திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
32

களையும் அடைவதில்லை. இறைவன் வினை காரணமாக இல்லாமல் தன் விருப்பினால் இவ்விரண்டனுள்ளும் அமைந்திருத்தலால், இவ்விரண்டின் தன்மைகளையும் அவன் அடைவதில்லை. உயிர் மூலப் பகுதியின் விகாரமாகிய உடம்பைத் தனக்கு உடம்பாகக் கொண்டிருத்தல் போல, இறைவன் உடம்பு, உயிர் ஆகிய இரண்டையும் தனக்கு உடம்பாகக் கொண்டிருக்கிறான். இவ்வாறு, இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பது வைணவ சமயக் கொள்கையாகும். இக்கொள்கையை விளக்க வைணவ சமயத்துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்துக் கையில் ஏந்தியுள்ளார்கள். இதனை ‘முக்கோல்’ என்று கூறுவர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வழங்கிய வழக்கமாய் உளது. தொல்காப்பியர்,

        “நூலே கரகம் முக்கோல் மணையே
        ஆயுங் காலை அந்தணர்க் குரிய”


என அந்தணர்க்கு முக்கோல் கூறினர். இங்கே அந்தணர் எனப் பட்டவர், முற்றத் துறந்த முனிவராவர். தொல்காப்பியத்தில் பார்ப்பார், அறிவர், அந்தணர், தாபதர் எனப் பல சொற்கள் வழங்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரே வகையாரைக் குறிக்கவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாரைக் குறிக்கவுமில்லை பார்ப்பார் வேறு, அறிவர் அந்தணர் வேறு. அறிவர் அந்தணர் இவர் முற்றத் துறந்தவராக, மனத்தையடக்கி இறைவனையே எண்ணும் இயல்பினராக, மூன்று கால நிகழ்ச்சிகளையும் அறிபவராக உள்ளனர். தாபதர், அறிவர் நிலையை அடைதற்குத் தொடக்கமாகவுள்ள தவத்தை மேற் கொண்டு ஒழுகுபவராய்க் காணப்படுகின்றனர். பார்ப்பார், வேதம் ஓதுதல் மட்டும் உடையவராய்க் (இந்நிலைகட்கு வாராதவராய்க்) காணப்படுகின்றனர். வேறு சில சொற்களும் உள்ளன; அவை பொதுவாய் உள்ளன.

        “எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடைநீழல்
        உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற
முக்கோலும்
      
 நெறிப்படச் சுவல்அசைஇ வேறோரா நெஞ்சத்துக்
        குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை
யந்தணீர்
!”

என்பது கலித்தொகைச் செய்யுட்பகுதி. தொல்காப்பியத்தாலும் இக்கலித்தொகைச் செய்யுட்பகுதியாலும் கூறப்பட்ட அந்தணர் ஒரு நிலையுடையவரேயாதல் காணலாம். முக்கோல் ஏந்திய அவ்வந்தணர்