|
The Tamil rendering of this passage is as follows
நம்மாழ்வார் வரலாறு 'தேன றாமகிழ்த் தொடையலும் மௌலியுந் திருக்கிளர் குழைக்காதும் கான றாமலர்த் திருமுகச் சோதியும் கயிரவத் துவர்வாயும் மோன மாகிய வடிவமும் மார்வமும் முத்திரைத் திருக்கையும் ஞான தேசிகன் சரணதா மரையும்என் நயனம்விட் டகலாவே.'1
பாண்டி நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில், பெருநை, பொருநல் என்னும் பெயர் வழக்குடைய தாமிரவர்ணி நதிக்கரையில் உள்ள ஆழ்வார் திருநகரி என்று கூறப்படும் திருக்குருகூரில் வேளாளர் குலத்தில் திருமாலிடத்து வழிவழியாக அன்பு பூண்டொழுகுங்குடியிற்பிறந்த காரியார் என்ற ஒரு வைணவப் பெருஞ்செல்வர் இருந்தார். அவர் திருவெண்பரிசாரம் என்னும் திருப்பதியிலுள்ள திருவாழ்மார்பர் என்பவருடைய திருமகளாராகிய உடைய நங்கையார் என்பவரை மணம் புரிந்து, இல்லறம் மேற்கொண்டு ஒழுகும் நாளில், மக்கட்செல்வம் இல்லாமையால், அக்குறை தீர்த்தருளுமாறு திருக்குறுங்குடியில் உள்ள எம்பெருமானை வேண்டினர். அப்பெருமான் திருவருளால் அவர்கட்குப் புதல்வராய் வைகாசி மாதம் விசாகநக்ஷத்திரத்தில் ஸ்ரீ சடகோபர் அவதரித்தார்.
ஸ்ரீ சடகோபர் பிறந்த நாள் தொட்டுப் பால் உண்ணுதல் முதலிய மக்கள் இயல்புகளுள் ஒன்றும் இன்றி இருந்தனர். அது கண்ட பெற்றோர் மனம் வருந்தினர். குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாளில் மாறன் என அக்குழந்தைக்குப் பெயரிட்டு, அவ்வூரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற பிரான் திருமுன்பு அக்குழந்தையை விட்டனர். அக்குழந்தை, அங்குள்ள ஒரு புளிய மரத்தடியிற்சென்று அமர்ந்தது. (நம் ஆழ்வார் அப்புளியமரத்து அடியில் எழுந்தருளியிருந்ததனால் அதனைத் ழுதிருப்புளியாழ்வார்ழு எனப் பின்னுள்ளோர் சிறப்பாக வழங்குவாராயினர்.) அவ்வாறு சென்று அமர்ந்த குழந்தையாகிய நம்மாழ்வார் பதினாறு ஆண்டு வரையில் கண் விழித்துப் பார்த்தல், பேசுதல் முதலியன ___________________________________________________ 1. பெருந்தொகை, 1824.
|