பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு117

Periya Puranam
     துன்னு வெங்கதிரோன் வழித்தோன்றினான் - துன்னு வெங்கதிரோன்
- சூரியன் வெம்மை துன்னு கதிரோன் என்க. துன்னுதல் - நெருங்கிப்
பொருந்துதல், ஏழு நிறங்களும் சேர்ந்து வெண்மை ஒன்றேயாய்த் துன்னியதும்,
அதனுடன் வெப்பத்தையும் கொண்டதுமான கதிர் என்றுரைத்தலும் ஒன்று.
செங்கதிரோன் என்பதும் பாடம். வழித்தோன்ற லென்றது சோழர்கள் சூரியன்
மரபினராதலைக் குறிப்பிட்டதாம்.

     மன்னு சீர் அநபாயன் வழி முதல் - மன்னு சீர் என்றது தம்
அரசரை வாழ்த்தியவாறு; நிகழ்காலத்து நிலைபெற்றிருப்பதுடன் எதிர்காலத்தும்
மன்னும் சீர் என்பதாம். இது இப்புராணம் பாடக் காரணரா யிருந்ததுபற்றி
இப்புவியரசர்க்குக் கவியரசர் காட்டும் நன்றியுமாம். முன்னர்க் கூறியனவும்
பின்னர்க் கூறுவனவும் இவ்வாறே காண்க. சோழர்களது சரிதங்கூறும்
இடங்களில் எல்லாம் ஆசிரியருக்கு அநபாயரது நினைவு தோன்றுகின்றது.
அரசைத் தாபித்து வைத்தல் அமைச்சர்க்கு இயல்பும், நீதியும் நன்றியுமாம்
என்க.

     வழி - முதல் - இது மனுவேந்தர் சிறப்பை அறிவிக்கும் ஒருவகை.
ஆரூர்ச் சிறப்பை மனுச்சோழர் செய்தியினால் அறியவைக்கும் ஆசிரியர்,
அவ்வரசரது மரபுச் சிறப்பை அந்நாளின் நிகழ்காலச் செய்தியாகிய
அநபாயரது சிறப்பினால் அறியவைத்தல் காரணமாகக்கொண்டு இங்கு
மனுவேந்தரை அநபாயர் வழிமுதல் என்றார். மனுவை இடையில் வைத்து
அவர் கதிரோன் வழிவந்தவர் என்றும், அவர்பின் அவரது வழி வந்தவர்
அநபாயர் என்றும் கூறினார். மனுச்சோழரின் மரபின் தொடக்கப்
பெருமைக்காகக் கதிரவனைச் சொன்னாரேனும், அச்சிறப்பைவிட
அநபாயரைத் தம்வழியிலே வரப்பெற்றதே மனுவேந்தர்க்கு மிகச் சிறப்பைத்
தருவதென்பார் தோன்றினான் என்பதனோடு சேர்த்து வழிமுதல் என்றுங்
கூறினார். 13

99. மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்  
  கண்ணு மாவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண வியற்றினான்.
14

     (இ-ள்.) மண்ணில்...காவலான் - (அவ்வேந்தன்) இந்நிலவுலகில் வாழும்
எல்லா உயிர்களையும் கண்ணையும் உயிரையும்போலக் காவல் செய்தான்;
விண்ணுளார்...இயற்றினான் - (இவ்வாறு மண்ணவர்க்குப் பயன் செய்தலே
யன்றி) அம்மேலுலகில் விண்ணவர்க்கும் அவர் மகிழும்படி பல
வேள்விகளைச் சிறப்பாகச் செய்தனன்.

     (வி-ரை.) அவ்வேந்தன் - என்ற எழுவாய் மேற்பாட்டிலிருந்து
தொடர்ந்து கொள்ளப்பட்டது. இவ்வாறே வருகின்ற இரண்டு பாட்டுக்களிலும்
அதனையே தொடர்ந்து கொண்டு வினைமுடிபு காண்க.

     காவலான் - இயற்றினான் - வேந்தன் - காவலான் - இயற்றினான் -
என்க. இவ்வாறன்றிக் காவலானாகிய வேந்தன் இயற்றினான் எனக் காவலான்
என்பதனை வினையாலணையும் பெயராக்கி உரைத்தலுமாம். அதனையே
முற்றெச்சமாக்கிக் காவலானாகி இயற்றினான் - காவல் செய்வதற்காக என்று
உரைப்பினுமாம்.

     வாழ்தரு மன் உயிர் வாழ்தரும் - வாழ்கின்ற. மன் - நிலைத்த -
மண்ணில் வாழ்தரும் நித்தமாகிய உயிர் - என்று உரைக்க. வாழ்தரும் - ஒரு
சொல். இவ்வாறன்றி, (இவ்வரசன்) மண்ணில் - (தேவ உலகத்திலே,
தேவர்களுக்கு விரும்யியது கொடுக்கும் கற்பக மரம்போல) நிலவுலகத்திலே,
வாழ் தரு - வாழும் கற்பகம்; மன் உயிர்க்கெலாம் இவ்வுலகத்து
உயிர்க்கெல்லாம் கேட்டது கொடுக்க என்று பிரித்து உரைத்தலும் ஆம். முன்
97-வது பாட்டில் அழகார் தரு என்ப