக்கச்சி மறுகு - அழகிய காஞ்சிபுரத்தின் தெருவில், ஆடி - அசைந்து, மைந்தர் ஊடு உருவு - ஆடவரது (உள்ளத்தை) உள் துளைத்துக்கொண்டு செல்லும், பிணை விழியோடு - பெண்மான் கண்போன்ற கண்களுடன், இணை வாளும் - இரண்டு வாள்களையும், ஓச்சி வரும் - வீசி வரும், ஒரு மதங்கீர் - ஒப்பற்ற மதங்கீர், இவை - இவைகள், நாட வரும் - நாடும்படி வருகின்ற, இலக்கம் யாதோ - கருத்து (குறிக்கோள்; உட்கிடை) யாதோ, நும் மொழி அமுதம் நல்கீர் - நும் சொற்களாகிய அமிர்தத்தைக் கொடுப்பீர் (சொல்லுவீர்), விண்ணோர் - தேவர்கள், பாடு அமைய - (மெய்) வருத்தம் பொருந்த, பய வாரி - திருப்பாற்கடலை, கடைந்து - கடைந்து, பண்டு - முற்காலத்தில், கரம் வருந்திய தென் - கை வருந்தியது என்ன காரணம்.

அசைத்த - சாத்திய (தொல். சொல். 250, சேனா.)

“புலித்தோலை அரைக்கு அசைத்து” (சுந். தேவா.)

இலக்கம் - குறிப்பொருள் (இலக்க முடம்பிடும்பைக்கு. குறள், 627.)

பாடு அமைய - பெருமையடைய எனவுமாம்.

பயவாரி: பயம் - பால்; வாரி - கடல்.

திருப்பாற்கடலைக் கடைந்து கை வருந்தியது எதற்கு? அமுதம் பெறுவதற்காக உன் மொழி யமுதம் விண்ணோர் பெற்றிருப்பரேல், அவ்வாறு  கடல் கடைந்து வருந்தியிரார்.  தான், ஏ - அசை.