பக்கம் எண் :


112 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

94. விளக்க மிக்க கலன்கள் விரவலாற்,  
  றுளக்கில் பேரொலி யாற், றுனனு பண்டங்கள்
வளத்தொ டும்பல வாறு மடுத்தலால்,
அளக்கர் போன்றன வாவண வீதிகள்.
9

இடைநகரில் கடைவீதிக்கும் கடலுக்கும் சிலேடை வகையால் ஒப்புமை.

     (இ-ள்.) (சிலேடை விரிவு) விளக்கம்...விரவலால் - (1) (ஆவண
வீதிகள்) ஒளி மிகுந்த ஆபரணங்கள் பொருந்தியிருத்தலால்; (2) (கடல்)
பல்வகை விளக்குகள் கொண்ட மரக்கலன்களை யுடைமையாலே; துளக்கில்
பேரொலியால் - (1) (ஆவண விதிகள்) அசைவற்ற பெருஞ்சத்தங்களால்; (2)
(கடல்) அலைகளின் அசைதலினாலே உளதாம் பேரிரைச்சலினால்; துன்னு
பண்டங்கள் ... மடுத்தலால் (1) (ஆவண வீதிகள்) நெருங்கிய பற்பல
சரக்களும்பிறவும் வளம்பெறப் பற்பல வகைகளாலே கொண்டிருத்தலினாலே;
(2) (கடல்) மலை காடு நாடு முதலியபல இடங்களின் பண்டங்களையும் வாரிக்
கொணர்ந்த வளங்களுடன் பல ஆறுகள் வந்து சேர்தலாலே; அளக்கர் ...
ஆவண வீதிகள் - கடைவீதிகள் கடலைப் போன்றன.

     (வி-ரை.) விளக்கம்- ஆவண வீதிக்கு ஒளி என்றும், கடலுக்கு
விளக்குக்கள் என்றும் கொள்க. மரக்கலங்கள் இரவிலும் செல்வன ஆதலின்
ஒளிமிகும் பெருவிளக்குக்களைக் கொண்டிருந்தன. அவற்றிற்காகக்
கரைகளிலும் பலவகைப் பெருவிளக்குக்கள் வைக்கப் பெற்றிருத்தலின்
அவற்றோடு விரவிய மரக்கலங்கள் என்பதுமாம்; கலங்கரை விளக்கம் என்ற
வழக்கும் காண்க. இவ்விளக்கங்களைப் பற்றிப் பட்டினப்பாலை யுள்ளே
காணலாம். முற்காலத்துத் தமிழ் மக்கள் கடற்செலவுங் கொண்டு வாணிபத்திற்
சிறந்திருந்ததனைச் சரிதங்கள் பேசும்.

     கலன் - ஆவண வீதிக்கு அணிகலன் என்க; கடலுக்கு மரக்கலன்
என்க.

     துளக்கில் - ஆவண வீதிக்கு துளக்கு இல் - நீங்காத - நிலைத்த
என்றும், கடலுக்குத் துளக்கினாலே அசைதல் - அலைகளினாலே என்றும்
கொள்க. துளக்கில் (பேரொலி) ஆவணவீதியிற் பண்டமாற்றின் பொருட்டுப்
பல தேயத்தவரும் பல பண்டங்களும் பல கடைகளும் பொருந்தியதால்)
மாறாத - இனம் பிரித்தறிய முடியாதபடி கலந்த ஓரிரைச்சல். சந்தையிரைச்சல்
என்ற வழக்கும் காண்க. பட்டினப்பாலையில் இவ்வகைகளின் விவரங்
காணலாம். இந்நகர். சோழர்களது தலைநகராதலின் (நமது சென்னைபோல்)
ஆவணவீதிச் சிறப்புப் பெரிதாயினமை குறிக்கப் பெற்றதாம்.

     துன்னு பண்டங்கள் - ஆவண வீதிக்கு - மணி - பொன் - நெல்
முதலிய விளைவுப் பொருள்கள் - உப்பு முதலிய பல பண்டமாற்றுச்
சரக்குகள். வளத்தொடும் பலவாறு மடுத்தல் - வளம்பெற - கண்ணுக்குப்
பார்வையாகப் பலவகைகளிலே வைத்து வாங்கப்பெறுதல் எனவும், கடலுக்கு
- மலைபடு பண்டம் - காடுபடு பண்டம் - நாடுபடு பண்டங்களின்
பலவளங்களையும் வரும் வழியில் வாரிக்கொண்டு ஆறுகள் கடலிலே சேர்தல்
- எனவும் கொள்க. பலவாறு என்றும், பல ஆறு என்று பிரித்தும் உரைக்க.

     கலன் - கலம் - கலனென வரும். “கலங்கொள் கடனாகைக்
காரோணத் தானே“ (திருஞான - குறிஞ்சி - 8) “கலஞ்சமைத் தற்கு
வேண்டும் கம்மியர்“, “பொருகடற் கலன்கள் போக்கும் புகழினான்“ -
காரைக்காலம்மையார் புராணம் (33 - 37) முதலியவைகளையும், சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களையும் நோக்குக. 9

95. ஆர ணங்களே யல்ல மறுகிடை
  வார ணங்களு மாறி முழங்குமாற்;