பக்கம் எண் :


110 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     செங்கண்மாதர் தெளித்த குங்குமக் குழம்பு - குங்குமக் குழம்பைத்
தெருவிற்றெளித்தல் அழகின் பொருட்டு. அளறு - குழம்பினால் உண்டாகிய
சேறு. அளறு புலர்த்தும் - தெருவிற் செல்வாரைச் சேறு இழுக்காமல், துகள்,
புலர்த்தி உபகரிக்கும். தம்மால் விளைந்த இடையூற்றைத் தாமே போக்குதல்
என்ற அறவினையின் குறிப்பாம். “செழுந்தாதே துகளன ... சேறே யிழுக்கின”
(திருக்குறிப்பு - 108) என்றும் பின்னரும் சேர்த்துக் கூறுவது இங்குக்
காணத்தக்கது.

     கோதை - மாலை. பொங்குதல் - மிகுதல். துகள் - மாலையின்
பூக்களிலிருந்து உதிரும் பூந்தாது; மகரந்தப்பொடி. இது அதிசயோத்தி அணி
என்பர். இறைவன் திருவடி தூது நடந்த மணத்தினைக் குங்குமக் குழம்பு
சாத்தி வணங்கினார் என்ற குறிப்பும் மேற்பாட்டைத் தொடர்ந்து
தோற்றுவதாம். 7

93. உள்ள மாருரு காதவ? ரூர்விடை  
  வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
8

     (இ-ள்.) உள்ளம் ஆர் உருகாதவர் - யாவர்தாம் மனமுருகாதவர்கள்;?
ஊர்விடை ... பூவைகள் - இடபத்திலே எழுந்தருளி வரும் தியாகேசரது
திருவாரூரின் தெருப் பக்கங்களிலெல்லாம் தெளியும் ஓசைத்
திருப்பதிகங்களைப் பசிய கிளிகள் பாடுவன; அவற்றை நாகணவாய்ப்
பறவைகள் கேட்பன.

     (வி-ரை.) ஆரூர் வீதி மருங்கெலாம் திருப்பதிகங்கள் கிள்ளை பாடுவ
- பூவை கேட்பன எனில், யார் தாம் உள்ள முருகாதவர் உளர்? என்க.

     ஊர்விடை வள்ளலார் - விடை ஊர் வள்ளலார் என மாற்றுக.
விடையூர்ந்து வரும் வீதிவிடங்கராகிய தியாகேசர். வீதிச் சிறப்பைச் சொல்லி
வருகின்றாராதலின் அதற்கேற்ப ஊர்விடை வள்ளலார் என்று கூறினார்.

     வள்ளல் - வரையாது கொடுப்போன். அருளாலும் பொருளாலும்
வரையறையின்மையின் இவரே உண்மை வள்ளலாவர். பிறர்க்கெல்லாம் இது
உபசார மொழியேயாம் என்பது கருத்து. இதனாலே வண்மைக்கிறைவர் -
தியாகேசர், தியாகராசர் என்று இவர்க்குப் பெயராயிற்று.

     மருங்கு எலாம் - மேலே சொல்லிய வீதிகளின் பக்கமெல்லாம்.

     தெள்ளும் ஓசை - தெளிந்த ஓசையுடைய; தெளிவிக்கும் ஓசையுடைய
என்றுமாம். தெள்ளுதல் - தூக்கி எறிதல் என்று கொண்டு, சொல்வோர்
கேட்போர்களது வினைகளை ஓடத்துரக்கும் ஓசை என்றலுமாம். இது தெள்ளு
என்ற சிறுவர் விளையாட்டினுள் வழங்குதல் காண்க. “உள்ளத் துறுதுய
ரொன்றொழியா வண்ணமெல்லாந், தெள்ளுங்கழலுக்கே சென்றூதாய்
கோத்தும்பீ” - என்ற திருவாசக ஆட்சியும் காண்க.

     திருப்பதிகங்கள் - சைவ சமய பரமாசாரியர்களான நான்கு
பெருமக்களும் காரைக்காலம்மையாரும் அருளியவை. பெரும்பான்மை பத்துப்
பாடல்களாகியதனாற் பதிகம் எனப் பெற்றன. இப்பெயர் இப்பாடல்களுக்கே
காரண இடுகுறியாக வழங்குவது உயர்ந்தோர் வழக்கு. உயர்ந்தோர்
மரபின்மையால் ஏனையோர் பாடல்களுக்கு இப்பெயர் வழங்குதல் பொருந்தா
என்க.

"வழக்கெனப்படுவ துயர்ந்தோர் மேற்றே, நிகழ்ச்சி யவர்கட் டாகலான"

என்பது இலக்கணம். திருக்கோயில் - திருவாயில் என்பனபோல
இவற்றிற்கும் திருப் பதிகங்கள் என்று உரைத்தலே மரபா மென்று காட்டினார்
ஆசிரியர்.

     இவை, சொல்வார்க்கும் கேட்பார்க்கும் வினைபோகும் என்பதை,
“... தமிழ் சொல்லுவார்க்கும் மிவைகேட்பவர்க் குந்துயரில்லையே” -
திருநாகை - செவ்வழி - (11). "தானுறுகோளு நாளும் மடியாரை வந்து
நலியாத வண்ண முரைசெய், ஆன சொன்மாலை" - (கோளறு பதிகம்),
எனும் திருவாக்குக்களின் பிரமாணங்களால் உணர்க.