பக்கம் எண் :

88

Kachchik Kalambagam

கட்டளைக் கலித்துறை

தேறா மனத்தைத் திருப்பித் தெளிவுறச் செய்துபின்னர்
ஆறாத மும்மை மலப்பிணி நீங்கநல் லாற்றினுய்ப்பர்
மாறா வளக்கச்சி மாநிழ லாரு வணன்றனக்குப்
பாறா தரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே.                   (55)

(இ-ள்.) மாறா வளம் கச்சி - மாறுபடாத வளங்களையுடைய காஞ்சி நகரத்தில், மா நிழலார் - மாமரத்தின் நிழலில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரும், தேறா மனத்தை - தெளியாத என் மனத்தை, திருப்பி - (பொறி வழிகளில் செல்லாவண்ணம்) திருப்பி, தெளிவுறச் செய்து - தெளிவு அடையச் செய்து, பின்னர் - பிறகு, ஆறாத - நீங்காத, மும்மை மலப் பிணி - ஆணவம், மாயை, கன்மம் என்னும் மூன்றாகிய மலநோய், நீங்க - ஒழியும்படி செய்து, நல் ஆற்றி னுய்ப்பர் - நல்ல வழியில் செலுத்துபவரும், உவணன் தனக்கு - கருடனுக்கு, பாறாது - அழிவு அடையாதபடி, அரவம் அணிந்தவர் - பாம்பை அணிந்தவருமான சிவபெருமானது, பேரருள் பாடுதும் - பெருமை வாய்ந்த அருளைப் பாடுவோம்.

சிவபிரான் அணிந்த பாம்பு கருடனுக்கு அஞ்சாது.  சிவபிரான் சடையில் இருக்கும் பாம்பு ‘ஏன் கருடா நலமா?’ என்று கேட்கும் என்பது பழமொழி. (காஞ்சிப்புராணம், மணிகண்டீச்சரப்படலம்.)

“பலியேல் - கடவுள் அவிர்சடை கட்செவி அஞ்சாதே, படர்சிறைஅப் புள்ளரசைப் பார்த்து” என்பது நோக்குக.