திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
33

ஐம

ஐம்பொறிகளையும் வென்றவர்; மனம் இறைவனையல்லாது வேறு ஒன்றையும் விரும்பாத இயல்பினர் என்பது தெளிவாகின்றது.

    இவ்வந்தணர்கள் முக்கோல் ஏந்தக் காரணம் யாது? இம் முக்கோலை ‘உரைசான்ற முக்கோல்’ எனக் கலித்தொகைச்செய்யுட் பகுதி புகழ்ந்து கூறுகின்றது. ‘உடம்பு, உயிர், இறைவன் எனத் தத்துவம் மூன்று என்னுங் கொள்கையுடையேன்’ எனத் தம்முடைய தத்துவக் கொள்கையினைக் குறிக்க முக்கோல் ஏந்தினர் எனக் கொள்வதே பொருத்தமாகும். தத்துவ வேறுபாடே சமய வேறுபாடுகட்கு முக்கியக் காரணமாகும். இம்முக்கோலைப் பற்றிய குறிப்பு நெய்தற்கலியிலும் முல்லைப்பாட்டிலும் வந்துளது.

    இவ்வாறு இன்றளவும் வைணவ சமயக் கொள்கைகளாகவுள்ள சித்து, அசித்து, ஈசுவரன் எனத் தத்துவம் மூன்று என்பதும், அதற்கு அறிகுறியாக முக்கோல் ஏந்துதலும் தமிழ் நாட்டின் மிகத் தொன்றுதொட்ட வழக்கமாதல் காண்க.

    இவ்வாறு முக்கோலேந்திய துறவிகளைப் ‘பகவர்’ எனக் கூறுதல் வழக்கம். தஞ்சைவாணன் கோவை முதலிய கோவைகளெல்லாம் இத்தகைய துறவிகளை ‘முக்கோற்பகவர்’ என்றும், ‘மிக்கோர்’ என்றும் கூறுகின்றன, தத்துவஞானமும் இறைவனிடத்தன்பும் ஆகிய இரண்டும் இன்றியமையாதவை; தத்துவ ஞானத்தின் பயன் இறைவனிடத்து மாறாத பத்தியுடையராதல் என்பர். ஆயினும், இவ்விரண்டும் எல்லாரிடத்தும் சமமாய் இருப்பதில்லை தத்துவஞானத்தில் மனம் அதிகம் பதிந்தவராய்ச் சிலர் இருப்பர்; பத்தியில் மனம் மிகப் பதிந்தவராய்ச் சிலர் இருப்பர். இருவரும் துறவுள்ளமுடையவராயிருப்பர். தத்துவ ஞானத்தில் மனம் மிக ஊன்றியவர் பகவர் என்றும், பத்தியில் மனம் மிக ஊன்றிய இல்லறத்தார் அடியார் என்றும் கூறப்படுவர். ஆழ்வார் இவ்விரு திறத்தாரையும் திருவாய்மொழியிற்கூறுகின்றார்.

        “மேவித் தொழுதுய்ம்மின் நீர்கள் வேதப் புனித விருக்கை
        நாவிற்கொண் டச்சுதன் தன்னை ஞான விதிபிழை யாமே
        பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
        மேவித் தொழும்
அடி யாகும் பகவரும் மிக்க துலகே.”

(5. 2: 9.)

என்ற பாசுரத்தில் ஆழ்வார் இவ்விரு திறத்தாரையும் கூறுதல் காண்க. தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி வரும் முக்கோற்பகவரையே இங்குப் பகவர் என்கிறார்.