பக்கம் எண் :


116 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     (வி-ரை.) நிலமகட்குத் திலகம் போன்றதாகிய, செம்பியர்
வாழ்பதியாகிய அலகில் சீர்த்திருவாரூர் மலர் மகளுக்குத் தாமரைபோல
மலர்ந்து விளங்கும் என்று கூட்டுக.

     நிலமகள்
- பூமிதேவி. மலர்மகள் - சீதேவி; இலக்குமி. இந்நகர்
நிலமகளுக்கு இருப்பிடமும் ஆம் என்றதாம்.

     அழகு ஆர்தரு நீள்நுதல் அழகு நிறைந்து நீண்ட நெற்றி எனவே
நிலமாய மகளுக்குச் சோழ நாடு நீண்ட நெற்றி போன்றும், திருவாரூர் அதன்
திலகம் போன்றும் உள்ளன என்க. நுதல் என்றதனால் சோழ நாடு என்பதை
வருவித்துக் கொள்க.

     செம்பியர் வாழ் என்றதனாலும், (அக்குறிப்புப் பற்றி) நீள் என்றதனாலும்
நுதலின் நீளமும் நாட்டின் நீளமும் குறித்தவாறு. நுதல் - திலகம் -
புருவநடுவாகிய தியானத்தானத்தைக் குறிக்கும். இத்திருநகர் நிலமகளின்
திலகம் என்றது நிலத் தன்மை வாய்ந்து எழுந்து, அவளுக்குத் தியானத்தலம்
போன்ற புற்றினிடமாக இறைவன் எழுந்தருளியிருக்கும் குறிப்புப் பற்றி என்க.

     அழகு ஆர்தரு - அழகு நிறைவிக்கும். தரு - (கற்பகம்) போல்வதும்,
நுதல் - திலகம் ஒப்பதும் என்று பிரித்து உம்மை விரித்து உரைப்பதுமாம்;
தரு
- விரும்பியதெல்லாம் கொடுத்தல்போல - இந்நகரும் வேண்டியவற்றை
எல்லாம் நிலத்தில் வாழ்வாருக்குத் தருதலான் (கொடுக்கும் தியாகேசர்
எழுந்தருளியிருத்தலால்) கற்பகம் போலும் என்க. செம்பியர் - சோழர்.

     மலர் மகட்கு வண்டாமரைபோல் மலர்ந்து. தாமரையிற்போல
இத்திருநகரில் என்றும் இலக்குமி வழிபட்டு உறைதலால் மலர்ந்து என்றார்.
மலராள் வழிபட்டமை முதற்பாட்டிலே கூறினார். மலர்மகள் சரச்சுவதி -
என்பாருமுண்டு.

     நிலமகள் - மலர்மகள் - இருவரையும் நாயகிகளாக உடைய திருமால்
விரும்பி வழிபட்ட தலமாதலாலும், தமது மார்பில் திருப்பாற்கடலில்
தியானப்பொருளாய் வைத்து வழிபட்ட தியாகேசர் எழுந்தருளி யிருத்தலாலும்,
திருமாலின் நாயகிகளுக்கும் சிறப்புச் செய்வதாம் என்பதும் குறிப்பாகும்.

“பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள் வானுள்ளத் தானும்“

என்ற தேவாரமுங் காண்க. 12

98. அன்ன தொன்னக ருக்கர சாயினான்  
  துன்னு வெங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீரந பாயன் வழிமுதன்
மின்னு மாமணிப் பூண்மனு வேந்தனே.

13

     (இ-ள்.) அன்ன ... ஆயினான் - மேலே சொல்லிய
அத்தன்மைகளெல்லாம் பொருந்திய பழமையான திருவாரூர்த் திருநகரத்திலே
அரசனாய் வீற்றிருந்தான்; துன்னு வெங்கதிரோன்...வேந்தனே - நெருங்கிய
வெங்கதிரவனாகிய சூரியனது மரபிலே தோன்றியவனும், நிலைபெற்ற
சிறப்புடைய அநபாயச் சக்கரவர்த்தியின் வழியிலே முன்னவனும் ஆகிய
விளங்குகின்ற ஆபரணங்களை யணிந்த மனுவேந்தனேயாம்.

     தோன்றினான் - வழி முதலாகிய - வேந்தன் - நகருக்கு அரசு
ஆயினான் என்க.

     (வி-ரை.) தொல் நகர் - திருவாரூர். இதன் தொன்மை முதற்பாட்டிலே
உரைக்கப் பெற்றது. அதிற் சொன்னதை அனுவதித்து இங்கும், 96-வது
பாட்டிலும், தொன்னகர் என்றமை காண்க. திருவாரூரைச்
சொல்கின்றபோதெல்லாம் ஆசிரியருக்கு அதன் தொன்மையே நினைவுக்கு
வருகின்றது. தொன்மையில் திளைத்தல் தமிழர்களது சிறப்பு இயல்புகளில்
ஒன்றென்பது ஆசிரியர் குறிப்பு. புதுநகர்களைத் தேடிப் பலவகைகளிலும்
அல்லற்படுவோர் இக்கருத்தை நோக்குவாராக.