திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
59

நடத

நடத்திவரல் ஆயினர். பெரிய பெருமாளும், ‘உயர்வற உயர்நலம்’ என்றது முதல் ‘அவாவறச் சூழ் அரியை’ என்றது முடிய உள்ள திருப்பாசுரங்கட்கு இவர் உபந்யசிக்கிற உபந்யாசத்தைக் கேட்டருளி, மிகவும் மனம் உவந்து, ‘முப்பாத்தாறாயிரப்பெருக்கர்’ என்ற திருப்பெயரையும் இவருக்குச் சாற்றியருளினார்.

    பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமல் ஆள்கின்ற தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் தாம்மாணாக்கராய் இருந்த கேட்டமையால், மாணாக்கன் என்ற முறையில், ஈடு முப்பத்தாறாயிரம் முடிவு பெறுகின்ற அன்று, ‘திருவாய்மொழிப்பிள்ளை என்கிற சிறப்புப் பெயர் பூண்ட திருமலையாழ்வாருடைய சீர் அருளுக்கு ஏற்ற கலமாக உள்ளவரும், ஞானம் பத்தி முதலானகுணங்கட்குக்கடல் போன்றவரும், எம்பெருமானாரிடத்தில் மிக்க அன்பு வாய்ந்தவருமான மணவாளமாமுனிவரை நான் வணங்குகிறேன்,’1 என்ற பொருள் அமைந்த வடமொழிச் சுலோகம் ஒன்றையும் இயற்றினார் என்று வரலாறு கூறுகின்றது. இவ்வரலாற்று உண்மையானும், மற்றும் பல காரணங்களாலும் இவ்வியாக்கியானம் அவனுக்கும், அவன் அடியார்கட்கும் திருவாய் மொழியினைப் போன்றே ஆரா அமுதாய், இன்பமாரியாய் எங்ஙனே சொல்லினும் இன்பம் பயப்பதாய் இருப்பது ஒன்றாகும் என்று கொள்க.2

    ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி
    தாழ்வியாதும் இல்குரவர் தாம்வாழி - ஏழ்பாரும்
    உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி
    செய்யமறை தன்னுடனே சேர்ந்து.

 

1. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
  யதீந்த்ர ப்ரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்.

  என்பது அத்தனியன்.

2. “தென்னா என்னும் என்னம்மான் திருமாலிருஞ் சோலையானே”
  (10. 7: 5.) என்றும், “பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துன் இப்பத்தும்,
  கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்றும்,
  “தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன், அண்டத்தமரர்
  பெருமானடியேனே” (9. 4: 9.) என்றும், “அடியார்க்கு இன்பமாரியே”
  (4. 5: 10) என்றும் வருவனவற்றைக் காண்க.